டி.எம்.எஸ். என்கிற இமயத்துடன்..!

ன் இனிய நண்பரும், பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த முன்னாள் மாணவருமான இயக்குநர் விஜயராஜைப் பற்றி முன்பே ஒருமுறை இந்த வலைப்பூவில் எழுதியுள்ளேன்.

என் மனம் கவர்ந்த பாடகர் ஏழிசை மன்னர் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை ஒரு மெகா சீரியலாக எடுத்துக்கொண்டு இருக்கிறார் அவர். ரஜினியை பேட்டி எடுத்து முடித்ததும்... ஏ.ஆர்.ரஹ்மானைப் பேட்டி எடுத்து முடித்ததும்... இளையராஜாவை பேட்டி எடுத்து முடித்ததும்... என சீரியலின் ஒவ்வொரு வளர்ச்சியையும் என்னோடு உடனுக்குடன் பகிர்ந்து கொள்வார். நாங்கள் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் மூன்று நான்கு மணி நேரத்துக்கு மேல் பாடகர் டி.எம்.எஸ்ஸின் பெருமைகளைப் பற்றியே பேசிக்கொண்டு இருப்போம். அதைத் தாண்டி எங்களுக்குப் பேச வேறு விஷயம் இருக்காது; தேவையும் படாது!

சென்ற வாரத்தில் அது போல் ஒரு நாள் போன் செய்திருந்தார். இந்த சீரியலுக்காக இந்தி இன்னிசைக் குயில் லதா மங்கேஷ்கரையும் டி.எம்.எஸ்ஸையும் சந்திக்க வைத்துப் பேச வைத்திருக்கிறாராம். இந்த மகிழ்ச்சியான செய்தியைச் சொல்லிவிட்டு, “மும்பையிலிருந்துதான் கிளம்பிட்டேன். நாளை சனிக்கிழமை மாலைக்குள் சென்னையில் இருப்பேன். வந்ததும் மறுபடி உங்களோடு தொடர்பு கொள்கிறேன்” என்றார்.

“பிரயாண அலைச்சல்ல வந்திருப்பீங்க. பேசாம போய் ரெஸ்ட் எடுங்க. ஞாயிற்றுக் கிழமை நிதானமா பார்த்துக்கலாம்!” என்றேன்.

“இதிலென்ன அலைச்சல் சார்? நானா மூச்சிரைக்க ஓடி வரப் போறேன்? ரயில்தானே சுமந்துக்கிட்டு வருது! நீங்க டி.எம்.எஸ்ஸின் எத்தனைப் பெரிய ரசிகர்னு எனக்குத் தெரியும். வாங்க, எடுத்த பதிவுகளைப் போட்டுக் காண்பிக்கிறேன்” என்றார்.

அதன்படியே, சென்னை வந்த மறு நிமிஷமே தொடர்பு கொண்டார். “சார், இதை லேபுக்குப் போய் பிரின்ட் போட்டுக்கிட்டு நேரே ஸ்ரீராம் ஸ்டுடியோ வந்துடறேன். நீங்களும் வரீங்களா, எப்படி வந்திருக்குன்னு பார்க்கலாம்!” என்று ஆர்வத்துடன் அழைத்தார். கிளம்பிப் போனேன். கோடம்பாக்கம் பவர் ஹவுஸில் இறங்கிக் கொண்டேன். நல்ல மழை! பைக்கில் வந்திருந்தார். எனக்காக ஆட்டோ தேடினார். “அட, வேணாம் விடுங்க! உங்க பைக்லயே போயிடலாம்! மழையில நனைஞ்சா ஒண்ணும் ஊசிட மாட்டேன்” என்று பில்லியனில் தொற்றிக் கொண்டேன்.

நேரே ஸ்டுடியோ போனோம். எல்லாம் தயாராக இருந்தது. மும்பையில் தான் எடுத்த லதா மங்கேஷ்கர், முகமது ரஃபி சம்பந்தப்பட்ட ஒளிப்பதிவுகளை ஒரு தொலைக்காட்சியில் போட்டுக் காண்பித்தார். கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரப் பதிவு. எடிட்டிங் செய்யப்படாத, பின்னணி இசை, கிளிப்பிங்ஸ் எதுவும் சேர்க்கப்படாத ஆரம்ப, புத்தம் புதிய பதிவு. (டி.எம்.எஸ்., லதா மங்கேஷ்கர் சந்திப்பு பற்றி என் இன்னொரு வலைப்பூவான ‘உங்கள் ரசிக’னில் எழுதியுள்ளேன். 30.12.09 ஆனந்த விகடன் இதழில் வெளியான கட்டுரை அது!)

விஜயராஜ் என்னைவிட வயதில் 12 வயது இளையவர். ஆனால், என்னைவிட டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகராக இருக்கிறார். இல்லையென்றால், டி.எம்.எஸ். பற்றிய ‘இமயத்துடன்...’ என்கிற இந்த மெகா சீரியலை ஒரு தவம் போல் கடந்த பத்து வருடங்களாக முழு மூச்சுடன் இயக்கிக்கொண்டு இருக்க மாட்டார்.

“ஒரு பாடகரின் வரலாற்றை ‘மலரும் நினைவுகள்’ போன்று பதிவு செய்ய இத்தனை நீண்ட, நெடிய காலம் தேவையா?” என்று கேட்டேன்.

“வழக்கமா எல்லாரும் செய்யற மாதிரி இங்கேயே ஏழெட்டு வி.ஐ.பி-க்களைப் பேட்டியெடுத்து, எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கருக்கு டி.எம்.எஸ். பாடிய பிரபலமான பாடல் காட்சிகளைச் சேர்த்து, ‘மலரும் நினைவுகள்’னு ஒப்பேத்த நான் விரும்பலை. டி.எம்.எஸ். ஐயா எங்கே பிறந்தார், எந்தக் கோவில் வாசலில் இந்தி டியூஷன் நடத்தினார், முதன்முதல்ல எந்த ஸ்டுடியோவில் பாடினார், எந்தப் படத்துல முதல்ல நடிச்சார்னு ஒண்ணு விடாம ஆதியோடந்தமா அவரது ஒவ்வொரு வளர்ச்சியையும், அது தொடர்பான இடங்களுக்கே அவரை அழைச்சுட்டுப் போய் பதிவு செஞ்சிருக்கேன். சரோஜாதேவி, எஸ்.எஸ்.ராஜேந்திரன்னு அந்தக் காலத்து சினிமா நட்சத்திரங்கள்லேர்ந்து ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலுன்னு இந்தக் காலத்து ஸ்டார்கள் வரைக்கும், கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல டி.எம்.எஸ்ஸோடு பேச வெச்சுப் பதிவு பண்ணியிருக்கேன். தவிர, வழக்கமா நமக்கெல்லாம் தெரிஞ்ச பாடல்கள் இல்லாம, இதுவரைக்கும் தெரியாத பாடல்களையெல்லாம் இதுக்காகத் தேடித் தேடிப் போய் சேகரிச்சுக் கொண்டு வந்து இதுல சேர்த்திருக்கேன். இதுல ஒரு வேடிக்கையான வேதனை என்னன்னா, இங்கே அருமை தெரியாம நாம தவறவிட்ட பல பாடல்களை சிங்கப்பூர்லயும் மலேசியாவிலயும் உள்ள டி.எம்.எஸ். ரசிகர்கள் பத்திரப்படுத்தி வெச்சிருக்காங்க. ஆகவே, நாலஞ்சு முறை அங்கேயெல்லாம் அலைஞ்சு திரிஞ்சு, அதையெல்லாம் பதிவு பண்ணிக்கிட்டு வந்திருக்கேன்.

லதா மங்கேஷ்கரை எப்படியாவது இந்த சீரியலுக்காகப் பேச வெச்சுடணும்னு பாடுபட்டுக்கிட்டிருந்தேன். அவங்களும் சரின்னு சொல்லிட்டாங்க. ஆனா, நடுவுல அவங்களுக்கு உடம்பு முடியாம போச்சு. அவங்க தேறி வந்து, வரலாம்னு க்ரீன் சிக்னல் கொடுத்தப்போ இங்கே நம்ம டி.எம்.எஸ். ஐயா உடம்பு சரியில்லாம நாலஞ்சு நாள் படுத்துட்டாரு. இப்படியே இது தள்ளிக்கிட்டுப் போய், ஒருவழியா முடிச்சுட்டோம். இத்தனை ஆண்டுக் காலம் இழுத்ததுக்கு அதுதான் காரணம்” என்றார் விஜய்ராஜ்.

மும்பையில் லதா மங்கேஷ்கர் வீட்டுக்குப் போவதற்கு முன்னதாக, இந்திப் பாடகர் முகமது ரஃபியின் வீட்டுக்கும் சென்றிருக்கிறார்கள் இந்தக் குழுவினர். முகமது ரஃபிக்கு ஒரே ஒரு மகன்; இரண்டு மகள்கள். யாரும் சினிமா துறையில் இல்லை. முகமது ரஃபி வாங்கிய விருதுகளையெல்லாம் ஒரு ஹாலில் கண்காட்சி போல் வைத்துப் பராமரித்து வருகிறார் ரஃபியின் மைத்துனர் பர்வேஷ் அஹமது.

அவரும், ரஃபியின் வாரிசுகளும் டி.எம்.எஸ்ஸை அன்புடன் வரவேற்று அவற்றை யெல்லாம் சுற்றிக் காட்டுகிறார்கள். ரஃபி உட்கார்ந்த நாற்காலி, வாசித்த வீணை, ஆர்மோனியம், அவருக்குக் கிடைத்த பிலிம்பேர் விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவற்றை விளக்குகிறார்கள். அவர்களோடு அழகான இந்தியில் சரளமாக உரையாடுகிறார் டி.எம்.எஸ். லதா மங்கேஷ்கரோடும் இந்தியில்தான் உரையாடியிருக்கிறார்.

“இந்திப் பாடகி லதா மங்கேஷ்கரம்மாவுக்குத் தெரியுது நம்ம டி.எம்.எஸ்ஸோட பெருமை. கேட்டதுமே ஒப்புக்கிட்டாங்க. இங்கேயும் சூப்பர் ஸ்டார் ரஜினி கிட்டே பர்மிஷன் கேட்டவுடனேயே, ‘எப்ப வேணா வாங்க விஜய், ரெக்கார்டிங்கை வெச்சுக்கலாம்’னு சொல்லிட்டாரு. அதே போல ஆஸ்கர் நாயகன் ரஹ்மானும் தன் பிஸியான வேலைகளுக்கிடையில டயம் ஒதுக்கி டி.எம்.எஸ். ஐயாவோடு உட்கார்ந்து பேசிக் கொடுத்தாரு. பி.சுசீலாம்மா, ஜானகியம்மா, எஸ்.பி.பி., எம்.எஸ்.வி., வாலி, வைரமுத்துன்னு நான் அணுகிய எல்லாருமே ஆர்வத்தோடு இதுல பங்கெடுத்துக்கிட்டாங்க. ஆனா பாருங்க, சினிமா உலகையே தான்தான் புரட்டிப் போறதா சொல்லிட்டிருக்கிற ஒரு ‘பெரிய’ நடிகர் மட்டும் இப்போ அப்போன்னு அஞ்சாறு வருஷமா இழுத்தடிச்சுக்கிட்டிருக்காரு!” என்றார் வருத்தத்தோடு!

“விடுங்க விஜய், அவர் இல்லேன்னா ஒண்ணும் குடி முழுகிடாது! நீங்க ஒண்ணும் வருத்தப்படாதீங்க. இதுல பங்கெடுத்துக்கக் கொடுத்து வைக்கலியேன்னு வருத்தப்பட வேண்டியது அவருதான்!” என்றேன்.

எதிரெதிர் துருவங்களாக இருந்த இளையராஜா-டி.எம்.எஸ்., டி.ராஜேந்தர்-டி.எம்.எஸ். இவர்கள் பழையனவற்றையெல்லாம் துப்புரவாக மறந்து, மனம் விட்டுச் சிரித்துப் பேசும் காட்சிகள் இந்த சீரியலில் இடம்பெற்றுள்ளன.

தன் செல்ல மகளின் கல்யாணத்தை வெகு விமரிசையாக நடத்தி முடித்து வைத்துவிட்ட தகப்பனார் போன்று பெருமிதத்திலும் பரவசத்திலும் இருக்கிறார் விஜயராஜ். அநேகமாக, ‘இமயத்துடன்’ என்கிற இந்த மெகா சீரியல் வருகிற தமிழர் திருநாளிலிருந்து கலைஞர் தொலைக்காட்சியில் ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

இதை முடிப்பதற்குள் விஜயராஜ் சந்தித்த சோதனைகள், தடைக் கற்கள் எத்தனை எத்தனையோ! நாலைந்து சினிமா வாய்ப்புகள், இரண்டு மூன்று தொலைக்காட்சி மெகா சீரியல் இயக்கும் வாய்ப்புகள் எல்லாவற்றையும், கவனம் சிதறிவிடக் கூடாது என்பதற்காக மறுத்துவிட்டார். இதனால் நட்பு வட்டாரங்களில் இவருக்குப் ‘பிழைக்கத் தெரியாதவர்’ என்று ஒரு பெயர்.

இவரின் தாயார், டி.எம்.எஸ்ஸின் பரம ரசிகை. அவரின் ரசனை அப்படியே மகனுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது. இந்த சீரியலை இயக்குவதற்குப் பூரண ஆசிகள் வழங்கி, இவர் சோர்ந்து போகும் சமயங்களில் எல்லாம் உற்சாக வார்த்தைகள் சொல்லி ஊக்கம் தந்த அந்தத் தாய் சில மாதங்களுக்கு முன் மறைந்தது விஜயராஜுக்குப் பெரிய இழப்பு. அதையும் தாங்கிக்கொண்டு, இந்த சீரியலை வெற்றிகரமாக முடித்திருக்கிறார்.

சரி, அடுத்து என்ன செய்யப் போகிறார் விஜயராஜ்?

“கோலங்கள் புகழ் இயக்குநர் திருச்செல்வம் என் இனிய நண்பர். அவர் புதுசா இயக்கவிருக்கிற ‘மாதவி’ சீரியல்ல எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார். ஹீரோயினுக்கு உதவி செய்யுற நண்பன் கேரக்டர். இன்னும் சரியா தெரியலை. அதுக்கு கால்ஷீட் கொடுத்திருக்கேன். அடுத்து, சினிமா படங்கள் இயக்கும் வாய்ப்பு ரெண்டொண்ணு இருக்கு. அதைச் செய்வேன். பார்க்கலாம், முதல்ல இந்த சீரியல் வெளியாகி நான் யார்னு காட்டட்டும்!” என்கிறார் விஜயராஜ்.

‘இமயத்துடன்’ சீரியலை டி.எம்.எஸ்ஸின் லட்சக்கணக்கான ரசிகர்கள் ஆவலோடு கண்டுகளித்து, மெகா ஹிட்டாக்குவார்கள் என்று எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றி, டி.எம்.எஸ்ஸின் பாட்டுத் திறனுக்கான அங்கீகாரம் மட்டுமில்லை; ரசிக உள்ளத்துடன் இதை இயக்கிய ஓர் இயக்குநரின் உண்மையான உழைப்புக்கான அங்கீகாரமாகவும் அமையும்!

***
சோதனைகளை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதுதான், வெற்றியை நீங்கள் எப்படி அடையப் போகிறீர்கள் என்பதைத் தீர்மானிக்கிறது!
.

சிரித்தார் சிநேகிதி; அழுதேன் நான்!

ருபது ஆண்டுக் காலமாக என் நட்பு வட்டத்துக்குள் இருக்கும் நெருங்கிய சிநேகிதி ஒருவர் (ப்ளீஸ், பெயர் வேண்டாமே!) இன்று எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வந்ததற்கான முக்கியக் காரணம், மறைந்த என் மாமியார் பற்றித் துக்கம் விசாரிப்பது.

மாமியார் மறைந்த அன்றைக்கே தொலைபேசி மூலம் அவருக்குச் செய்தி சொல்லியிருந்தேன். அடுத்த ஒரு வாரத்துக்குள் வருவார் என்று எண்ணியிருந்தேன். வரவில்லை. பிறகு நானும் மறந்துவிட்டேன். நேற்று வேறு ஒரு விஷயத்துக்காக யதேச்சையாக போன் செய்திருந்தார். பேச்சோடு பேச்சாக, “வரேன்னு சொன்னீங்க... அப்புறம் எங்கே ஆளையே காணோம்?” என்றேன், கொஞ்சம் கேலி தொனியில். “வரணும் சார், ஒவ்வொரு ஞாயித்துக் கிழமையும் வரணும்னு நெனைச்சுப்பேன். முடியாம போயிடும். நாளைக் காலையில் கண்டிப்பா வரேன்” என்று தன்மையான குரலில் சொன்னார்.

காலையில் அவர் வரவில்லை. மதியம் மூன்றரை மணி வரையிலும் வரவில்லை. நான் ஓவியர் மாயா வீட்டுக்குக் கிளம்பிப் போய்விட்டேன். அங்கிருந்து நண்பர் மார்க்கபந்து வீட்டுக்குப் போய்ப் பேசிக்கொண்டு இருந்தபோது, வீட்டிலிருந்து போன்கால் வந்தது, அந்தச் சிநேகிதி வந்து எனக்காகக் காத்துக்கொண்டு இருப்பதாக. உடனே கிளம்பிப் போனேன் வீட்டுக்கு.

அவரின் தோற்றமே வித்தியாசமாக இருந்தது. மூன்று மாதங்களுக்கு முன் பார்த்ததைவிட குண்டாக இருந்தார். தலைமுடி வழக்கத்துக்கு மாறாக ஏதோ போல் இருந்தது. அவரின் பருமனை நட்பு ரீதியில் சகஜமாக கேலி செய்து பேச, வாய் வரை வார்த்தை வந்துவிட்டது. ஆனால், கிளம்பிப் போகிறபோது கேட்கலாம் என்று பேசாமல் இருந்துவிட்டேன்.

என் மாமியார் பற்றி என் மனைவியிடம் இதற்கு முன் நெடு நேரம் பேசிக்கொண்டு இருந்திருக்கிறார் அவர். நான் போனதும் என்னிடம் ஓரிரு வார்த்தைகள் அது பற்றிப் பேசிவிட்டு, குழந்தைகளின் படிப்பு பற்றி விசாரித்துவிட்டு, தான் வந்த வேறொரு வேலை சம்பந்தமாக என்னிடம் அரை மணி பேசிவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். அதுவரையில் அவரின் தோற்றத்தைத் தவிர, அவரின் நடையுடை பாவனைகளிலோ, கலகலப்பான பேச்சிலோ, சிரித்த முகத்திலோ எந்தவொரு மாற்றமும் எனக்குத் தெரியவில்லை.

விடைபெறுகிற சமயத்தில், “உங்க கிட்டே ஒரு விஷயம் சொல்லணும். நான் நாளைக்கு ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகப் போறேன். ஒரு சின்ன ஆபரேஷன்” என்றார் அதே சிரித்த முகபாவத்தோடு. நான் வழக்கமாகப் பெண்களுக்கு நடக்கும் டி-அண்ட்-சி ஆபரேஷனாகவோ அல்லது ஹிரண்யா (குடலிறக்கம்) ஆபரேஷனாகவோ இருக்கும் என்று எண்ணியபடியே அது பற்றி விசாரித்தேன்.

“எனக்கு பிரெஸ்ட்ல கான்சர். ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணலேன்னா உயிருக்கே ஆபத்தாயிடும்னு டாக்டர்கள் சொன்னாங்க. அதான்” என்றார் கொஞ்சமும் பதற்றமில்லாத குரலில். அவர் சொல்கிற தொனியைப் பார்த்தால், வழக்கமாக அவர் சும்மா பொய் சொல்லி விளையாடுகிற மாதிரி, ஏதோ ஏப்ரல் ஃபூல் செய்கிற மாதிரிதான் இருந்ததே தவிர, கொஞ்சம்கூட நம்புகிற மாதிரியே இல்லை. “என்ன சொல்றீங்க?” என்றேன் புரியாமல்.

“ஆமா ரவி சார், உண்மைதான்! என் தலையைப் பார்த்தா உங்களுக்கு வித்தியாசம் தெரிஞ்சிருக்குமே! ரெண்டு மாசமா கீமோ தெரபி கொடுத்ததுல முடியெல்லாம் கொட்டிப் போச்சு. நல்ல வேலையில இருக்கேன். நாலு பேரைப் போய்ப் பார்க்க வேண்டியிருக்கு. மொட்டைத் தலையோட எப்படிப் போறது? எனக்குப் பரவாயில்லை; போயிடுவேன். பார்க்கிறவங்க முகம் சுளிப்பாங்களே, அதுக்காகத்தான் என் கணவர் கிட்டே கூடச் சொல்லாம, ஒரு நண்பரைக் கூட்டிக்கிட்டு நேரே வட பழனி போனேன். அங்கே வடபழனி முருகனுக்கு, என் தலையில கொஞ்ச நஞ்சமிருந்த முடியையும் துப்புரவா மொட்டையடிச்சுக் காணிக்கை கொடுத்துட்டேன். அங்கேயே எனக்குத் தெரிஞ்ச தோழி கடையில ஏழாயிரம் ரூபா கொடுத்து விக் வாங்கி வெச்சுக்கிட்டேன்” என்றார்.

“எப்படித் திடீர்னு... போன தடவை வந்திருந்தப்போ கூட இது பத்தி ஒண்ணும் சொல்லலையே?” என்றேன், மனசுக்குள் உருவான என் பதற்றத்தைத் தணித்துக் கொண்டு.

“எனக்கும் அப்ப தெரியாது. ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பண்ற மாமோகிராம் டெஸ்ட்டை ஆயிரம் ரூபாய்க்குப் பண்றதாக ரெண்டு மாசத்துக்கு முன்னே ஒரு லேப்ல ஆஃபர் போட்டிருந்தாங்க. நமக்குத்தான் எதைத் தள்ளுபடியில கொடுத்தாலும் போய் வாங்கற புத்தியாச்சே! உடனே போய் பண்ணிக்கிட்டேன். மார்புக்குள்ள கான்சர் கட்டி ஃபார்ம் ஆகியிருக்கிறதா காட்டிடுச்சு. முதல்ல எனக்கும் பதற்றமாதான் இருந்தது. அதனால என்ன செய்ய முடியும்? ராய் மருத்துவமனைக்குப் போனேன். அங்கே கன்ஃபர்ம் பண்ணி, உடனே ஆபரேட் பண்ணி ரிமூவ் பண்ணிடறதுதான் பெஸ்ட்னு சொல்லிட்டாங்க. அங்கேயே கீமோ தெரபியும் கொடுத்தாங்க. கீமோ தெரபின்னா வேற ஒண்ணுமில்லை. சலைன் வாட்டர் மாதிரி ஏதோ ஏத்தினாங்க. இந்த ரெண்டு மாசத்துல நாலு தடவை அப்படி கீமோ தெரபி பண்ணிக்கிட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்கிட்டா அடுத்த ஒரு வாரத்துக்குச் சோறு திங்க முடியாது. வாய், வயிறு எல்லாம் புண்ணாயிடும். உடம்பெல்லாம் எரியுற மாதிரி இருக்கும். வெறும் எளநி, ஜூஸ் இதுதான் ஆகாரம். தயிர்சாதம் மட்டும் சாப்பிடலாம். உடம்பு பாதியா குறைஞ்சுடும்னாங்க. ஆனா நான் பாருங்க, ரெண்டு சுத்துப் பெருத்துட்டேன். ஒரு தடவை கீமோ தெரபி பண்ணிக்க ரூ.16,000 செலவு. ஆபரேஷனுக்கு ஒன்றரை லட்சம்! நாளைக்கு ஆபரேஷன். ஒரு வாரம் அங்கே இருக்க வேண்டியிருக்கும்...”

அவர் சொல்லச் சொல்ல எனக்கு நடுக்கமாக இருந்தது. அவரோ ஏதோ கொடைக்கானல் டூர் போய் வந்த அனுபவத்தை விவரிப்பது போலக் கேஷுவலாகச் சொல்லிக்கொண்டு இருந்தார்.

“ஆபரேஷன் சரி, அதுக்கப்புறம் ஒண்ணும் பயமில்லையே? டாக்டர்கள் என்ன சொல்றாங்க?” என்று கேட்டேன்.

“ஆரம்பத்துலேயே கண்டுபிடிச்சுட்டீங்களே, நீங்க ரொம்ப லக்கின்னாங்க. பெரும்பாலான கேஸ்கள்ல ரொம்ப முத்தின பிறகுதான் தெரியவே தெரியுமாம். ஏன்னா, அதுவரைக்கும் எந்த அறிகுறியும் தெரியாது; வலியும் இருக்காது. அதுக்கப்புறம் ஆபரேட் பண்ணினாலும், அது வேற இடங்களுக்குப் பரவுறதுக்கு வாய்ப்புண்டாம். ஆரம்ப நிலையிலேயே நான் கண்டுபிடிச்சுட்டதால, பிரெஸ்ட்டை ரிமூவ் பண்ணி எடுத்துட்டா, அதுக்கப்புறம் நான் நூறு வயசுகூட வாழ்வேனாம். ஒரு பயமும் இல்லைன்னாங்க” என்று சொல்லிச் சிரித்தார்.

என்னால் பதிலுக்குச் சிரிக்க முடியவில்லை. உள்ளுக்குள்ளேயே அழுதேன்!

என் மனைவியால் தாங்க முடியவில்லை. அவரை அணைத்துக் கொண்டு, “கண்டிப்பா நீங்க நூறு வயசு வாழ்வீங்க. அன்னை கைவிடமாட்டார்” என்று விசும்பினாள். “நீங்க சிகிச்சை முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், அடுத்த வாரம் உங்க வீட்டுக்கு வந்து பார்க்கிறோம்” என்றாள்.

“கவலைப்படாதீங்க உஷா! நூறு வயசு வரைக்கும் நான் அப்பப்போ வந்து உங்களை பிளேடு போட்டுக்கிட்டு இருப்பேன். அடுத்த வாரம் நானே வந்து உங்களை என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன். வரேன் ரவி சார், உஷாவுக்கு தைரியம் சொல்லுங்க” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடி கையசைத்துவிட்டு ஆட்டோவில் கிளம்பிப் போனார் அந்தச் சிநேகிதி.

நான் பேச்சற்று, பதிலுக்குக் கையசத்து வழியனுப்பினேன்.

***
சந்தோஷத்தை வாங்க முயலாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள்; அது சுலபம்!
.

அதிகம் நிலவு; கொஞ்சம் நெருப்பு!

ந்தோஷமான செய்தி ஒன்று; கொஞ்சம் வருத்தமான செய்தி ஒன்று!

முதலில் சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ புத்தகம் என்னுடைய மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரத்தின் மூலம் தமிழில் வெளியாகிவிட்டது. (அது பற்றிப் பதிவிட நான்தான் தாமதமாக்கிவிட்டேன்.) வழக்கமான மெல்லிய புத்தகமாக இல்லாமல், ஒரு கனமான நூலாக, அட்டகாசமாக வெளியாகியிருக்கிறது. உயர்தர தாளில், மிக அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. மூல புத்தகம் முந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள் என்றால், தமிழ்ப் பதிப்பு ஐந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள். கையில் வைத்திருக்கவே ஒரு கௌரவமாக இருக்கிறது.

மூலப் புத்தகத்தை வெளியிட்டவர்கள், தமிழில் இதை வெளியிட சில நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். அவை:

1. மூலப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைச் சரியான தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் நாங்கள் ஒரு தமிழ் வல்லுநரை வைத்துப் படித்துப் பார்த்துச் சரியாக இருந்தால்தான் புத்தகம் வெளியிட அனுமதிக்கப்படும்.

2. நாங்கள் மூலப் புத்தகத்தை எவ்வாறு அட்டை மற்றும் உள் பக்கங்களை வடிவமைத்திருக்கிறோமோ அதே போன்ற வடிவமைப்பைத்தான் தமிழிலும் பின்பற்ற வேண்டும். புத்தகத்தின் நீள, அகலம், அட்டையில் அரக்கு நிற எழுத்துக்கள் என எதையும் ஒரு இம்மியளவும் மாற்றக் கூடாது.

3. நாங்கள் உபயோகித்திருக்கும் அதே தரத்தினாலான பேப்பரைத்தான் பயன்படுத்த வேண்டும்.

4. விலை எக்காரணம் கொண்டும் ரூ.150/-ஐத் தாண்டக்கூடாது. அதற்காகக் கட்டுரையில் எடிட் செய்து குறைத்து, பக்கங்களைக் குறைக்க அனுமதியில்லை.

மூலப் பிரசுரகர்த்தர்கள் இந்தப் புத்தகத்தை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கொண்டு வருகிறார்கள். எனவே, எல்லாமே ஒன்று போல் யூனிஃபார்மாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். எனவேதான் இத்தகைய நிபந்தனைகள்.

விகடன் பிரசுரம் சளைத்ததா என்ன! நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கியது.

முதல் ஐம்பது பக்கங்களுக்கான மொழிபெயர்ப்பைப் பார்த்தவர்கள், “மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இனி மேற்கொண்டு எதுவும் நாங்கள் பார்க்கத் தேவையில்லை. கோ அஹெட்!” என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.

கடைசி நிபந்தனை மட்டும் கொஞ்சம் இடித்தது. பொதுவாகவே ஆங்கிலப் பதிப்பு அதிக அளவில் விற்பனையாகும். இதர மொழிகளில் அந்த அளவு விற்பனையை எட்டுவது கஷ்டம். எனவே, மூலப் பதிப்பைக் கணக்கிடுகிற அதே அளவுகோலின்படி விலை வைத்தால் நிச்சயம் கட்டுப்படியாகாது. எனவே, அவர்களிடம் பேசிப் புரிய வைத்து, விலை ரூ.175/- என நிர்ணயித்துக் கொள்ள ஒப்புதல் வாங்கிவிட்டது விகடன் பிரசுரம். இது கூட அதிக லாபம் இல்லாத ஒரு விலைதான்!

மிகச் சிறந்த உள்ளடக்கம்; மிகத் தரமான தாள்; மிக அருமையான அச்சு. மூன்றையும் கூட்டிப் பார்த்தால் இந்த விலை மிகக் குறைவானது என்று புரியும்.

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனே! அது வேறொன்றுமில்லை. இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்புக்கான தலைப்புதான்.

ஆங்கிலத்தில் ராஷ்மி பன்சால் மிக ஸ்டைலாக ‘STAY HUNGRY, STAY FOOLISH’ என்று தலைப்பு வைத்திருந்தார். ‘பசியோடு இரு, முட்டாளாக இரு’ என்பது நேரடி அர்த்தம். அதாவது, காலிப் பாத்திரமாக நம் மனத்தை வைத்திருந்தால்தான், வெளியிலிருந்து பல நல்ல விஷயங்களை உள்ளே இறக்கிக் கொள்ள முடியும்; அதே போல் நம்மை முட்டாளாக நினைத்துக் கொண்டால்தான், பல விஷயங்களைக் கேட்டும் கற்றும் உள்வாங்கிக் கொள்ள முடியும். கவித்துவமான தலைப்பு இது.

புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தபோது, இந்தத் தலைப்பைத் தமிழ்ப்படுத்த எனக்குச் சிரமமாகவே இல்லை. காரணம், இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருவருட்பிரகாச வள்ளலார் அழகாக, ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று உபதேசித்துவிட்டுப் போனார். பசியோடு இருப்பவனுக்குத்தான் சாப்பாடு இறங்கும்; செரிமானமாகும். தனித்திருப்பது என்பது வேறில்லை. மற்றவர்களைப் போலவே சிந்திக்காமல், இயங்காமல், தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்துவது; விழித்திரு என்றால், எப்போதும் விழிப்புடன் இருத்தல். நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்கிற விழிப்பு உணர்வு இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனவே, ஆங்கிலத் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ என்று வைத்தேன். ஆங்கில பதிப்பில் உள்ளது போலவே நான்கு வரிகளாக மடக்கிப் போட்டு லே-அவுட் செய்யவும் வசதியான தலைப்பு இது.

ஆனால், இந்தத் தலைப்பில் உள்ள பொருத்தமும், நயமும், அழகும் மூலப் பதிப்பாளர்கள் நாடிய தமிழ் வல்லுநர்களுக்குப் புரியவில்லை போலும்... ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று நேரடியான தலைப்பைத் தந்து, அதைத்தான் வைக்க வேண்டும் என்பதை ஐந்தாவது நிபந்தனையாக்கிவிட்டார்கள். அவர்களிடம் பேசிப் புரிய வைக்க நேரமோ பொறுமையோ இல்லாததால், மேற்படி தலைப்பிலேயே வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம். என்னைப் பொறுத்த வரையில் இது எனக்கு ஒரு குறைதான்.

மயிலுக்குக் காக்கா என்று பெயர் வைத்தாலும், மயில் மயில்தானே? அது போல, தலைப்பு மாறினாலும், இந்தப் புத்தகம் நிச்சயம் எனக்குப் பெருமைக்குரிய ஒன்றுதான்!

ன்னொரு சந்தோஷமான செய்தியும், கொஞ்சம் வருத்தமான செய்தியும்கூட இருக்கிறது.

அடுத்ததாக நான் இப்போது மொழிபெயர்த்துக்கொண்டு இருப்பது டாக்டர் ஆர்.கே.ஆனந்த்தின் ‘GUIDE TO CHILD CARE’ என்ற புத்தகம். குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான, விளக்கமான புத்தகம்.

மருத்துவப் புத்தகம் என்பதால் மொழிபெயர்ப்பில் ஒரு சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கவலை. “கவலையே படவேண்டாம். டாக்டர் ஆனந்தின் நெருங்கிய நண்பர் இங்கே சென்னையில் டாக்டர் பார்த்தசாரதி இருக்கிறார். அவரும் சிறந்த குழந்தை மருத்துவர். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்து, தவறுகள் இருந்தால் திருத்தித் தரும்படி கேட்போம்” என்றார் விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி அவர்கள்.

(இங்கே ஒரு முக்கியக் குறிப்பு: நான் SSLC வரை மட்டுமே படித்தவன். அந்தக் காலத்து SSLC என்று வேண்டுமானால் பெருமைக்காகச் சொல்லிக் கொள்ளலாம். ஆங்கிலப் புலமை இல்லாதவன்.)

அதன்படி, முதல் ஐம்பது பக்கங்களை மொழிபெயர்த்ததும், அதை டாக்டர் பார்த்தசாரதிக்கு அனுப்பி வைத்தோம். அடுத்த நாளே அது திரும்பி வந்தது, டாக்டரின் குறிப்புகளோடு.

‘Hats off for the excellent translation’ என்று முதல் வரியாகக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர். தொடர்ந்து, அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததன் சாராம்சம்:

‘மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வார்த்தைகள் மிகக் கச்சிதமாக, அதே சமயம் எளிமையாகக் கையாளப்பட்டுள்ளன. இதைப் படிக்கும்போது ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தது போலவே தோன்றவில்லை. நேரடியாக மருத்துவர் தமிழிலேயே எழுதியிருக்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்தனைக் கச்சிதம்!’

டாக்டர் அந்த மொழிபெயர்ப்பில் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்தேன். அத்தனையும் மருத்துவப் பெயர்கள். நான் எனக்குத் தெரிந்த தமிழில் அந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்க, அவற்றுக்குச் சரியான பதங்களைக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர்.

டாக்டர் பார்த்தசாரதியின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்துள்ளது. டாக்டருக்கு நன்றி!

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனல்லவா? ‘ஸ்டே ஹங்ரி...’யை மொழிபெயர்க்கும்போது, ஆங்கில மூலத்தை PDF ஃபைலாக நெட்டிலிருந்து டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். அதை மொழிபெயர்க்கும்போது மானிட்டரின் மேல் பாதியில் அதை வைத்துக் கொண்டு, கீழ்ப்பாதியில் வேர்ட் பேடைத் திறந்து, அப்படியே பார்த்துப் பார்த்துத் தட்டச்சு செய்துகொண்டே போவேன். எனக்கு வேலை சுலபமாக இருந்தது. தலையை அங்கே இங்கே திருப்ப வேண்டிய அவசியமில்லை. கடகடவென்று ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து பக்கங்கள் வரை மொழிபெயர்த்தேன்.

இந்தப் புத்தகம் இன்னும் PDF-ஆக வரவில்லை. எனவே, பக்கத்தில் புத்தகத்தை நிறுத்திக் கொண்டு, புத்தகத்தையும் மானிட்டரையும் மாறி மாறிப் பார்த்து அடிக்க வேண்டியுள்ளது. இதனால் கழுத்து வலி ஏற்படுவதோடு, மொழிபெயர்ப்பு வேலை மிக மிக மந்தமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பார்க்கலாம், டாக்டரின் உற்சாக வார்த்தைகள் கழுத்து வலியையும் மீறி என்னை இயக்குகிறதா என்று!

***
சிறப்பாகச் செய்வது சிறப்பாகச் சொல்வதைவிடச் சிறப்பானது!

இதயத்தை உலுக்கும் இலா அருண்!

லா அருண்... பேரைச் சொல்லும்போதே அதிரடியும் ஆர்ப்பாட்டமுமான அவரது குரல், காதுகள் வழியே இறங்கி இதயத்தை உலுக்குகிற மாதிரி ஓர் உணர்வு!

ஜெய்ப்பூரில் பிறந்தவர் இலா அருண். தனது நான்காவது வயதிலிருந்தே நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி ஆடுவது இவரின் பொழுதுபோக்கு. ஜெய்ப்பூரில் மகாராணி பெண்கள் கல்லூரியில் படித்தார். அங்கேயும் கிராமியப் பாடல்களை அவருக்கே உரிய ஹஸ்கி குரலில் பாடி அசத்தினார். இதனால் டி.வி. நிகழ்ச்சிகளில் பாடவும், நடிக்கவும் வாய்ப்பு வந்தது. பின்னர் இவர் வெளியிட்ட ‘வோட் ஃபார் காக்ரா’ இசை ஆல்பம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்றுச் சாதனை படைத்தது. அதன்பின் நிறைய ஆல்பங்களை வெளியிட்டார். ‘ஹாலே ஹாலே’ ஆல்பத்துக்குப் பிறகு, இசைத் திருட்டு, ரீ-மிக்ஸ் கலாசாரம் இவற்றை எதிர்த்து ‘இனி பாடுவதில்லை’ என்று சில காலம் ஒதுங்கியிருந்தார்.

ஆபாச வார்த்தைகளை நுழைத்து எழுதிய பாடல்களைப் பாடுவதென்றால் இவருக்கு அறவே பிடிக்காது. ஆனால் ஆச்சர்யமாக, ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ (சோளிக்குள் என்ன இருக்கு?) பாட்டுதான் இவரைப் பெரிய அளவில் பிரபலப்படுத்தியது. மாதர் சங்கங்கள் போட்ட வழக்கினால் அந்தப் பாடலுக்கு கோர்ட், கேஸ், தடை உத்தரவு எல்லாம் வந்தது. ஆனால் இவரோ, “இது ஆபாசமான பாடலே அல்ல. இதைவிடப் பச்சையான பாடல்கள் எல்லாம் வந்திருக்கின்றன. அவற்றை எதிர்த்து யாரும் குரலெழுப்பவில்லை. காரணம், அவை பாப்புலராகவில்லை. இந்தப் பாடல் பிரபலமாகிவிட்டதால், இதை எதிர்ப்பதன் மூலம் தங்கள் இருப்பை வெளியுலகுக்குத் தெரியப்படுத்திக் கொள்ள் விரும்புகிறார்கள் சில மாளிகைவாசி மாதர் சங்கப் பெண்கள். இந்த எதிர்ப்புக்கெல்லாம் அஞ்சுபவள் நானல்ல” என்றார்.

“காலையில் எழுந்ததிலிருந்து ராத்திரி தூங்கப் போவது வரைக்கும் கிராமியப் பாடல்களைப் பாடிக்கொண்டே வேலை செய்வது ராஜஸ்தானிய கிராமத்து மக்களின் ரத்தத்தில் ஊறிப் போன பழக்கம். எங்கள் வீட்டில் ரகுநாத் என்று ஒரு வேலைக்காரர் இருந்தார். அவர் எப்போதும் ராஜஸ்தானியப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். அவர்தான் தினமும் பள்ளிக்கூடத்துக்கு என்னை சைக்கிளில் உட்கார வைத்து அழைத்துச் செல்வார். அப்படி சைக்கிள் ஓட்டிச் செல்லும்போதும் கிராமியப் பாடல்களைப் பாடியபடியே வருவார். அதைக் கேட்டுக் கேட்டு எனக்கும் அந்தப் பழக்கம் தொற்றிக் கொண்டது. ஆக, என் முதல் குரு ‘ரகுநாத்’தான்” என்று ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலாவின் கணவர் அருண், மெர்ச்சன்ட் நேவியில் அதிகாரியாக இருந்தவர்.

இலா பாடல்களும் எழுதுவார். இவரே எழுதி, பாடித் தொகுத்த ‘சபன்சுரி’ என்ற கிராமியப் பாடல்கள் அடங்கிய ஆடியோ கேஸட் விற்பனையில் சக்கைப் போடு போட்டது. இந்தியாவில் இந்த கேஸட் அதிகம் விற்பனையான மாநிலம்... சொன்னால் நம்ப மாட்டீர்கள் - நம்ம தமிழ்நாடுதான்! “தமிழகத்திலிருந்து எனக்குக் கிடைத்த இந்த மகத்தான வரவேற்பைக் கண்டு பிரமித்துப் போனேன்” என்று சொல்லியிருக்கிறார் இலா அருண்.

இலா அருண் சைனா கேட், சிங்காரி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். ‘ஜோதா அக்பர்’ படத்தில் அக்பரின் நர்ஸ் கேரக்டரில் வருவது இலா அருண்தான். ஒரு வளர்ப்புத் தாயார் போன்ற கேரக்டர் அது.

சமீபத்தில் நம்ம ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுத் தந்த ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் ‘ரிங்கா, ரிங்கா’ பாடலை ஏ.ஆர்.ரஹ்மான், அல்கா யாக்னிக் இருவருடனும் இணைந்து பாடியிருக்கிறார் இலா அருண். இவரின் ‘பஞ்சாரன்’ பாடல்கள் அதட்டலும் உருட்டலும் மிரட்டலுமாக இருக்கும். கொஞ்சம் திகிலோடுதான் அவற்றைக் கேட்க வேண்டும். எனக்கு ரொம்பப் பிடித்தமான பாடல்கள் அவை. என்னவொரு உலுக்கியெடுக்கும் குரல்!

ஏ.ஆர்.ரஹ்மான் புண்ணியத்தில் இலா அருண் தமிழிலும் பாடியிருக்கிறார். மிஸ்டர் ரோமியோ படத்தில் ‘முத்து முத்து மழையே...’ என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். நீங்களும் இலாவின் குரலை ரசிக்கத் தொடங்கிவிடுவீர்கள்!

***
சந்தோஷம் என்பது ஒரு தொற்று. ஆனால், அதைப் பெறுபவராக இருப்பதைவிடப் பரப்புபவராக இருக்க முயலுங்கள்!

பாப்பரசி ஸ்வேதா ஷெட்டி!

சில மாதங்களுக்கு முன்னால் என் அபிமான கஸல் பாடகி பீனாஸ் மஸானி பற்றி எழுதியிருந்தேன். அவரின் குரல் மிகவும் மதுரமான குரல். குழைவும் நெகிழ்வும் மிக்க குரல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காத குரல். இரவுகளில் பெரும்பாலும் நான் படுக்கையில் சாய்ந்த பின்பு கேட்பது என் அபிமான பாடகர் டி.எம்.எஸ்ஸின் முருகன் பாடல்களாகத்தான் இருக்கும். இல்லையெனில், பீனாஸ் மஸானியின் கஸல்களாக இருக்கும்.

எனினும், குழைவும் நெகிழ்வுமான குரல்கள் மட்டுமேதான் எனக்குப் பிடிக்கும் என்பதில்லை. நேர்மாறாக, அதிரடியான குரல்களும், ஆர்ப்பாட்டமான பாடல்களும்கூடப் பிடிக்கும். உஷா உதூப்பின் குரல் கனமான குரல்தான். எனக்கு அவரின் பாடல்கள் பிடிக்கும். அதே போல், இந்தியில் இலா அருண் என்றொரு பாடகி உண்டு. அவரின் குரல் முரட்டுத்தனமாக இருக்கும். ஆனாலும், அந்தக் குரலில் எனக்கு அப்படியொரு ஈர்ப்பு உண்டு. இலா அருண் கேஸட்டுகளாக நிறைய வாங்கி அடுக்கினேன் ஒரு காலத்தில். சிடி கலாசாரத்துக்கு மாறிய பிறகு, அவரின் பாடல்கள் மட்டுமல்ல; ஏனோ தெரியவில்லை, பொதுவாகவே பாடல்கள் கேட்பது குறைந்துபோய்விட்டது. (இலா அருண் பற்றித் தெரியாதவர்களுக்காக: ‘கல்நாயக்’ படத்தில் ‘சோளி கே பீச்சே க்யா ஹை’ பாடல் பிரபலமானது. அந்தக் காட்சியில் மாதுரி தீட்சித்தும் நீனா குப்தாவும் ஆடுவார்கள். மாதுரி தீட்சித்துக்கு அல்கா யாக்னிக் பின்னணி பாட, நீனா குப்தாவுக்குப் பாடுபவர் இலா அருண். இவரைப் பற்றி ஒரு தனி பதிவே போடலாம்.)

நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில், தூர்தர்ஷனில் அடிக்கடி பாப் ஆல்பங்களை ஒளிபரப்புவார்கள். ஷரான் பிரபாகர், பார்வதி கான் ஆகியோரின் பாப் பாடல்களை அப்போது அதிகம் கேட்டு ரசித்திருக்கிறேன். பின்னர்தான் பீனாஸ் மஸானியின் குரல் அறிமுகம்.

அதற்குச் சில ஆண்டுகள் கழித்து, அலீஷாவின் ‘மேட் இன் இண்டியா’ என்னை வசீகரப்படுத்தியது. அலீஷாவின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அந்தச் சமயத்தில் பத்தோடு பதினொன்றாக நான் வாங்கிய கேஸட் ‘தீவானே தோ தீவானே ஹைன்’. ஆம்பிளைத்தனமான அந்தக் குரல் என்னை மிகவும் ஈர்த்தது. திரும்பத் திரும்ப அந்தப் பாடல்களைப் பலப்பல முறை கேட்டு ரசித்தேன். பின்பு அந்தக் குரலுக்காகவே அவரின் கேஸட்டுகளையும் தேடித் தேடி வாங்கினேன். அவர் - ஸ்வேதா ஷெட்டி.

ஏக் லடுகா, குட் லக் முண்டயா, கேல் கிலாடி கேல், தில்லாலே தில்லாலே, வா(ஹ்) பை வா(ஹ்), தக் தக் தட்கே, பண்டா படா குடு லகுதா என அவரின் ஒவ்வொரு பாட்டுமே என் ரசனைக்கேற்ப இருந்தது. இன்றைக்கும் எனது யுஎஸ்பி எம்பி3-யில் அவரின் ஏழெட்டு பாடல்கள் உள்ளன.

17 வயதில் மாடலாகக் களம் இறங்கியவர் ஸ்வேதா ஷெட்டி. அதைத் தொடர்ந்து விளம்பரத் துண்டுப் படங்களுக்குக் குரல் கொடுத்தார். பின்னர்தான் முழு நீளப் பாடல்கள் பாடத் தொடங்கினார். அவரின் முதல் ஆல்பமான ‘ஜானி ஜோக்கர்’ 1993-ல் வெளியாகி, அவரை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது. பின்னர் எம்.டி.வி. நிகழ்ச்சிகளிலும் தோன்றினார். பின்னாளில் அவரின் ஆல்பம் ஒன்றைத் தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தபோது வியப்பாக இருந்தது. அத்தனை ஒட்டி உலர்ந்த தேகம். கிள்ளியெடுக்கத் துளி சதை கிடையாது. இத்தனை வற்றலும் தொற்றலுமான உடம்புக்குள்ளிருந்தா அத்தனைக் கிறங்கடிக்கும் குரல் கிளம்புகிறது என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். அதே சமயம், குரலின் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அவரின் ஒடிசலான தேகமும் ஒட்டிய கன்னமும்கூட அழகாக இருப்பதாகவே பட்டது எனக்கு.

திறமையும் தகுதியும் நிரம்பிய இவருக்குக் குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காமல் போய்விட்டது ஒரு சோகம். இவரது போக்கும், இவர் எடுத்துக்கொண்ட துறையும் பிடிக்காமல், அப்பா இவருக்குப் பண உதவி உள்பட எந்த உதவியும் செய்ய மறுத்துவிட்டார். அது மட்டுமல்ல, அவரோடு முகம் கொடுத்துப் பேசுவதையும்கூட நிறுத்திவிட்டார்.

ஸ்வேதா பின்பு சாரா பிரைட்மேன், கிரிகோரியன் போன்ற தன் நண்பர்களோடு இணைந்து பாப் பாடல்கள் பாடிக்கொண்டு இருந்தார். 1997-ல் கிறிஸ்டியன் பிராண்ட் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் ஒத்துழைப்போடு 1998-ல் ‘தீவானே தோ தீவானே’ ஆல்பத்தை வெளியிட்டார். அது ஒன்றரை லட்சம் கேஸட்டுகளுக்கு மேல் விற்றுச் சாதனை படைத்தது. ஸ்வேதா வெளியிட்ட அடுத்த ஆல்பமும் (சஜ்னா - 2003-ல்) சூப்பர்டூப்பர் ஹிட்! ‘ரங்கீலா’ போன்ற சில திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார் ஸ்வேதா ஷெட்டி.

சமீப காலமாக அவரை அதிகம் காண முடியவில்லை. மியூசிக் வேர்ல்டில் சமீபத்தில் போய்க் கேட்டபோது அவரின் புதிய சிடி-க்கள் எதுவும் வரவில்லை என்று சொன்னார்கள். 40 வயதாகும் ஸ்வேதா இப்போதெல்லாம் பாடுவதைக் குறைத்துக் கொண்டு, தன் கணவரோடு ‘ஹாம்பர்க்’ நகரில் செட்டில் ஆகிவிட்டதாகக் கேள்வி.

அவருக்குள்ள திறமைக்கு கிராமி விருதுகள் பெற்று, இன்னும் புகழின் உச்சிக்குச் சென்றிருக்க வேண்டியவர். இப்போதெல்லாம் அவரின் குரலைக் கேட்க முடியாததில் எனக்கு ரொம்ப வருத்தம்தான்!

***
ஒரு குழந்தையைப் பெற்றுக் கொள்வதால் மட்டும் சிறந்த பெற்றோர் ஆகிவிட முடியாது. வீட்டில் பியானோ இருந்துவிட்டால் பியானோ கலைஞராகிவிட முடியுமா?

ஞானவாபி - II

வாவி என்றால் குளம். வாவிதான் சம்ஸ்கிருதத்தில் ‘வாபி’ என்றாகியதோ? எனில், ஞானவாபி என்றால் ஞானக் குளம். அறிவுக் குளம்.

தி.நகரில் உள்ள ‘ஞானவாபி’க்குள் நுழைந்ததும், ஒரு பெரிய நகருக்குள் இருக்கிறோம் என்கிற உணர்வே ஏற்படவில்லை. எங்கோ ஒரு கிராமத்தில், பெரியதொரு கோயிலை ஒட்டிய சற்று விசாலமான மண்டபத்தில் இருப்பதான பிரமையே ஏற்பட்டது. சின்னச் சின்னதாக ஏராளமான அறைகள்; வசதியான குளியல் அறைகள்; கர்மாக்களைச் செய்வதற்கென பிரத்யேக இடங்கள்; உட்காருவதற்குத் தோதான மணைப் பலகைகள்; அக்னி வளர்த்து ஹோமம் செய்வதற்கான சிறு சிறு சதுர சிமெண்ட் தொட்டிகள்; அகன்ற கிணறு; ஓர் அறையில் ஹோமத்துக்குத் தேவையான வறட்டிகள், தர்ப்பைகள், சமித்துகள், தொன்னைகள்.

இரண்டு அழகான காளைக் கன்றுகளும் அங்கே இருந்தன.

ஒருவர் இறந்த ஒன்பதாம் நாளிலிருந்து அவருக்கான கர்மாக்களைச் செய்யத் தொடங்க வேண்டும் என்பது ஐதிகம். அடுத்த நாள் ‘பத்து’ எனப்படும். அதையடுத்து சோதகும்பம், சபிண்டீகரணம். அவை முடிந்து, அந்த ஆத்மா பிரிந்த அந்த இல்லத்தில் வைத்து கிரேக்கியம் என்கிற சடங்கைச் செய்யவேண்டும்.

ஒன்பதாம் நாளில் பிண்டம் வைப்பதில் தொடங்குகிறது கர்மா. சாதத்தை ஒன்பது சிறிய உருண்டைகள், ஒன்பது பெரிய உருண்டைகளாகப் பிடித்து வைத்து, மறைந்த ஆத்மாவுக்குப் படைப்பது. சோதகும்பம் என்கிற காரியம் செய்கிற சமயத்தில் ஞானவாபியிலேயே குளித்து, அங்கேயே டிபன், சாப்பாடு எல்லாம் முடித்துக் கொள்வதற்கு வசதியாக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம், காளைக் கன்றுக்கு ஒரு பூஜை நடந்தது. மறைந்த ஆத்மாவை ருத்ர பூமிக்கு அனுப்பி, சிவபெருமானிடத்தில் ஒப்படைப்பதாக ஐதிகம். அப்படி அனுப்புவதற்குரிய வாகனமான ரிஷபத்தை (காளை) மகிழ்வித்து, தாஜா செய்து, இந்த ஆத்மாவைப் பத்திரமாக எடுத்துச் சென்று சிவனிடத்திலே ஒப்படைத்துவிடு என்று கேட்டுக் கொள்கிற பூஜை அது.

மறுநாள், சபிண்டீகரணம் என்பதும் ஒரு முக்கியமான கர்மா. அன்றைய தினம் குத்துவிளக்கு, குடம், குடை, செருப்பு, வேட்டி, தலையணை என நம்மால் முடிந்த பொருள்களைத் தானம் செய்ய வேண்டும்.

மறுநாள் கிரேக்கியம். அப்படித்தான் சொல்லிப் பழக்கம். அதன் உண்மையான உச்சரிப்பை, பொருளை, இந்தக் காரியங்களை நடத்தி வைத்த வாசன் சாஸ்திரிகள் விளக்கமாகச் சொன்னார். பொதுவாகவே, ஒவ்வொரு நாளுமே அந்தக் கர்மா எதற்காகச் செய்யப்படுகிறது, சொல்கிற மந்திரங்களுக்கு என்ன அர்த்தம் என்பதை முக்கியமான இடங்களில் விளக்கியபடியேதான் நடத்தி வைத்தார் அவர்.

நவகிரஹ யக்யம் என்பதுதான் பின்னர் கிரஹ யக்யம் என்று சுருங்கி, கிரேக்கியம் என்று மருவிவிட்டது என்று விளக்கினார். நேற்றைக்குத்தான் இந்த நவகிரக பூஜையும் ஹோமமும் வீட்டில் நடந்தது.

ஒரு கல்யாணத்துக்கு ஆகிற செலவு இந்தக் காரியங்களுக்கும் ஆகியது. ஆனால், இதை இப்படித்தான், இவ்வளவு விமரிசையாகத்தான் செய்ய வேண்டும் என்பதில்லை. நம் வசதிக்கேற்றபடி சிக்கனமாகவும் செய்யலாம். கல்யாணத்தைக்கூட ஒரு கோயிலில் வைத்து மஞ்சள் முடிந்த தாலியைக் கட்டிச் சிக்கனமாகச் செய்வதில்லையா? எதுவுமே கட்டாயம் இல்லை. எதை எந்த அளவில் செய்தாலும், அதில் நமக்குப் பரிபூரண மனத் திருப்தி கிடைக்கிறதா என்பதுதான் முக்கியம்.

எந்த ஒரு செயலைச் செய்தாலும், கடனே என்று செய்யக் கூடாது. ஒரு வேலையில் இருந்தால், மாதா மாதம் சம்பளம் வாங்குகிறோமே என்பதற்காகப் பல்லைக் கடித்துக் கொண்டு செய்யக் கூடாது. அப்படிச் செய்கிற செயலில் முழுமை இருக்காது.

கர்மாக்களும் அப்படித்தான்! சிலருக்கு இதில் நம்பிக்கை இருக்கலாம்; பலருக்கு நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்; ‘செத்துப் போன ஆத்மாவைக் குளிரப் பண்ணுகிறதாவது! எல்லாம் பேத்தல்!’ என்று நினைக்கலாம். சிலர், இத்தனைச் செலவு பண்ண வேண்டிய அவசியமில்லை; செய்ய வேண்டியதுதான். ஆனால், சிக்கனமாகச் செய்தால் போதும் என்று எண்ணலாம்.

எங்களுக்கு இப்படிச் செய்ய வேண்டுமென்று தோன்றியது; செய்தோம். மறைந்த ஆத்மா நல்ல கதியை அடையும் என்கிற ஆத்ம திருப்தி உண்டாகியிருக்கிறது.

மனித வாழ்க்கையில் இறுதியில் எஞ்சி நிற்பது அதுதானே!

***
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இரண்டு முக்கியமான நாட்கள் உண்டு. ஒன்று, அவன் பிறந்த நாள்; மற்றொன்று, எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்பதை அவன் உணர்ந்த நாள்!

ஞானவாபி

பிராமண குலத்தில் பிறந்திருந்தாலும் நான் பூணூல் அணிவதில்லை. 35 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் காஞ்சி சங்கர மடத்தில் எனக்கு உபநயனம் செய்து வைக்கப்பட்டபோது, ஒரு சில ஆண்டுகளே நான் பூணூல் அணிந்திருந்தேன். பின்னர் கழற்றி ஆணியில் மாட்டிவிட்டேன்.

நான் முன்பு பணியாற்றிய ‘சாவி’ பத்திரிகையின் ஆசிரியர் சாவி, ஆனந்த விகடன் ஆசிரியர் பாலசுப்ரமணியன், ஹாய் மதன், பத்திரிகையாளர் ஞாநி ஆகியோரும் பூணூல் அணியாதவர்கள்தான் என்பதைப் பின்னாளில் தெரிந்து கொண்டேன். அவர்கள் என்ன காரணங்களுக்காகப் பூணூல் அணிவதைத் தவிர்த்தார்கள் என்பது எனக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை, நான் ஒன்றும் கடவுள் பக்தி இல்லாத நாஸ்திகன் அல்ல. சமயச் சடங்குகளை வெறுப்பவனும் அல்ல. என் நண்பர்களான பகுத்தறிவுவாதிகள் சிலர் கேலி செய்வார்களே என்பதோ, மதச் சின்னத்தை அணியலாகாது என்கிற புரட்சி(!)யான எண்ணமோகூட நான் பூணூல் அணியாததற்குக் காரணமல்ல.

எழுதத் தெரியாதவனுக்கு பேனா எதற்கு? பூணூல் அணிந்தவன் முறையாக அதற்கான நியதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். திரிகால சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். முஸ்லிம்களில் பெரும்பாலோர் ஐந்து வேளைத் தொழுகையையும் தவறாமல் செய்வதைப் பார்த்திருக்கிறேன். கிறிஸ்துவர்கள் ஞாயிறு தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றனர். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், நமது இந்து மதத்துக்கென உள்ள சம்பிரதாயங்களை ஓரளவுக்காவது கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிக்காதவனுக்குப் பூணூல் வெறும் நூல்தான்.

மற்ற மதங்களைப் போன்று இந்து மதம் கெடுபிடியான மதம் அல்ல. சுதந்திரம் கொடுக்கும் மதம். இந்து மதத்தில் இருப்பவன் தன் சொந்த மதத்தைக் கேலி செய்யலாம்; இழித்துப் பேசலாம்; பழிக்கலாம். இந்து மதம் அவனைக் கேள்வி கேட்காது. நாஸ்திகனுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் மதம் இந்து மதம். எனவேதான், நாள் கிழமைகளில்கூட கோயிலுக்குச் சென்று வழிபடுவதோ, விபூதி அணிவதோ எனக்குப் பழக்கமாக ஆகவே இல்லை. அது அவ்வளவு அவசியம் என்று தோன்றவும் இல்லை.

சமீபத்தில் ஒரு நாள், நான் நெற்றியில் பட்டை பட்டையாக விபூதி அணிந்திருந்ததைப் பார்த்து என் மகள் கேட்டாள்: “என்னப்பா, தலைவலியா?” ஆம். உண்மைதான்! தலைக்குக் குளித்தால், எத்தனைத் துவட்டினாலும் தலையில் நீர் சேர்ந்துகொண்டு மிகப் பயங்கரமாக வலிக்கும். எத்தனை சாரிடான்கள் போட்டாலும் தீராது. விபூதியை வெந்நீரில் குழைத்துப் பூசிக்கொண்டு படுத்தால், ஒரு மணி நேரத்தில் தலைவலி பட்டென்று விட்டுவிடும். இது எங்கள் குடும்பத்தில் கை கண்ட வைத்தியம்.

சடங்கு, சம்பிரதாயங்களில் எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை என்று சொன்னேன். அவை முட்டாள்தனமானவை என்கிற பகுத்தறிவு(!) எண்ணமும் எனக்குக் கிடையாது. தினம் தினம் எத்தனையோ முட்டாள்தனங்களைச் செய்துகொண்டு இருக்கிறோம். இவன் வந்தால் நாட்டுக்கு நல்லது செய்வான், இவன் கை சுத்தமானவன், யோக்கியன் என்று நம்பி தேர்தலுக்குத் தேர்தல் யாருக்காவது ஓட்டுப் போட்டுக்கொண்டு இருக்கிறோமே, அந்த முட்டாள்தனத்தை விடவா? எனவே, நமது மனத் திருப்திக்காகச் சடங்குகளைச் செய்வதில் தப்பொன்றும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. சொல்லப்போனால், முழு மனத் திருப்தியோடு செய்யும் சடங்குகள் நம் எண்ணங்களுக்கு வலுவூட்டி, குடும்பத்தில் நன்மையைக் கொண்டு வருகிறது என்பதுதான் உளவியல்ரீதியான உண்மை.

பித்ருக்களுக்குச் செய்யும் கர்மாக்களும் இத்தகைய நலனை அளிக்க வல்லவைதான். குடும்பத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் பெரியவர்களுக்கும் அவர்கள் உயிரோடு இருக்கும்போது ஒழுங்காகச் சோறு போடாமல், வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுக்காமல், அவர்களை ஒரு பாரமாக எண்ணி உதாசீனப்படுத்திவிட்டு, அலட்சியமாக நடத்திவிட்டு, அவர்கள் மனம் புண்படப் பேசிவிட்டு, அவர்கள் இறந்த பின்னர் அவர்களுக்கான கர்மாக்களை ஒழுங்காகச் செய்கிறேன் என்று ஒருவன் கிளம்பினால், அவனைவிடக் கேடு கெட்டவன் எவனும் இருக்க முடியாது. அவன் உண்மையில் தன் மனத் திருப்திக்காக அவற்றைச் செய்ய மாட்டான். ஊர் மெச்சுவதற்காகவே செய்வான். அவனை இந்து மதக் கடவுள் மட்டுமல்ல; எந்த மதக் கடவுளும் மன்னிக்க மாட்டார்!

சமீபத்தில் இறைவனடி சேர்ந்த எங்கள் மாமியார் உயிரோடு இருந்தவரையில், உடல் உபாதைகள் தவிர, உள்ளத்தால் உற்சாகமாகவும், சந்தோஷமாகவும் இருந்தார். அவரின் மற்ற இரு பெண்களும்கூட தங்கள் தாயார் மீது அத்தனைப் பாசம் வைத்திருந்தார்கள். பெண்கள் தங்கள் தாயாரின் மீது பிரியம் கொண்டிருப்பதில் ஆச்சரியமில்லை; என் மாமியாருக்கு வாய்த்த மாப்பிள்ளைகளும் அவரை அவ்வளவு அனுசரணையாகக் கவனித்துக் கொண்டார்கள் என்பதுதான் விசேஷம். உயிரோடு இருந்தவரையில் அவரை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார்கள்.

2000-வது ஆண்டில், திடீரென்று ஒரு நாள் என் மாமியார் சுய நினைவற்றுக் கீழே விழுந்துவிட்டார். நான் பதறிப்போய் என் சகலைகள் இருவருக்கும் போன் செய்தேன். உடனே அலுவலகத்துக்கு பர்மிஷன் போட்டுவிட்டு, அடுத்த அரை மணிக்குள் ஓடி வந்தார்கள். டாக்ஸி வரவழைக்கப்பட்டது. அப்போது நாங்கள் குடியிருந்த வீடு, ஒற்றையடிப் பாதை மாதிரியான ஒரு நீள சந்தின் இறுதியில் இருந்தது. அங்கிருந்து என் மாமியாரை ஆஸ்பத்திரிக்கு எப்படி எடுத்துச் செல்வது என்று நான் யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, சிறிய மாப்பிள்ளை விழுந்து கிடந்த என் மாமியாரை அலாக்காகத் தன் இரு கைகளில் தூக்கினார். என் மாமியார் தெம்பும் திடனுமாக இருந்த சமயம் அது. நல்ல உயரமும், அதற்கேற்ற பருமனும் எடையுமாய் இருந்த என் மாமியாரை சின்ன மாப்பிள்ளை தனியொரு ஆளாகவே சுமந்து சென்று, டாக்ஸியில் படுக்க வைத்தார். எந்த ஒரு தயக்கமும் இன்றி, ஒரு தாய்க்குச் செய்வதைப் போன்ற ஈடுபாட்டுடன் அவர் அன்று நடந்துகொண்ட விதம் எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.

அதன்பின்னர் விஜயா ஹாஸ்பிட்டலில் மாமியாரைச் சேர்த்து, கோமாவிலிருந்து அவர் மீண்டு, உடம்பு குணமானாலும் பேச்சு குழறிப் போய், ஓரிரு ஆண்டுகளுக்குப் பின்னர் தேறி வந்து, பேச்சும் கொஞ்சம் தெளிவடைந்து, பழைய அளவுக்கு இல்லையென்றாலும் ஓரளவுக்குத் தன் வேலைகளைத் தானே பார்த்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு முன்னேறினார். மீண்டும் அடுத்த கண்டம். தடுமாறிக் கீழே விழுந்ததில், தொடை எலும்பு முறிந்துவிட்டது. பிளேட் வைத்து ஆபரேஷன் செய்யப்பட்டு, அவர் மீண்டும் எழுந்து நடக்க மூன்று மாதமாகியது.

அதன்பின்னர் தொட்டுத் தொட்டு அவரை ஏதாவது உடம்பு படுத்திக்கொண்டே இருந்தது. இருமல், முதுகு வலி, கால் வலி, தொண்டையில் சாப்பிட முடியாமல் எரிச்சல் என ஒன்று சரியானால், மற்றொன்று ஆஜராகிவிடும். என் குழந்தைகளைக் கொஞ்சுவதும், டி.வி. சீரியல்கள் பார்ப்பதும், ஒரு பத்திரிகை விடாமல் படிப்பதும்தான் அவரின் பொழுதுபோக்கு.

அவர் மறைந்த பின்னர், அவருக்குச் செய்யவேண்டிய பித்ரு கர்மாக்களை ஒன்பதாம் நாளில் தொடங்கி, வீட்டில் செய்யவேண்டிய கிரேக்கியம் வரையில் எங்கள் மனசுக்குத் திருப்தியாய், முழுமையாய், ஒன்றுகூட விடாமல் பரிபூர்ணமாய்ச் செய்தோம்.

சென்னை போன்ற பெரு நகரங்களில் வீடுகளில் இவற்றைச் செய்வது என்பது முடியாத காரியம். எனவே, இதற்கென்றே தி.நகரில் ‘ஞானவாபி’ என்றொரு இடம் உள்ளது. காஞ்சி முனிவர் அருளாசியோடு, ஸ்ரீராம் சமாஜத்தினர் இதை நடத்துகிறார்கள். குறைந்த வாடகையில் நிறைய சௌகரியங்கள்.

பதிவு நீள்வதால் இங்கே நிறுத்திக்கொண்டு, ‘ஞானவாபி’ பற்றி என் அடுத்த பதிவில் தொடர்கிறேன்.

***
கடவுள் இன்றி நீங்கள் செயல்பட முடியாது; நீங்கள் இன்றி கடவுள் செயல்பட மாட்டார்!

இங்கேயும் சில ராஜபக்‌ஷேக்கள்!

னிதாபிமானம், இரக்கம், உதவும் மனப்பான்மை, முதியோரை மதித்தல், துயரப்படுவோருக்குக் கை கொடுத்தல் போன்றவை எல்லாம் மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருக்குள்ளும் இயல்பாகவே அமைந்திருக்க வேண்டிய குணங்கள். இத்தகைய குணங்கள் இல்லாதவரெல்லாம் மனிதரில் சேர்த்தியா என்பதே கேள்விக்குரியது. ஹார்ட் டிஸ்க், மதர் போர்டு இன்ன பிறவெல்லாம் இருந்தால்தானே அது கம்ப்யூட்டர்? இல்லாவிட்டால் வெறும் டப்பாதானே?

சென்ற நூற்றாண்டில் இத்தகைய குணங்கள் ஏதோ விசேஷ குணங்களாக, நற்குணங்களாகச் சிறப்பித்துப் பேசப்பட்டன. அத்தகைய குணங்களைக் கொண்டிருப்போர் பெரிய மனிதர்கள், உயர்ந்தவர்கள், உத்தமர்கள் என்று போற்றப்பட்டனர். அந்த ‘நற்குணங்கள்’ இல்லாதவர்கள் சாதாரண மானுடர்களாகச் சொல்லப்பட்டனர். “நான் ஒண்ணும் மகாத்மா கிடையாது. சாமானியன்!” என்கிற டயலாகுகளெல்லாம் பிறந்தன.

காலப்போக்கில், ஒவ்வொரு மனிதனுக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டிய குணங்களெல்லாமே ஏதோ அபூர்வ குணங்கள் போலாகி, “அத்தகைய ‘மேன்மையான’ குணங்கள் மகான்களுக்கு மட்டுமே உரித்தானவை; நம்மைப் போன்ற சாதாரண ஜனங்களுக்கு இல்லை” என்று எல்லோருமே கருதத் தொடங்கிவிட்டார்கள். இன்று உலகில் நூற்றுக்குத் தொண்ணூறு பேரிடம் சுயநலமே மிஞ்சியிருக்கிறது. தன்னலத்தைப் பார்த்துக் கொள்ளாதவன் இளிச்சவாயன் என்கிற எண்ணம் பரவியிருக்கிறது. அடுத்தவரை அலைக்கழிப்பதும், ஏமாற்றுவதும், வஞ்சிப்பதும், முடிந்தவரையில் சுரண்டுவதும்தான் சாமர்த்திய குணங்களாக ஒவ்வொருவர் மனத்திலும் படிந்திருக்கிறது. அதனால்தான் கவியரசு, ‘யாரடா மனிதன் அங்கே... கூட்டி வா அவனை இங்கே...’ என்று பாடி வைத்துவிட்டுப் போனார்.

சமீபத்திய இரண்டு நிகழ்வுகளில் நான் சந்தித்தவர்கள் அனைவருமே சுயநலவாதிகளாகவும், அடுத்தவருக்கு உதவும் மனோபாவம் சிறிதும் அற்றவர்களாகவும்தான் காணப்பட்டார்கள்.

முதல் நிகழ்வு, என் மாமியாரின் இறுதிச் சடங்கு. நேரில் வந்து அவரின் மரணத்தை உறுதிப்படுத்திச் சான்றிதழ் கொடுக்கும்படி எங்கள் தெருவிலேயே உள்ள ஒரு டாக்டரை அணுகினேன். இறந்தவருக்கு ரத்தக் கொதிப்பு இருந்ததா, டயபடீஸ் இருந்ததா என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டே இருந்தார் அவர். “சார், முதல்ல வந்து பார்த்து கன்ஃபர்ம் பண்ணுங்க!” என்றேன். “உங்களுக்கு டெத் சர்ட்டிஃபிகேட் வேணும். அதுக்காகத்தானே வந்திருக்கீங்க?” என்றார். “ஆமாம் சார்!” என்றேன். “என் லெட்டர்ஹெட்ல தந்தா, அதை ஏத்துக்க மாட்டாங்க. அதுக்குன்னு குறிப்பிட்ட ஃபாரம் இருக்கு. எங்கே எரியூட்டப் போறீங்கன்னு முடிவு பண்ணிட்டீங்களா?” என்றார். “அநேகமாகப் பக்கத்துல கண்ணம்மாபேட்டையிலதான் சார் இருக்கும்” என்றேன். “அப்போ அங்கே போய் டெத் சர்ட்டிஃபிகேட் ஃபாரம்னு கேளுங்க. கொடுப்பாங்க. அதை வாங்கி ஃபில்லப் பண்ணி எடுத்துட்டு வாங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்” என்றார்.

வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன். பின்னர்தான் என் பெரிய சகலை, சின்ன சகலை இருவரும் வந்தனர். “டாக்டர் கன்ஃபர்ம் பண்ணாம நாம மேற்கொண்டு எதுவும் பண்ண முடியாது ரவி!” என்றார் பெரியவர். உடனே கூப்பிட்டால் வேறு டாக்டர் யாராவது வருவார்களா என்று அருகில் உள்ள கிளினிக்குகளில் எல்லாம் ஏறி இறங்கினோம். யாரும் இல்லை. நர்ஸுகளைக் கூப்பிட்டால், “ஐயோ! நாங்க வரக் கூடாதுங்க. டாக்டர்தான் வந்து பார்த்துச் சொல்லணும்” என்று மறுத்துவிட்டார்கள். கடைசியில் பழையபடி முன்னே நான் போய்ப் பார்த்த அதே டாக்டரின் வீட்டுக்கே மூணு பேருமாகப் போனோம்.

“என்ன இப்ப வந்து கூப்பிடறீங்க? இப்பவே மணி ரெண்டு ஆகுது. ரெண்டரைக்கெல்லாம் நான் கிளினிக்ல இருந்தாகணும். மத்தவங்க மாதிரி இல்லை நான். ரெண்டரைன்னா ஷார்ப்பா ரெண்டரைக்குக் கிளினிக்ல இருப்பேன். ஸாரி, வேற யாரையாவது கூப்பிட்டுக்குங்க!” என்று பிகு செய்தார். “கொஞ்சம் தயவு பண்ணுங்க!” என்றோம். “முன்னேயே வந்தாரு இவரு. சர்ட்டிபிகேட்டுக்குதானே வந்திருக்கீங்கன்னேன். ஆமான்னாரு. இல்லை, வந்து பார்த்து உறுதிப்படுத்தினீங்கன்னா போதும்னு சொல்லியிருந்தாருன்னா உடனே கிளம்பி வந்திருப்பேன். கடைசி நிமிஷத்துல வந்து தொல்லை பண்ணினீங்கன்னா எப்படி?” என்று சொல்லிவிட்டு ஓர் அறைக்குள் புகுந்துகொண்டுவிட்டார்.

நாங்கள் காத்திருப்பதா, கிளம்புவதா என்று தெரியாமல் சில நிமிடங்கள் வரை அங்கேயே நின்றிருந்தோம். ஐந்து நிமிடத்தில் வெளியே வந்தார். “என்ன?” என்றார். “கொஞ்சம் கூட வந்து... சார், தூரம் அதிகமில்லை. எதிர்ச் சாரியில் பத்துப் பன்னிரண்டு வீடுகள் தள்ளி... என்கிட்டே பைக் இருக்கு. ரெண்டே செகண்ட்ல போயிட்டுத் திருப்பிக் கொண்டு வந்து விட்டுடறேன்” என்று பவ்வியமாகக் கேட்டுக் கொண்டார் சின்ன சகலை. “புரிஞ்சுக்கவே மாட்டேங்கறீங்க. நான் குளிச்சு முடிச்சு ஃப்ரெஷ்ஷா கிளினிக்குக்குப் போறேன். நடுவுல இந்த மாதிரி சாவு வீட்டுக்கு வந்துட்டுப் போனேன்னு என் பேஷண்ட்ஸுக்குத் தெரிஞ்சா ஃபீல் பண்ண மாட்டாங்களா? ப்ச..!” என்று சலித்துக் கொண்டார். பின்னர், “சரி, போங்க வரேன்!” என்று முறைப்பாகச் சொன்னவர், தன் பைக்கில் வந்தார். நான் நடந்து வீடு வந்து சேர்வதற்குள் அவர் வந்து மாமியைப் பார்த்து, மரணத்தை உறுதிப்படுத்திவிட்டு, தன் லெட்டர்ஹெட்டிலேயே சர்ட்டிஃபிகேட்டும் எழுதிக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுவிட்டார். எல்லாம் சில விநாடிகளில் நடந்து முடிந்துவிட்டன.

போரூர் மின்மயானத்திற்குப் போன் போட்டபோது, “ஆறரைக்குள்ள கொண்டு வந்தா வாங்க! இல்லாட்டி பெசன்ட் நகர் கொண்டு போயிடுங்க. இங்கே ஈவினிங் ஆறரை மணி வரைக்கும்தான் உடலை எரிக்கலாம்!” என்றார்கள். ஆனால், வீட்டில் சடங்குகள் முடியவே ஆறரை மணி ஆகிவிட்டது. உடனே அவசரமாக எடுத்துப் போனோம். அங்கே போய்ச் சேரும்போது மணி ஆறே முக்கால். வேறொரு பிணம் எரிந்துகொண்டு இருந்தது. காத்திருக்கச் சொன்னார்கள். அங்கே இருந்த அறிவிப்புப் பலகையில் ‘உடலை எரிக்கக் கட்டணம் ரூ.1,500/- அதற்கு மேல் ஒரு பைசா தர வேண்டாம். மீறி யாராவது கேட்டால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணுக்கு போன் செய்யவும். உங்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது!’ என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் கட்டணத் தொகை போக, மூன்று ஊழியர்களுக்கும் தலா ரூ.500 கொடுத்த பிறகுதான் போன வேலை முடிந்தது.

அடுத்து சாஸ்திரிகள்! அவரும் தன் பங்குக்குத் தனக்கு அவசர ஜோலி இருப்பதாகவும், போய்விட்டு மறுநாள் வந்து மீதிக் காரியமான ‘சஞ்சயன’த்தை முடித்துத் தருவதாகவும் பரபரத்தார். “இங்கே மின்மயானத்துக்குக் கொண்டு வந்ததே கையோடு எல்லாக் காரியங்களையும் முடிச்சுடலாம்னுதானே! ஒரு அரை மணி இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போயிடுங்க” என்று கெஞ்சினோம். “ஆட்டோக்காரன் வெயிட்டிங்ல இருக்கான்...” - “இருக்கட்டும். நாங்க ஆட்டோ சார்ஜ் என்ன உண்டோ, அதைக் கொடுத்து உங்களை அனுப்பி வைக்கிறோம்!” - “அது சரி, அவன் 300 ரூபா கேப்பான். கொடுப்பீங்களா? ம்ஹூம், அதெல்லாம் சரியா வராது.” - “கொடுக்கிறோம். போதுமா? அவன் ஆயிரம் ரூபா கேட்டாக் கூட கொடுக்கிறோம். இருந்து முடிச்சுக் கொடுத்துட்டுப் போங்க!” - “சரி, அப்படியே எனக்கும் என் அசிஸ்டெண்ட்டுக்கும் பேசினதுல தலா ஐந்நூறு சேர்த்துக் கொடுங்க!” என்று சொல்லிவிட்டுப் பையைத் திறந்தார் சாஸ்திரிகள். மீதிக் காரியத்துக்குத் தேவையான அப்பம், பொரி முதலானவை அதில் தயாராக இருந்தன!

ரண்டாவது நிகழ்வு - இந்தியன் ஓவர்சீஸ் பாங்க்கில் நிகழ்ந்தது. என் அப்பாவின் பென்ஷன் பணம் அங்கே உள்ள அவர் சேமிப்புக் கணக்கில்தான் சேரும். அவருக்கு வயது 80. பொதுவாகவே அங்குள்ள ஊழியர்கள் சரிவர பதில் சொல்வதில்லை என்று அடிக்கடி வருத்தப்பட்டிருக்கிறார் அப்பா. லோன் வாங்குவதற்காக சில ஆண்டுகளுக்கு முன்னால் தன் பென்ஷன் புத்தகத்தை அந்த வங்கியில் கொடுத்துள்ளார். போன மாதம் லோன் முடிந்துவிட்டது. பென்ஷன் புத்தகத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார்கள். சரியென்று இந்த மாதம் முதல் வாரத்தில் போய்க் கேட்டிருக்கிறார். அவர்கள் ஒரு ஃபாரத்தைக் கொடுத்து, “இதைப் பூர்த்தி செய்து அடுத்த வாரம் கொண்டு வாங்க” என்று சொல்லி அனுப்பி விட்டிருக்கிறார்கள். வீட்டுக்கு வந்து பார்த்தால், அதில் எந்த ஒரு தகவலையும் பூர்த்தியே செய்ய முடியாத மாதிரி, சம்பந்தமில்லாத கேள்விகள். ஏதேதோ ஜி.ஓ. எண்கள், ரிட்டையரான தேதி, முதல் முறை பெற்ற பென்ஷன், உயர்வு போட்ட வருடங்கள், அந்த உத்தரவு எண்கள் எனக் கேட்கப்பட்டிருந்தன. எனக்குத் தெரிந்து, அந்த ஃபாரம் முதன்முறையாக பென்ஷன் புத்தகம் பெற விரும்புகிறவர்களுக்கானது என்றே தோன்றியது. கொடுத்த புத்தகத்தைத் திரும்பப் பெறுவதற்கானது அல்ல!

இரண்டு நாட்களுக்கு முன்னால், கொட்டும் மழையில் அதை எடுத்துக்கொண்டு பாங்குக்குப் போனார் அப்பா. “இந்த ஃபாரத்தைப் பூர்த்தி செய்யவே முடியவில்லை; உத்தரவு எண்கள் கேட்டுள்ளீர்கள். இதுவரை எனக்கு எந்த உத்தரவும் வந்ததே இல்லையே! பென்ஷன் பணம் வங்கி வைப்புக் கணக்கில் சேரும். அவ்வளவுதான்!” என்று திருப்பிக் கொடுத்துள்ளார். “இவங்கள்ளாம் பூர்த்தி பண்ணிட்டு வந்திருக்காங்களே, எப்படி? வாத்தியாரா இருந்திருக்கீங்க, நீங்களே தெரியலைன்னு சொன்னா நாங்க என்னத்தைப் பண்றது?” என்று கேலியும் கடுப்புமாகச் சொல்லியிருக்கிறார்கள். “அவங்க எப்படிப் பூர்த்தி பண்ணாங்கன்னு எனக்குத் தெரியாது. சம்பந்தமில்லாததையெல்லாம் கேட்டு பூர்த்தி பண்ணச் சொன்னா, எப்படிப் பண்றது?” என்று திருப்பிக் கேட்டிருக்கிறார் அப்பா. “அதுசரி, பெயர்னு இருக்கிறதைக் கூட உங்களாலே பூர்த்தி பண்ண முடியாதா? உங்க பேர் கூட உங்களுக்குத் தெரியாதா? அதைக் கூட நாங்கதான் எழுதிக்கணுமா?” என்று கேட்டிருக்கிறார்கள். “அட, என் பேரு எனக்கு நல்லாவே தெரியும் சார்! இந்த ஃபாரமே சரியா இல்லைங்கிறப்போ, என் பேரை மட்டும் எழுதிட்டு வந்தா, ஃபாரத்தை வீணாக்கிட்டேன்னு சொல்ல மாட்டீங்களா?” என்றிருக்கிறார். இப்படியே வாக்குவாதம் முற்றி, அப்பாவுக்கு பிபி எகிறிவிட்டது. சத்தம் போட்டிருக்கிறார்.

“போய் அடுத்த வாரம் வாங்க!” என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லிவிட்டார்கள். “இல்லை. என் புத்தகத்தை வாங்கிட்டுதான் போவேன். எண்பது வயசுக் கிழவனை இப்படியா அலைக்கழிப்பீங்க?” என்று கேட்டிருக்கிறார் அப்பா. அப்புறம் அங்கேயே வேறு ஒரு அலுவலரைப் பார்க்கச் சொல்லியிருக்கிறார்கள். அவரிடம் போனால், “உங்க பழைய பென்ஷன் புத்தகமா? அது எங்க கிட்டே எப்படி இருக்கும்? நீங்கதானே வெச்சிருக்கணும்?” என்றார் அவர். “இல்லை சார், சில வருஷத்துக்கு முன்னே லோன் வாங்கினேன். அப்போ பென்ஷன் புத்தகத்தைக் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னீங்க. கொடுத்தேன்” என்றார் அப்பா. “இல்லையே! பென்ஷன் புத்தகத்தை வாங்கிக்கிட்டுதான் லோன் தரணும்னு புரொசீஜர் ஒண்ணும் இல்லையே! வீட்டுலேயே போய் நல்லா தேடிப் பாருங்க!” என்றிருக்கிறார் அவர்.

“அட என்ன சார், இது கூடவா எனக்குத் தெரியாது! போன மாசம் லோன் முடிஞ்சதுமே வந்து கேட்டேன். ‘அடுத்த லோன் போடறீங்களா? போட்டீங்கன்னா உடனே கிளெய்ம் பண்றோம்’னீங்க. வேணாம், புத்தகம்தான் வேணும்னு சொன்னேன். ‘சரி, அடுத்த மாசம் வா’ன்னீங்க. வயசானவனை ஏன் சார் இப்படி அலைக்கழிக்கிறீங்க?” என்று கொஞ்சம் காரமாகவே கேட்டிருக்கிறார் அப்பா.

“அப்படியா!” என்று மேஜை மேலேயே தன் வலது பக்கமாக இருந்த, பழைய காலத்து எஸ்.எஸ்.எல்.சி புத்தகம் போன்ற காலிகோ அட்டை போட்ட பென்ஷன் புத்தகக் கட்டை எடுத்து நடுவில் வைத்து அந்த அலுவலர் பிரிக்க, மேலேயே முதலாவதாக இருந்தது அப்பாவின் பென்ஷன் புத்தகம். எடுத்துக் கொடுத்தார் அவர். அப்பா வாங்கிக் கொண்டு வந்துவிட்டார்.

இரண்டு மேஜைகளுக்கு நடுவில் எந்தப் பிரயத்தனமும் இல்லாமல் மிகச் சுலபமாக முடிகிற காரியத்துக்கு ஈவு இரக்கமே இல்லாமல், 80 வயதாகும் பெரியவராயிற்றே என்றுகூடப் பார்க்காமல், இரண்டு மாதங்களாக அலைய விட்டிருக்கிறார்கள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊழியர்கள்.

மாதா மாதம் சம்பளம் வாங்கிக்கொள்வதற்கு இவர்கள் பே-ஸ்லிப்பில் கையெழுத்துப் போடுவார்களா, அல்லது அதற்குக் கூடச் சோம்பல்பட்டுக்கொண்டு பேசாமலே இருந்துவிடுவார்களா என்று தெரியவில்லை.

‘அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடியாரொடும் மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே’

என்று திருமூலர் சொல்லி வைத்த திருமந்திரம் ஏதோ மற்றவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கும்தான் என்று ஒவ்வொரு மனிதனும் உணர்ந்தால் கொஞ்சமாவது அவன் உருப்பட வழியுண்டு! இல்லாவிட்டால் இங்கேயும் ஒவ்வொருத்தருக்குள்ளும் ராஜபக்‌ஷேக்கள் இருக்கத்தான் செய்வார்கள். என்ன, விகிதாசாரம் கொஞ்சம் வேறுபடும். அவ்வளவே!

வேறு என்னத்தைச் சொல்ல?

*****
எந்த உயிரினமும் தன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு ஜந்துவைக் கண்டு பொறாமைப்படுவதில்லை - மனிதனைத் தவிர!

அவரும் ஒரு தாயார்!

பெற்ற தாயைத் தவிர ஒரு மனிதனுக்கு வேறு சில தாயார்களும் உண்டு. குருவின் பத்தினியும் ஒரு தாய்தான்; அண்ணனின் மனைவியும் ஒரு தாய்தான்; மனைவியின் தாயாரும் (மாமியார்) இவனுக்கும் தாய்தான்.

அவனுக்கும் ‘he’, அவருக்கும் ‘he’ என பெரியவர், சிறியவர் வித்தியாசமில்லாத, மரியாதை தெரியாத பாஷை ஆங்கிலம் என்று சொல்வதுண்டு. ஆனால், அந்த மொழியில்தான் மனைவி வழி உறவுகளும் கணவனுக்கும் சட்டப்படியான அதே உறவுகள்தான் என்கிறவிதமாக in-laws என்கிற இணைப்பைக் கொடுத்து, ஃபாதர்-இன்-லா, மதர்-இன்-லா, பிரதர்-இன்-லா, சிஸ்டர்-இன்-லா என்று சிறப்பிக்கிறது.

என் மாமனார் திரு.சுந்தரம் ஒரு வயலின் கலைஞர். மைசூர் சௌடய்யாவிடம் பயின்று, அவரின் அன்புக்குப் பாத்திரமானவர். திருச்சி ஆல் இண்டியா ரேடியோவில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர். அவருக்கு மூன்றும் பெண்கள். மகள்களின் திருமண வைபவங்களைப் பார்க்கக் கொடுத்து வைக்காமல், 1982-ல், திருவையாறு உற்சவத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு ஹார்ட் அட்டாக் வந்து, சட்டென்று மரணித்துவிட்டார். அவரின் மூத்த மகள் விஜயா ‘பெல்’ நிறுவனத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர்தான் தன் கணவரின் பரிபூரண ஒத்துழைப்போடு, தன் தங்கைகள் இருவருக்கும் விமரிசையாகத் திருமணம் செய்து வைத்தார்.

அவரின் அடுத்த தங்கை உஷாவைத்தான் 17 ஆண்டுகளுக்கு முன் நான் திருமணம் செய்து கொண்டேன். எங்கள் திருமணம் முடிந்ததும், திருச்சியில் என் மாமியாரும் கடைசி பெண் ராதிகாவும் மட்டும் தனியாக இருக்க வேண்டாம் என்று, அவர்களையும் அடுத்த ஓராண்டுக்குள் சென்னைக்கு வரவழைத்து, எங்களோடு வைத்துக் கொண்டோம். சீக்கிரமே கடைசி பெண்ணுக்கும் ஒரு நல்ல வரன் பார்த்துத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார் அக்கா.

அக்காவின் குடும்பமும் சரி, தங்கை ராதிகா வாழ்க்கைப்பட்ட இடமும் சரி... பெரிய கூட்டுக் குடும்பம். அங்கேயெல்லாம் மாமியால் அதிக பட்சமாக ஒரு வாரம்கூடத் தங்க முடியாது. கடைசி பெண் திருமணம் முடிந்த கையோடு, தன்னை ஏதாவது ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்துவிடுமாறு அக்காவை அவர் நச்சரித்துக் கொண்டு இருந்தார். “மாமி! உங்களைச் சென்னைக்கு அழைத்து வந்தது நான்தான். நீங்கள் எங்கேயும் போக வேண்டாம். என்னுடனேயே இருங்கள். உங்களுக்கு இதில் எந்தத் தயக்கமும் வேண்டாம். மகன் இல்லையே என்கிற குறையே வேண்டாம். நான் உங்களுக்கு ஒரு மகன் மாதிரிதான்!” என்று அவரைச் சமாதானப்படுத்தி எங்களுடனேயே தங்க வைத்துக் கொண்டோம்.

என் இரு குழந்தைகள் பிறந்தபோதும் அவர்தான் கூட இருந்து கவனித்துக் கொண்டார். வளர்த்து ஆளாக்கினார். பதினேழு வருடம் எங்களுடனேயே இருந்தார்.

நேற்று (நவம்பர் 17) அரவிந்த அன்னையின் சமாதித் திருநாள். அன்னையின் தீவிர பக்தையாகத் திகழ்ந்த, என் இன்னொரு தாயாரான மாமியார் எஸ்.ஞானாம்பாள், அன்னை முக்தியடைந்த தினத்திலேயே அன்னையுடன் ஐக்கியமாகிவிட்டார். தள்ளாமையின் காரணமாக அவரது உடல் நிலை சில ஆண்டுகளாகவே படுத்திக் கொண்டு இருந்தாலும், அவரின் மரணம் ஒரு தூக்கம் போல் நேற்று மதியம் ஒரு மணியளவில் அமைதியாக நிகழ்ந்தது.

தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தையும் விடாமல் பார்ப்பார். அது கதைச் சம்பவம் என்பதை மறந்து, அந்தக் கதாபாத்திரங்களோடு ஐக்கியமாகி, அதில் யாராவது கஷ்டப்பட்டால், அடி உதை வாங்கினால், ‘ஐயோ! பாவம்டீ...’ என்று மாலை மாலையாகக் கண்ணீர் விட்டு அழத் தொடங்கிவிடுவார். அவரைச் சமாதானப்படுத்துவதற்குள் என் மனைவிக்குப் போதும் போதும் என்றாகிவிடும். சில சமயம் ஒரு படி மேலே போய், ‘அந்தக் குழந்தைக்கு உடம்பு குணமாகணும் பிள்ளையாரப்பா! உனக்கு சூறைத் தேங்காய் உடைக்கிறேன்’ என்றெல்லாம் தீவிரமாக வேண்டிக் கொள்வார். அடுத்தடுத்த எபிஸோடுகளில் குழந்தை குணமானதும், ‘பகவானுக்கு வேண்டிக்கிட்டிருக்கேன். பகவானை ஏமாத்தக் கூடாது. எனக்காக ஒரு தேங்காய் வாங்கி உடைச்சுடுடீ’ என்று என் மனைவியை நச்சரிப்பார். “சரிம்மா! உடைக்கிறேன். ஆனா, இதெல்லாம் கற்பனைக் கதை. சும்மா சும்மா இப்படியெல்லாம் வேண்டிக்கிட்டு என்னைப் படுத்தாதே!” என்று என் மனைவி கடுப்படித்தாலும், அப்போதைக்குச் சமாதானமாவாரே தவிர, மீண்டும் சீரியல் பார்த்தால், அதில் யாராவது கஷ்டப்பட்டால் கலங்கிப் போவார். சீரியல் பார்க்காதே என்றாலும் கேட்க மாட்டார். “சரிம்மா! வேண்டிக்கிட்டாலும் பெரிசா வேண்டிக்காதே. சிம்பிளா கற்பூரம் ஏத்தறேன்னு வேண்டிக்கோ போதும்” என்பாள் என் மனைவி. இவர்களின் போராட்டங்கள் எனக்கும் என் குழந்தைகளுக்கும் மகா வேடிக்கையாக இருக்கும்.

நேற்று மாலை ஆறு மணியளவில் சம்பிரதாய சடங்குகள் நிறைவேறின. காரியங்கள் நடந்தன. மாமியாரின் உடலை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு போரூர் மின்மயானத்துக்குக் கொண்டு சென்றோம்.

முதன்முறையாக மின்மயானத்தைப் பார்க்கிறேன். பெரிய கல்யாண மண்டபம் போல இருந்தது. மொசைக் தரைகள். சுவர்களில் டைல்ஸ் பதிக்கப்பட்டிருந்தது. சுத்தமாக இருந்தது. விரக்தியிலும் பயத்திலும் நம் மனத்தை ஆழ்த்தும் சாவின் அடையாளங்கள் ஏதுமின்றி, தெளிவாக இருந்தது. ‘மயான அமைதி’ என்கிற வார்த்தையே என்னை பயமுறுத்தும். அதுகூட இங்கே அர்த்தம் இழந்திருந்தது. சீருடை அணிந்த ஊழியர்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டு இருந்தனர்.

மருத்துவரின் சான்றிதழைக் காட்டியதும் மளமளவென்று வேலைகள் நடந்தன. படிகளில் ஏறி, மேலே ஒரு ஹாலுக்கு மாமியின் உடலை எடுத்துப் போனோம். கிரில் கதவுக்கு அப்பால், பெரிய ஹால் நடுவே அலுமினிய கன செவ்வகக் கூடாரம் ஒன்று பெரிதாக இருந்தது. பெரிய புகைபோக்கி வானை நோக்கி உயர்ந்திருந்தது. ஹால் ஓரமாக கீழே இறங்கிச் செல்லவும் படிகள் இருந்தன. ஏதோ கரும்பாலைக்கு வந்த உணர்வு ஏற்பட்டது. அலுமினிய கூடாரத்துக்கு முன்புறத்தில் கறுப்புக் கதவு மூடியிருந்தது. அதன் முன்னே இருபதடி நீளத்துக்குத் தண்டவாளம் நீண்டிருந்தது. முனையில் ஒரு லீவர்.

கொண்டு போன மாமியின் உடலை அந்தத் தண்டவாளத்தின் மையத்தில் படுக்க வைத்தோம். ஊழியர் ஒருவர் லீவரைப் பிடித்து இழுக்க, தண்டவாளம் மேல் நோக்கி உயர்ந்தது. மற்றொரு ஊழியர் ஒரு ஸ்விட்சை இயக்க, கறுப்புக் கதவு உயரே நகர்ந்து, வழி விட்டது. அனல் வெளியே வரை அடிக்க, உள்ளே பார்த்தேன். நெருப்பின் வெறியாட்டம். தலையை ஸ்கேன் எடுக்க, நகரும் பலகையில் படுக்க வைத்து, எம்.டி. ஸ்கேன் இயந்திரத் துவாரத்துக்குள் செலுத்தப்படுவது போன்று, மாமியின் உடல் உள்ளே செலுத்தப்படும்போதே தீப்பிடித்துக் கொண்டது தெரிந்தது. கறுப்புக் கதவு இறங்கி மூடிக் கொண்டது. உயர்ந்த தண்டவாளம் தாழ்ந்து, நெருப்புப் படுக்கையில் மாமியின் உடலைக் கிடத்திவிட்டுச் சமர்த்தாக வெளியே வந்து, தன்னிடத்தில் பொருந்திக் கொண்டது.

அரை மணி நேரம்தான். ஒரு தகர டிரேயில் நெருப்பாகக் கொதிக்கும் எலும்புச் சில்லுகளும் சாம்பலுமாகக் கொண்டு வந்து நீட்டினார் ஊழியர். சாதாரண முறை தகனத்தில் மறுநாள்தான் சுடுகாட்டுக்குச் சென்று, ஒரு மண் சட்டியில் எலும்புகளைப் பொறுக்கிப் போட்டு, பால் ஊற்றி, ‘சஞ்சயனம்’ என்கிற சடங்கை நிகழ்த்த வேண்டியிருக்கும். மின்மயானத்தில் உடனடி தகனம். எனவே, கையோடே அந்தச் சடங்கையும் நிகழ்த்தி (சயனம் என்றால் உறக்கம்; சஞ்சயனம் என்றால், நிரந்தர உறக்கம் என்று பொருள்படும் என நினைக்கிறேன். ஜீவி என்றால் உயிரோடு இருப்பவன்; சஞ்சீவி என்றால், என்றும் அழியாமல் வாழ்ந்திருப்பவன்!) கடலில் அஸ்தியைக் கரைத்துவிட்டு, இரவு 9 மணி சுமாருக்கு வீடு திரும்பினோம்.

‘ஊரெலாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டுச்
சூரியங் காட்டிடைக் கொண்டு போய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந்தாரே!’ என்கிறார் திருமூலர்.

நினைப்பொழிய இன்னும் சில மாதங்களாவது ஆகும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு என் மனைவி மீதும், என் மீதும், என் குழந்தைகள் மீதும் பாசம் கொண்டிருந்தவர் என் மாமியார்.

அவர் வழக்கமாகப் படுத்திருக்கும் அறை மட்டுமல்ல; அனைவரின் இதயங்களும் வெறிச்சோடியிருக்கிறது.

சடுதியில் சாம்பலாகி, விநாடியில் கரைந்துவிட்டார் மாமியார். அவரின் நினைவுகள் அத்தனை எளிதில் சாம்பலாகிக் கரையும் என்று தோன்றவில்லை.

*****
இனிமையான உறவுகள் அமைவது, மற்றவர்களை நாம் சரியாகப் புரிந்து கொள்கிறோமா என்பதில் இல்லை; தவறாகப் புரிந்து கொள்வதை எப்படித் தவிர்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது!

மகரம் என்னும் மாமனிதர்!

சிலரின் அருமை, பெருமைகள் அவரோடு நாம் நெருங்கிப் பழகிக்கொண்டு இருக்கும் காலத்திலோ, அவர் உயிரோடு இருக்கும்போதோ நமக்குத் தெரிவதில்லை. அவரின் மறைவுக்குப் பின்பே தெரிய வருகின்றன. அப்படிச் சமீபத்தில் என் மதிப்பில் மிக உயர்ந்தவர் பழம்பெரும் எழுத்தாளர் ‘மகரம்’ அவர்கள்.

இவர் வேறு யாருமல்ல; என் மதிப்புக்குரிய நண்பர் மார்க்கபந்து அவர்களின் தந்தையார்தான்.

மார்க்கபந்துவுடன் நட்பு ஏற்பட்டுப் பழகத் தொடங்கிய பின்னர், பலப்பல முறை அவர்களின் இல்லத்துக்குச் சென்றிருக்கிறேன். அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தியிருக்கிறேன். எனக்குப் பெண் பார்க்கச் சென்றபோது, எங்களோடு மார்க்கபந்துவையும் அவரின் தாயாரையும்கூட அழைத்துச் சென்றிருந்தோம். எங்கள் சார்பாகப் பெண் வீட்டாருக்கு என் சம்மதத்தைச் சொன்னவர் மார்க்கபந்துவின் தாயார்தான்.

நான் மார்க்கபந்துவின் வீட்டுக்குச் சென்றபோதெல்லாம் அதிகம் பேசியது அவரின் தகப்பனார் ‘மகரம்’ அவர்களுடன்தான். தொடர்ந்து நான்கைந்து மணி நேரம் கூடப் பேசிக்கொண்டு இருந்திருக்கிறேன். அவரும் சலிப்பில்லாமல் பழைய கதைகளையெல்லாம் சொல்வார். அந்தக் காலத்தில் சென்னை எப்படியிருந்தது (‘டவுட்டன் என்று சொல்வது சரியில்லை; டஃப்ட்டன் என்பதுதான் சரியான உச்சரிப்பு!’) என்பதிலிருந்து, ஏஜிஎஸ் ஆபீசில் வேலை செய்த அனுபவங்கள், எழுத்தாளர்கள் ஒவ்வொருவரின் குணங்கள், ராஜாஜியைச் சந்தித்த அனுபவம் எனப் பலவற்றைச் சுவாரஸ்யமாகப் பேசிக்கொண்டே இருப்பார்; நான் கேட்டுக் கொண்டே இருப்பேன்.

அவர் பேசும்போது ஒரு விஷயத்தை நான் வேடிக்கையாகக் கவனிப்பது உண்டு. அதாவது, ஒரு விஷயத்தை ஆரம்பித்தார் என்றால், அதைத் தொட்டுத் தொட்டு வெவ்வேறு லின்க் பிடித்து, தாவித் தாவிச் சென்று, சொல்ல வந்த விஷயத்திலிருந்து திசை மாறி, ரொம்ப தூரம் தள்ளிப் போய்விடுவார். கடைசியில், “சரி, இப்போ இதை எதற்காகச் சொல்ல வந்தேன்?” என்று கேட்பார். சுவாரசியமாகக் கேட்டுக்கொண்டே இருப்பேனே தவிர, எனக்கும் எதற்காக அதைச் சொன்னார் என்று பேச்சின் ஆரம்ப நுனி தெரியாது. உதாரணமாக, ஒரு எழுத்தாளரைப் பற்றிய ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லத் தொடங்கினார் என்றால், அவரை எந்தத் தெருவில் முதன்முதலில் தாம் பார்த்தோம் என்பதை விவரித்து, ‘அப்போ அவர் வால்டாக்ஸ் ரோடில்தான் குடியிருந்தார்... வால்டாக்ஸ் ரோடுன்னு அதுக்கு ஏன் பேர் வந்தது தெரியுமா? அது ரொம்ப சுவாரசியமான கதை. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்துல...’ என்று மாறி மாறிப் போய்க்கொண்டே இருப்பார். அவர் சொல்கிற விஷயங்கள் எல்லாமே சுவாரசியமாக இருக்கும் என்பதால், நானும் குறுக்கிடாமல் அவர் சொல்வதையெல்லாம் கேட்பேன்.

அவரோடு அத்தனை பழகியும், அவர் தன் எழுத்தைப் பற்றி என்னிடம் கடைசி வரையில் ஒரு வார்த்தை சொன்னதில்லை. ‘அப்பா அந்தக் காலத்தில் நிறைய எழுதியிருக்கார்’ என்று மார்க்கபந்து எப்போதோ ஒருமுறை சொன்னதோடு சரி. நான் மகரத்தைச் சந்தித்த சமயத்தில், அவர் குமுதம் பத்திரிகையின் பரிசீலனைக்கு வரும் சிறுகதைகளைப் படித்துப் பரிசீலித்துக் கொடுத்துக்கொண்டு இருந்தார். தவிர, மலேசியாவிலிருந்து வெளியாகும் செய்தித் தாள் (தமிழ்நேசன் என்று நினைக்கிறேன்) ஒன்றுக்குத் தமிழ்நாட்டுச் செய்திகளைத் தொகுத்து எழுதி அனுப்பிக்கொண்டு இருந்தார்.

சமீபத்தில் ஆனந்த விகடன் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக 1944-ம் ஆண்டு இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது, ‘மகரம்’ எழுதிய பல நகைச்சுவைக் கட்டுரைகளைப் பார்த்து வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தேன். “ஐம்பதுகளில் அப்பா ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார்” என்று மார்க்கபந்து சொல்லியிருக்கிறாரே தவிர, அப்பாவின் படைப்புகள் எதையும் இன்னின்ன தேதியில், இந்த இந்த இதழ்களில் வெளியானது என்று குறித்து வைத்திருக்கவில்லை.

ஆரம்பத்தில் கல்கி பத்திரிகையில் எழுதத் தொடங்கியவர் ‘மகரம்’. பின்புதான் விகடனிலும் எழுதத் தொடங்கினார். இவரது இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். இவருக்கு ‘மகரம்’ என்று புனைபெயர் வைத்தவர் தேவன். மகரம் என்பது கே.ஆர்.கல்யாணராமனின் லக்னம்.

லா.ச.ரா., ரஸவாதி, தீபம் நா.பார்த்தசாரதி, எல்லார்வி, அநுத்தமா, ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன் போன்ற பல எழுத்தாளர்களோடு நெருங்கிய நட்பு கொண்டவர் மகரம். தான் பெரிய படைப்பாளியாக இருந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், மற்ற பல எழுத்தாளர்களிடமிருந்து கதைகளைக் கேட்டு வாங்கிப் பல புத்தகத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். புகழ்பெற்ற 101 எழுத்தாளர்களிடமிருந்து சிறுகதைகள் கேட்டு வாங்கித் தொகுத்து, வானதி பதிப்பகத்தின் மூலம் நான்கு தொகுதிகளாக அவற்றை வெளியிட்டார்.

காந்திஜியின் கொள்கைகளை மையப்படுத்தி, கல்கி, ராஜாஜி, புதுமைப்பித்தன், அகிலன் என 50 எழுத்தாளர்களின் கதைகளைத் தொகுத்து இவர் வெளியிட்ட ‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகத்துக்கு அந்தக் காலத்தில் பெரிய வரவேற்பு. அது சம்பந்தமாக ‘மகரம்’ முன்பு சொன்ன சுவாரசியமான சம்பவம் ஒன்று என் நினைவுக்கு வருகிறது.

‘காந்தி வழிக் கதைகள்’ புத்தகம் தயாரானதும், முதல் பிரதியை எடுத்துக்கொண்டு ராஜாஜியைப் பார்க்கச் சென்றிருந்தாராம் மகரம். ராஜாஜியிடம் புத்தகத்தைக் கொடுத்ததும், அவர் வாங்கி முதல் கதை யாருடையது என்று பார்த்திருக்கிறார். ‘கல்கி’யின் கதை. ‘சந்தோஷம்’ என்று திருப்பிக் கொடுத்துவிட்டாராம். “ஐயா! உங்கள் கதையும் இதில் இடம்பெற்றிருக்கிறதே, பார்க்கவில்லையா?” என்று கேட்டாராம் மகரம். “அப்படியா! பார்த்தேனே... இல்லையே? கல்கி எழுதிய கதைதானே வந்திருக்கிறது!” என்றாராம் ராஜாஜி. அதாவது, முதல் கதையாக தன் கதை இடம்பெறவேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார் அவர்.

மகரம் ‘காந்தி வழிக் கதைகளை’த் தொகுத்தபோது, அமரர் ஆனவர்களின் கதைகளை ஆரம்பத்தில் போட்டுவிட்டு, அதன்பின்னர் உயிரோடு உள்ளவர்களின் கதைகளை சீனியாரிட்டிப்படி தொகுத்திருக்கிறார். இதை ராஜாஜியிடம் விளக்கும் விதமாக, “ஐயா! அமரர் ஆனவர்களின் கதைகளை முதலில் வெளியிட்டுவிட்டேன். அடுத்ததாக உங்கள் கதையைத்தான் முதலாவதாக வெளியிட்டிருக்கிறேன்” என்றாராம். ராஜாஜி அர்த்தபுஷ்டியுடன் பார்க்க, மகரத்துக்குத் தான் சொன்னதில் உள்ள தவறு புரிந்ததாம். பெரியவர்களுடன் பேசும்போது நாம் எத்தனைக் கவனமாகப் பேச வேண்டும் என்பதை விளக்க மகரம் சொன்ன சம்பவம் இது.

தனக்கு அநாயாச மரணமே சம்பவிக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லி வருவார் மகரம். அநாயாச மரணம் என்றால், நோய், படுக்கை என்று இழுத்துப் பறித்துக்கொண்டு இராமல் எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராத விதமாக சட்டென்று ஆயுள் முடிந்துவிடுவது.

கேட்டவரம்பாளையம் என்று ஒரு ஊர். (இந்த ஊரை மையமாக வைத்து ‘கேட்டவரம்’ என்னும் தலைப்பிலேயே ஒரு நாவல் எழுதியிருக்கிறார் ‘அநுத்தமா’.) அங்கே ஆண்டுதோறும் ஸ்ரீராமநவமியை ஒட்டி நடைபெறும் சம்பிரதாய பஜனைக் கூட்டம் பிரசித்தி பெற்றது. அதில் கலந்துகொள்வதற்காக, 2001-ம் ஆண்டு, தமது மனைவியோடு காரில் புறப்பட்டுச் சென்றார் மகரம். போகிற வழியில் காரிலேயே அவருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, திடீர் மரணம். மகரம் ‘கேட்ட வரம்’ கிடைத்துவிட்டது!

*****
யார் தன்னோடு இருக்கும்போது நம்மையும் பெரிய மனிதர் என்று உணரச் செய்கிறாரோ, அவரே பெரிய மனிதர்!

தேள் வந்து பாயுது காதினிலே..!

“மூட்டைப் பூச்சி கடித்ததற்கே இத்தனை அருமையான பதிவா? பாராட்டுக்கள். உங்களை அடுத்தடுத்து தேள், பாம்பு ஆகியவை கடிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்” என்று எனது ‘ஒரு நூறு கொலை’ பதிவுக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார் தோழி கிருபாநந்தினி.

நான் ஏழாம் வகுப்பு முடிக்கும் வரையில் கிராமத்தில் வசித்ததால் தேள், பாம்பு ஆகியவற்றுடன் பரிச்சயம் உண்டு. நாகப் பாம்பு, கட்டுவிரியன், பச்சைப் பாம்புகளை வயல்வெளிகளிலும், தண்ணீர்ப் பாம்புகளைக் கிணறுகளிலும் பார்த்திருக்கிறேன். ஆனால், அவற்றிடம் ஒருபோதும் கடிபட்டதில்லை.

ஒருமுறை சங்கீதமங்கலம் கிராமத்தில் நடு ரோட்டில் ஒரு தவளையைக் கொம்பேறிமூக்கன் பாம்பு துரத்திக்கொண்டே ரொம்ப தூரம் சென்றதை, வெற்றி தோல்வி அறிய அவற்றின் பின்னாலேயே ஓடிப் போய்ப் பார்த்திருக்கிறேன். ஓரமாக மரம் செடி கொடிகளுக்கிடையில் ஓடித் தப்பித்துக் கொள்ளாமல், சீரியல் கதாநாயகி மாதிரி அந்தத் தவளை நடு ரோட்டிலேயே தாவித் தாவிச் சென்றுகொண்டு இருக்க, தரையில் பெரும்பான்மை உடல் படாமல் மிதக்கிற மாதிரி அந்தக் கொம்பேறிமூக்கன் பாம்பு சர்... சர்ரென்று துரத்திச் சென்ற காட்சி படு த்ரில்லாக இருந்தது. கிட்டத்தட்ட அரை பர்லாங் தூரம் துரத்திச் சென்று தவளையை லபக்கிவிட்டது அந்தப் பாம்பு.

பச்சைப் பாம்பு வகையைச் சேர்ந்தது கொம்பேறிமூக்கன். அது கடும் விஷமுள்ள பாம்பா, விஷமற்ற வகையைச் சேர்ந்ததா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கொம்பேறி மூக்கனைப் பற்றி ஒன்று சொல்வார்கள். அது யாரையாவது கொத்திவிட்டுக் கிடுகிடுவென்று ஏதாவது ஒரு மரத்தின் உச்சியில் ஏறிக் கொள்ளுமாம். அங்கிருந்து சுடுகாடு இருக்கும் திசையை நோக்கிப் பார்க்குமாம் - தான் கொத்திய ஆளைக் கொண்டு வந்து எரிக்கிறார்களா என்று!

நாங்கள் குடியிருந்த வீடுகளுக்குள் பலமுறை பாம்புகள் வந்திருக்கின்றன. எங்கள் வீட்டு வாசலிலேயே எங்களின் வளர்ப்பு நாய் போல் எந்நேரமும் படுத்திருக்கும் தெரு நாய் ஒன்று, எங்கள் வீட்டுக்குள் நுழைந்துவிட்ட பாம்பை மிக சாமர்த்தியமாக ஒரு மணி நேரம் வேட்டையாடிக் கொன்ற காட்சி படு த்ரில்லானது. இன்றைய வசதி போல் அந்நாளில் டிஜிட்டல் வீடியோ கேமரா இருந்திருந்தால் அதைப் படமாக்கி யூ-டியூபில் சேர்த்திருப்பேன்.

நாங்கள் குடியிருந்த கிராமத்து வீடுகள் எல்லாவற்றிலுமே தேள் அனுபவம் கிடைத்திருக்கிறது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில், பத்துப் பன்னிரண்டு கிலோ மீட்டர் தொலைவில், மெயின் ரோட்டிலிருந்து இரண்டு மைல் தொலைவு உள்ளடங்கி இருக்கும் அதனூர் என்கிற கிராமத்தில் நாங்கள் வசித்த குடிசை வீட்டில் தினம் தினம் தேள் வரும். ஒன்று இரண்டல்ல... எப்படியும் ஏழெட்டாவது தேறும்! படுத்திருக்கும்போது சுவரில் தேள் நகர்வது தெரியும்; கூரையில் தொற்றியிருப்பது தெரியும். சுவர் ஓரமாக ஓடுவது தெரியும். இப்போது நினைத்தால் திகிலாக இருக்கிறது; ஆனால், அந்நாளில் எப்படி நாங்கள் பயமில்லாமல் இருந்தோம் என்று ஆச்சர்யமாக இருக்கிறது.

ஒருமுறை, அம்மா காலையில் காபி போடுவதற்காக ஃபில்டரில் வழக்கம்போல் காபி பொடி போட்டு வெந்நீர் ஊற்றிவிட்டுச் சிறிது நேரம் கழித்துப் பார்த்தபோதும், டிகாக்‌ஷன் இறங்கவேயில்லை. பழைய பொடி கெட்டித்துப் போனால் அப்படியாவது வழக்கம்தான். அதற்கு ஒரு ட்ரிக் உண்டு. குடை போடுவது என்பார்கள். அதாவது ஃபில்டரில் சல்லடை மாதிரி இருக்கும் ஒரு உபகரணத்தைப் போட்டுவிட்டு, பின்பு அதற்கு மேலே காபிப் பொடியைக் கொட்டி, வெந்நீர் ஊற்ற வேண்டும். மின் வசதி கிடையாது. சிம்னி விளக்கில் ‘குடை’யைத் தேடியிருக்கிறார். கிடைக்கவில்லை. எனவே, ஃபில்டரின் விளிம்பில் தட்டித் தட்டி டிகாக்‌ஷனை மெதுமெதுவாக இறங்கச் செய்தார்.

நாங்கள் விழித்துக்கொண்டு, பல் தேய்த்து ரெடியாவதற்குள் எல்லோருக்கும் காபி தயாராக இருந்தது. அப்பாவும், உடன்பிறந்தோர் நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு டம்ளர் காபி குடித்தோம். சுவையே இல்லை. “பழைய பொடி. சரியா டிகாக்‌ஷனே இறங்கலை. நாளைக்குப் புதுப் பொடி வாங்கிக் காபி போட்டுத் தரேன்” என்று சமாதானம் செய்தார் அம்மா.

பின்பு, காலை பத்து மணியளவில் பாத்திரங்களையெல்லாம் தேய்ப்பதற்காக ஃபில்டரைக் கொண்டு போய்த் தோட்டத்தில் உதறியபோது, காபிப் பொடியுடன் சேர்ந்து வந்து விழுந்தது வெந்நீரில் வெந்து போன ஒரு தேளின் உடம்பு.

உவ்வேக்! நாங்கள் குடித்த காபியெல்லாம் வெளியே வந்துவிடும்போல் வயிற்றைப் புரட்டியது. உடம்புக்கு ஏதாவது கெடுதி பண்ணுமோ என்று அப்பா அவசரமாக உள்ளூர் வைத்தியர் ஒருவரிடம் எங்களை அழைத்துச் சென்றார். “அதெல்லாம் ஒண்ணும் ஆகாது! தேள் கொட்டினாத்தான் விஷம். தைரியமா போங்க” என்றார் வைத்தியர்.

தேள் என்றதும், எனக்கு உடனடியாக நினைவுக்கு வருவது, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு குழந்தைக்குச் சரியாகத் தட்டாமல், உதறாமல் ஒரு ஷூவை மாட்டிப் பள்ளிக்கு அனுப்பி, அந்த ஷூவினுள் தேள் இருந்து, அது கொட்டிக் குழந்தை பரிதாபமாக இறந்து போன செய்திதான். இப்போது நினைத்தாலும் மனதில் வேதனை வரவழைக்கும் சம்பவம் அது.

ஒரு தேளை வீட்டுச் சுவரில், அல்லது கொல்லைப்புறத்தில் எங்கோ ஓரிடத்தில் பார்க்கிறோம் என்றால், அதை அங்கேயே துடைப்பக் கட்டையால் சட்னி செய்து போட்டாலும், மறுநாள் அதே நேரம், அதே இடத்தில் இன்னொரு புதிய தேள் இருப்பதைப் பார்க்கலாம். இது நியதியா என்று தெரியவில்லை. நாங்கள் அப்படிப் பலமுறை பார்த்திருக்கிறோம்.

தேளில் இன்னொரு பெரிய வகை உண்டு. நட்டுவாக்கிலி என்பார்கள். தேள் குட்டியாக, தேன் நிறத்தில் இருக்கும். நட்டுவாக்கிலி கறுப்பாக, கம்ப்யூட்டர் மவுஸ் சைஸுக்கு இருக்கும். அதுவும் எங்கள் வீட்டில் அடிக்கடி வந்திருக்கிறது. தேள் கொட்டினால் ஏற்படும் வலியைவிட, நட்டுவாக்கிலி கடித்தால் உண்டாகும் வலி நூறு மடங்கு! ஆனால், தேளைவிட நட்டுவாக்கிலியிடம் கொஞ்சம் பயமில்லாமல் இருக்கலாம். ஏனென்றால், தேள் மிக சுறுசுறுப்பு. நட்டுவாக்கிலி ரொம்பவே மந்தம்.

தேள் கொட்டிய கையோடு, நாம் வலியை உணர்வதற்குள் விறுவிறுவென்று ஓடி ஒளிந்துவிடும். கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நட்டுவாக்கிலி மெதுவாகத்தான் நகரும். இடுக்கி போன்ற தன் முன்னங் கைகளால் நம் காலை வாகாகப் பற்றிக் கொண்டு, கொட்டுவதற்கு ரொம்பவே நேரம் எடுத்துக் கொள்ளும். அதற்குள் நம் காலில் ஏதோ ஊர்வது தெரிந்து, உதறிவிடலாம்; அதை சம்ஹாரம் செய்து விடலாம்.

சற்றுப் பெரிய தேள்களைக் கொன்று, மண்ணில் குழி வெட்டிப் புதைப்பார்கள். சில நாட்களுக்குப் பின்பு அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால், தேளின் உடல் மண்ணோடு மண்ணாகியிருக்க, தேளின் வால் பகுதியில் உள்ள கணுக்கள் மட்டும் வளையம் வளையமாக விழுந்து கிடப்பது தெரியும். அதை எடுத்துக் கோத்து, குழந்தை கழுத்தில் மாலையாகப் போட்டால், குழந்தையை தேள், பாம்பு எதுவும் அண்டாது என்று கிராமங்களில் ஒரு நம்பிக்கை உண்டு.

‘...தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க...’ என்று கந்த சஷ்டி கவசம் சொல்வதுதான் அந்தக் காலத்தில் தேள், பாம்பு பயம் அகல எங்களுக்கு ஒரே வழி!

இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தேள், நண்டு, பூரான் எல்லாவற்றையும் பாடம் பண்ணி, கண்ணாடிக்குள் பதித்து, நெக்லஸ் மாதிரி பெண்கள் போட்டுக் கொள்ளத் தொடங்கிவிட்டார்களாமே! அப்படி ஒரு நெக்லஸ் படம்தான் மேலே இருப்பது.

வாழ்க நாகரிகம்! வாழ்க பெண்கள்! வாழ்க தேள்!

***
தைரியம் என்பது வேறில்லை; தன் பயத்தை எதிராளிக்குத் தெரியாமல் மறைப்பது!

மூழ்கிய பஸ்ஸுக்குள் நான்!

ன்று அலுவலகத்திலிருந்து பஸ்ஸில் வீடு திரும்பும்போது, நல்ல மழை! துரைசாமி சப்-வேயில் தண்ணீர் தேங்கியிருக்கிறது என்று வாகனங்களை வடக்கு உஸ்மான் சாலைப் பக்கம் திருப்பி விட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், அங்கேயும் வாகன நெரிசல். எனவே, எங்கள் 11-G பஸ் பனகல் பார்க்கை பிரதட்சணமாகச் சுற்றிக்கொண்டு, ஜி.என்.செட்டி சாலைக்கு வந்து, கண்ணதாசன் சிலை அருகில் இடப்பக்கம் திரும்பி, வெள்ள நீரில் ஊர்ந்து, சந்து பொந்துகளில் நுழைந்து, நேரே கோடம்பாக்கம் பாலம் வழியாக 17-D போகிற வழியில் லிபர்ட்டி, பவர் ஹவுஸ் என அசோக் பில்லருக்கு வந்து சேர்ந்தது.

மழை, வெள்ளம், சப்-வேயில் தண்ணீர் என்றதும், பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் அப்படித்தான் ஒரு மழை நாளில் சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்-வேயில் பஸ்ஸினுள் மாட்டிக் கொண்ட பகீர் சம்பவம் நினைவுக்கு வந்தது.

அன்றைக்கும் (1996) இப்படித்தான் சென்னை வெள்ளக் காடாக மாறியிருந்தது. வழக்கமாக டி.வி.எஸ். பஸ் ஸ்டாப்பில் 11-G பஸ்ஸில்தான் ஏறுவேன். ஆனால், அன்றைக்கு கே.கே.நகர் செல்லும் பஸ்கள் வரவேயில்லை. அபூர்வமாக ஒன்றிரண்டு வந்தாலும், அத்தனையிலும் கூட்டம். எனவே, மேற்கு சைதாப்பேட்டை செல்லும் 18-K பஸ்ஸில் சென்று, சீனிவாசா தியேட்டருக்கு அடுத்த ஸ்டாப்பிங்கில் (மேட்டுப்பாளையம்) இறங்கிக் கொண்டு, அசோக் நகருக்குப் பொடி நடையாக நடந்து போய்விடலாம் என்று கணக்குப் போட்டேன். அப்போது இரவு மணி 7 இருக்கும்.

அதன்படியே, அடுத்து கொஞ்சம் கூட்டம் குறைவாக வந்த 18-K பஸ்ஸில் ஏறினேன். தியாகி அரங்கநாதன் பாலம் வரைக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதைத் தாண்டினால் சீனிவாசா தியேட்டர் வந்துவிடும். சப்-வேயை நெருங்கும்போதே பாலத்தின் அடியில் மழைத் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்பது தெரிந்தது. பஸ் அந்தக் குளத்தை நீந்திக் கடக்குமா என்று சந்தேகமாக இருந்தது.

“டிரைவரு கொஞ்சம் துடியா இருந்தா பஸ்ஸு சல்லுனு போயிருங்க. இதுக்கு முந்தி வந்த பஸ்ஸு போயிருச்சே!”

தெருவில் நின்ற யாரோ யாரிடமோ பேசியது எங்கள் பஸ் டிரைவரின் காதுகளிலும் விழுந்து உசுப்பேற்றியிருக்க வேண்டும். தயங்கி, ஊர்ந்துகொண்டு இருந்த பஸ்ஸை சட்டென்று கியர் மாற்றி, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்கிற துடிப்போடு, விசையுடன் செலுத்தத் தொடங்கினார்.

சுற்றிலும் இருந்த பயணிகளின் முகத்தைப் பார்த்தேன். ஒருவர் முகத்திலாவது கவலை ரேகை தெரிய வேண்டுமே? ம்ஹூம்! ஒரு சாதனை செய்யப் போகும் மகிழ்சசிதான் தெரிந்தது.

பஸ் தண்ணீருக்குள் இறங்க இறங்க, ‘ஹோ’வென்ற உற்சாகக் குரல்கள் எழுந்தன. பஸ் படிக்கட்டைத் தண்ணீர் தொட, பஸ்ஸின் வேகம் குறையத் தொடங்கியது. முக்கி, முனகி முன்னேறிற்று.

“யப்பா... போவாது! ரிவர்ஸ் எடு!” என்று அனுபவஸ்தர்கள் சிலர் குரல் கொடுக்க, “அட, நீ வேற! இம்மாந்தூரம் வந்துட்டோம். டிரைவர் சார், ஒரு தம் புடிச்சுக் கிளப்புங்க. போயிரலாம்!” என்று வேறு சிலர் உற்சாகமூட்டினர்.

பஸ் மேலும் முன்னேறியது. இப்போது பஸ்ஸுக்குள்ளேயே தண்ணீர் வந்து பயணிகளின் பாதங்களை நனைத்தது. அத்தனை பேரும் ‘ஹோவ்’ என்று குஷியாகக் கிறீச்சிட்டுக் கத்தினார்களே தவிர, நடக்கப் போகும் பயங்கரம் பற்றி அவர்கள் உணரவேயில்லை.

பாலத்தின் நேர் கீழாக வந்து நின்ற பஸ் மேலே நகர மறுத்துச் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது. டிரைவர் தன்னால் ஆன வரை முயன்றார். அடிபட்ட புலி மாதிரி உர்ர்... உர்ர்... என்று உறுமியதே தவிர, பஸ் கொஞ்சமும் அசையக் காணோம்.

வெளியே நல்ல மழை. பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டம் உயர்ந்துகொண்டே இருந்தது. நாங்கள் அனைவரும் இப்போது ஸீட்டுகளில் ஏறி நின்றுகொண்டு இருந்தோம். சிலர் சூரத்தனமாக ஜன்னல் வழியாக வெளியேறி, பஸ்ஸின் டாப்பில் ஏறிக் கொண்டனர். பொது நல விரும்பிகள் சிலர் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி, பஸ்ஸைத் தள்ள முயன்றனர். நடக்கவில்லை. அவர்கள் பாதி நடையும் பாதி நீச்சலுமாகப் போய்விட்டார்கள்.

எனக்கு நன்றாக நீச்சல் தெரியும். அவர்களைப் போலவே நானும் குதித்து நீந்திப் போய்விடலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். ‘சரி, என்னதான் ஆகிறது, பார்ப்போமே!’ என்று கொஞ்சம் பொறுமையாக இருந்தேன்.

வெள்ள நீர் மட்டம் உயர உயர, பஸ் பிடிப்பில்லாமல் மெதுவாக சாய்வது போல் இருந்தது. உள்ளே இருந்தவர்களுக்கு முதன்முறையாக மரண பயம் ஏற்பட்டது. இதற்குள் மேலும் சிலர் தண்ணீரில் இறங்கி நீந்திப் போகத் தொடங்கியிருந்தார்கள்.

“என்னாங்க டிரைவர்! ஆம்பளைங்கல்லாம் ஒவ்வொருத்தரா குதிச்சு, நீஞ்சிப் போயிக்கிட்டே இருக்காங்க. நாங்க என்ன பண்றது? இப்படியே ஜல சமாதி ஆயிட வேண்டியதுதானா?” என்று பெண்கள் கூட்டம் கத்தியது.

“பொறும்மா! ஃபயர் சர்வீஸுக்கு ஆள் போயிருக்கு. இப்ப வந்துடுவாங்க. ஒண்ணும் ஆகாது. பயப்படாதீங்க!” என்று தைரியம் சொன்னார் கண்டக்டர். இதற்கிடையில் வேறு சில ஆண்கள், பெண்களின் கையிலிருந்த குழந்தைகளையும், சிறுவர்களையும் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு நீந்திக் கரையில் கொண்டு சேர்த்தவண்ணம் இருந்தார்கள். நானும் ஒரு சிறுவனை அழைத்துக்கொண்டு - அல்ல; கிட்டத்தட்ட தண்ணீரில் ஒரு மிதவை போல் அவனை இழுத்துக்கொண்டு கரையில் கொண்டு சேர்த்தேன். என் கைப்பையை அந்தப் பையனிடம் கொடுத்துவிட்டுத் திரும்ப பஸ்ஸுக்கு வந்தேன் - இன்னும் யாரையாவது கரைக்கு அழைத்துப் போக முடியுமா என்று பார்க்க.

இதற்குள் பஸ்ஸுக்குள் தண்ணீர் மட்டும் மேலும் உயர்ந்திருந்தது. அத்தனை பேர் முகங்களிலும் மரண பீதி. பெரும்பாலும் உள்ளே இருந்தவர்கள் பெண்களும், முதியவர்களும்தான்.

இதற்குள் ஃபயர் சர்வீஸ் வந்து சேர்ந்தது. ரயில் பாலத்தின் மீதேறி, அங்கிருந்து ஏணியை இறக்கி, பஸ்ஸின் டாப் மீது நிற்பவர்களை மீட்க முடியுமா என்று யோசித்தார்கள். அது வேலைக்காகவில்லை. காரணம், பாலத்தின் தண்டவாளப் பகுதியில் மின்கசிவு ஏற்பட்டு, ஷாக் அடித்தது. எனவே, ஏணியின் ஒரு முனையை பஸ்ஸின் ஜன்னலிலும் மறுமுனையை பக்கவாட்டிலிருந்த நடைபாதையிலும் வைத்து, பயணிகளை ஜன்னல் வழியாக வெளியேறி ஏணி வழியே தவழ்ந்தும் ஊர்ந்தும் வரச் சொன்னார்கள். பெண்கள் உள்படப் பலர் அந்த வழியாக வெளியேறினர். முதியவர்கள் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டமாகிவிட்டது.

எப்படியோ... வெளியேறிய அத்தனை பேர் முகத்திலும் ‘கிளிஃப் ஹேங்கர்’ சாதனையைத் தானும் செய்துவிட்ட பரவசமும் சந்தோஷமும் கொப்பளித்தது!

நானும் சொட்டச் சொட்ட நனைந்த குருவி போல ஈரமும் நடுக்கமுமாக ராத்திரி 10 மணிக்கு வீடு வந்து சேர்ந்தேன்.

எல்லாம் சரி..! மறு நாள் செய்தித் தாளில் அந்தச் செய்தியைப் பார்த்தபோதுதான், தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

‘நேற்று இரவு சைதாப்பேட்டை அரங்கநாதன் பாலத்தின் அடியில் சிக்கியிருந்த 18-K பஸ்ஸை தீயணைப்புக் குழுவினர் வந்து மீட்டனர். அதில் உட்கார்ந்த நிலையில் ஒரு பெரியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவர் யார், என்ன என்கிற...’

***
எச்சரிக்கையாக இருப்பது கோழைத்தனமும் இல்லை; அலட்சியமாக இருப்பது தைரியமும் இல்லை!

பத்து நாள் யுத்த டயரி!

போன சனிக்கிழமையிலிருந்து இதோ இந்த நிமிடம் வரை - கடந்த பத்து நாட்களாக - தூங்காமல் இருக்கிறேன். இது கின்னஸ் ரிக்கார்டாகக்கூட இருக்கலாம்; யார் கண்டது?! (தினமும் காலையில் ஐந்து மணி முதல் ஏழு அல்லது ஏழரை வரை தூங்குகிறேன். கின்னஸில் இதற்கு இடம் உண்டு. தொடர்ந்து நாள் கணக்கில் விடாமல் பேசுவதை கின்னஸில் பதிகிறவர்களுக்கும் இடையிடையே ஐந்து, பத்து நிமிடங்கள் ஓய்வாக இருப்பதை கின்னஸ் அனுமதிக்கிறதே; அது போல என் தினசரி ஒன்றரை மணி நேரத் தூக்கத்தை - ஹூம், அது ஒரு தூக்கமா! - எடுத்துக் கொள்ளுங்கள்.)

தூக்கம் போனதற்குக் காரணம், என் பதிவைத் தொடர்ந்து படித்து வரும் அன்புக்குரிய வாசகர்களுக்கு ஏற்கெனவே தெரிந்ததுதான் - மூட்டைப் பூச்சி. இதற்கு முன் பல முறை மூட்டையிடம் கடிபட்டிருக்கிறேன் என்றாலும், இந்த முறை அவை ராஜபக்‌ஷேவின் காட்டுமிராண்டிப் படை இலங்கைத் தமிழர்கள் மீது நடத்திய இறுதி யுத்தம் போன்று என் மீது பாய்ந்து, கடித்துக் குதறிவிட்டது. ஒரு நாளல்ல, இரு நாளல்ல... தொடர்ந்து பத்தாவது நாளாக நேற்றைக்கும்!

நானோ எல்லோராலும் கைவிடப்பட்ட பிரபாகரன் நிலையில், எதிர்த்துப் போராடத் திணறிக்கொண்டு இருக்கிறேன். பார்க்கிறவர்களிடமெல்லாம் என் மூட்டைப் புராணத்தை அவிழ்த்து, அதைப் போக்க ஏதேனும் உபாயம் இருந்தால் சொல்லுமாறு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

என் பத்து நாள் யுத்த டயரி இதோ:

24-10-09: முதலில், மூட்டைகளை எதிர்த்து சற்றே சாத்விக யுத்தம்தான் நடத்தினேன். வெறும் கெரசினைத் துணியில் நனைத்து, இண்டு இடுக்குகளில் பூசினேன். அதிலேயே எதிரி ஒழிந்தான் என்று தப்புக் கணக்குப் போட்டு விட்டேன். இரவு எட்டு, ஒன்பது மணி அளவில் கெரஸினைத் தளும்பத் தளும்பப் பூசியிருந்தாலும், அவை இரவு பதினோரு மணிக்குள் ஆவியாகி, பன்னிரண்டு மணிக்கு மூட்டைப் படை என்னைத் தாக்கியது. கெரஸின் வாடைக்கு மூட்டை வராது என்று சொல்கிறார்களே, அது பச்சைப் பொய்!

25-10-09: ஞாயிறு. கடைகளுக்குச் சென்று மூட்டை பற்றிப் பிரஸ்தாபித்து, மூக்குடை பட்டேன். “அட, அது மூட்டையாய் இருக்காதுங்க. இந்தக் காலத்துல ஏதுங்க மூட்டை? அதையெல்லாம் எப்பவோ ஒழிச்சுக் கட்டியாச்சே! நீங்க பார்த்தது கறையானா இருக்கும். அல்லது, அந்துப் பூச்சியா இருக்கும். அது கடிச்சாலும் மூட்டைக் கடி மாதிரிதான் இருக்கும். அதே போலத்தான் தடிக்கும்” என்றார்கள். என்னவோ பெரியம்மையை ஒழித்துவிட்ட ரேஞ்சுக்கு மூட்டைப் பூச்சியை ஒழித்துவிட்ட மாதிரி பேசினார்கள். அவர்களிடம் மேலும் விவாதிக்க விரும்பாமல், “சரி, ஏதோ ஒரு பூச்சி! அதை ஒழிக்க ஏதாச்சும் மருந்து இருந்தா கொடுங்க!” என்றேன். “வேறென்ன, ஹிட்டுதான்! வாங்கிட்டுப் போய் அடிங்க! கரப்பு கிரப்பு, கொசு கிசு, பல்லி கில்லி எல்லாம் செத்துப் போயிரும்” என்று உத்தரவாதமாய்ச் சொல்லிக் கொடுத்தார்கள். அதை நம்ம்ம்ம்பி வாங்கிட்டுப் போய் என் அறைக்கு மட்டும் அந்த எண்பது ரூபாய் ஹிட் மொத்தத்தையும் கமறக் கமற அடித்தேன். அடித்த நெடியில் எனக்கே சற்று கேரிங்காக இருக்கவும், முழு நம்பிக்கை பிறந்து, சன் டி.வி. ஞாயிறு காலை ராமாயண சீரியல் ராவணன் போல “கெக்கெக்கெக்கெக்...”கென்று சிரித்து, “ஒழிந்தார்கள் அந்த மதி கெட்ட மூட்டையர்கள். ஆடிவிட்டேன் அவர்களை நான் வேட்டை!” என்று கெக்கலி கொட்டிச் சிரித்தேன். அன்றைக்கு இரவு, மூட்டைப் படை வீறு கொண்டு எழுந்து, என் மீது கிளஸ்டர் குண்டுகளைப் போட்டது மாதிரி உடம்பு பூராவும் பிடுங்கி எடுத்தது. “முட்டாளே! ஹிட்டாமில்ல ஹிட்டு! இப்ப நாங்கதான் கண்ணு ஹிட்டு!” என்று அவை என்னைக் கேலி செய்தன.

26-10-09: திங்களன்று அலுவலகத்தில் தூக்கம் கெட்ட மயக்க நிலையில் அமர்ந்துதான் வேலை பார்த்தேன். இன்றைக்கு இரவு மூட்டையை எப்படியாவது ஒழித்துவிடுவது என்று என் தோள்கள் தினவெடுக்க (அல்லது, நேற்றைய மூட்டைக் கடியின் அரிப்போ?) சீக்கிரமே வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்காரரையே போய்க் கேட்டேன். “ஒண்ணுமில்லீங்க, எறும்புப் பொடியை வாங்கித் தூவுங்க. உடனே போயிடும்” என்றார் சிம்பிளாக. “கொடுங்க ஒரு அரை கிலோ” என்று வாங்கிக் கொண்டு வந்து, அறை ஓரங்களில் எறும்புப் பொடியை - யாராவது அமைச்சர் விஜயம் செய்தால் அந்தத் தெருவில் இரண்டு பக்கமும் பிளீச்சிங் பவுடரால் பார்டர் கட்டுவார்களே, அந்த ரேஞ்சுக்கு - தூவி வைத்தேன். ‘இப்ப எப்படி வருவே? இப்ப எப்படி வருவே?’ என்று நடுவாகப் படுத்தேன். பதினோரு மணி இருக்கும். தோள்பட்டையில் முதல் கடி; அடுத்துக் கொஞ்ச நேரத்தில் இடுப்புப் பக்கம் ஒரு கடி; பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டேன்; கால் ஆடு சதையில் மூன்றாவது கடி! எம்.ஜி.ஆர்.கூட மூன்று அடிகளைத்தானே பொறுப்பார்! அடுத்த அடி அடிக்க ஓங்குகிற வில்லனின் கையை அப்படியே பிடித்து முறுக்கி, எதிர்த் தாக்குதல் தொடங்கிவிடுவார் அல்லவா? நானும் எதிர்ப்பது என்று முடிவு கட்டிவிட்டேன். டியூப் லைட்டைப் போட்டுப் பார்த்தேன். ஏழெட்டு மூட்டைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தன. அத்தனையும் ஒன்று விடாமல் இழுத்து வைத்து ஆத்திரம் தீர நசுக்கினேன். இன்னும் ஏதாவது எதிரிப் படை ஒளிந்து இருக்கிறதா என்று பாய், தலையணைகளை உதறிப் பார்த்தேன். இல்லை. விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தேன். ஐந்து நிமிடம்கூட ஆகியிருக்காது. மீண்டும் கடிகள். எழுந்து விளக்கைப் போட்டுப் பார்த்தால் மேலும் பத்துப் பன்னிரண்டு மூட்டைகள். ‘விடாதே! நசுக்கு!’ இப்படியே அன்றைய பொழுதும் சுபமாக விடிந்தது.

27-10-09: செவ்வாய். புழுதிவாக்கத்திலிருந்த என் தங்கைக்குப் போன் செய்து மூட்டைக் கடி பற்றி ஒரு குரல் அழுதேன். “இங்கேயும் எக்கச்சக்கமா மூட்டைப்பூச்சி இருந்துதுண்ணா! நாங்களும் எறும்பு மருந்து, ஹிட்டுன்னு என்னென்னவோ பண்ணிப் பார்த்தோம். போகலை! அப்புறம் தெரிஞ்ச மாமி ஒருத்தங்க ஒரு யோசனை சொன்னாங்க. படிகாரத்தை வாங்கிப் பொடி பண்ணிப் போட்டு வெச்சா, அந்த வாசனை மூட்டைப் பூச்சிக்குப் பிடிக்காது. உடனே ஓடிப் போயிடும்னு சொன்னாங்க. அது மாதிரியே பண்ணினேன். இப்போ இங்கே ஒரு மூட்டைப் பூச்சி கூட இல்லே. நீயும் அது மாதிரி பண்ணு!” என்றாள். இதே யோசனையைத்தான், என் பதிவுகளைத் தொடர்ந்து வாசிக்கும் கிருபாநந்தினி என்கிற வாசகியும் பின்னூட்டம் இட்டிருந்தார். எனவே, இந்த முறை மூட்டையார் தப்ப முடியாது என்ற பெரு நம்பிக்கையோடு அரை கிலோ படிகாரம் வாங்கி வந்து பொடி செய்து, நெடி அடிக்க, சுவர் ஓரர்களில் தூவி வைத்தேன். எறும்பு மருந்துக்கே பெப்பே சொல்கிற எங்கள் வீட்டு மூட்டையார் படிகாரத்துக்கு பை...பை... சொல்லமாட்டாரா என்ன? அன்றைக்கும் தூக்கம் போச்சு!

28-10-09: அலுவலகம் பூராவும் என் பரிதாப நிலை பரவிவிட்டது. “ஹிட் அடிச்சுப் பார்த்தீங்களா?” என்றார் ஆர்ட்டிஸ்ட் ராஜா. “பார்த்தேன். அதுக்கெல்லாம் அது அசைஞ்சு கொடுக்கலை. ஹிட்டுங்கிறது வெறும் கரப்புக்கு மட்டும்தானே? மூட்டைப் பூச்சி எப்படி ஒழியும்?” என்றேன். “இல்லையே! கரப்புக்குன்னு போடுவானே தவிர, மூட்டைப் பூச்சியும் சாகணுமே?” என்றார். “இந்த நியாயம் உங்களுக்குத் தெரியுது. அந்தப் பாழாப் போன மூட்டைப் பூச்சிக்குத் தெரியலையே?” என்றேன். “வேற வழியில்லை. நான் ஒரு நம்பர் தரேன். பெஸ்ட் கண்ட்ரோல்காரங்க நம்பர். அதுக்கு போன் பண்ணீங்கன்னா, உடனே வீட்டுக்கு வந்து மூட்டைப் பூச்சியை ஒழிச்சுக் கொடுத்துட்டுப் போவாங்க. ஒரு நாள் மட்டும் வீட்டைக் காலி பண்ணிக் கொடுக்க வேண்டியிருக்கும். வேற எங்கேயாவது போய் இருந்துக்குங்க” என்றார். அங்கேதான் இடித்தது. இரவு எறும்பு மருந்தை கெரஸினில் கரைத்து என் அறை முழுக்கப் பூசினேன். (வேடிக்கை என்னவென்றால், என் அறையில் மட்டும்தான் மூட்டைகளின் அராஜக, அடாவடித்தனம். மற்ற அறைகளில் இல்லை. அங்கே படுக்கலாமே என்பீர்கள். முடியாது. எல்லா அறைகளும் ஹவுஸ்ஃபுல்!) கெரஸின்+எறும்பு மருந்து என இரட்டைத் தாக்குதல் நடத்தியும் பலனில்லை. தூக்கம் கெட்டது கெட்டதுதான்!

29-10-09: என் பையனுக்கு ஒரு புத்தகம் வாங்குவதற்காக எம்.ஜி.ஆர். நகருக்குச் சென்றபோது, அங்கே அந்தப் புத்தகக் கடைக்காரரிடம் மூட்டைக்கு மருந்து உண்டா என்று கேட்டேன். மண்ணெண்ணெய் பூசி மண்டை காய்ந்ததாய், ஹிட் அடித்துத் தோல்வியுற்றதாய், எறும்பு மருந்து போட்டு ஏமாந்ததாய், படிகாரம் தூவிப் பல்லிளித்ததாய் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிட்டேன். “அடடா! சரியானதை விட்டுட்டு நீங்க வேற எதை எதையோ செஞ்சிருக்கீங்களே சர்ர்! பேகான் ஸ்ப்ரே வாங்கி அடிங்க. பட்டுனு போயிடும்” என்றார். “அது கரப்புக்குதானே? மூட்டைப் பூச்சி போகுமா?” என்றேன். “அதெல்லாம் மூட்டைப் பூச்சிக்கு அவ்வளவு தூரம் தெரியாது சார். நீங்க வாங்கி அடிங்க. போச்சா இல்லையான்னு நாளைக்கு வந்து சொல்லுங்க” என்றார். வாங்கி வந்து அடித்தேன். மூட்டையாரிடம் எந்த ரியாக்‌ஷனும் இல்லை.

30-10-09: ஆர்ட்டிஸ்ட் ராஜாவின் நண்பர் ஒருவர் நெட்டில் மூட்டைப் பூச்சிக்கு மருந்து தேடினார். அரண்மனைக்காரன் தெருவில், அங்கப்ப நாயக்கன் தெருவில், குறளகம் எதிரில் இங்கெல்லாம் மூட்டைப் பூச்சி மருந்துகள் கிடைப்பதாகச் சொன்னார். உடனே போனேன். அந்தக் கடைக்காரர்களும் முதலில் ஹிட்டை எடுத்து நீட்டினார்கள். “இதெல்லாம் பத்தாது! டிக்-20 மாதிரி பவர்ஃபுல்லா ஏதாச்சும் இருந்தா கொடுங்க” என்றேன். “முந்தியெல்லாம் வந்தது சார்! அத்தக் குடிச்சுத் தற்கொலை பண்ணிக்கிறாங்கன்னு இப்ப அதைத் தடை பண்ணிட்டாங்க. சரி, இதை அடிச்சுப் பாருங்க” என்று ஹிட் மாதிரியே ஒன்றை எடுத்துக் காண்பித்தார். NO-P என்பது அதன் பெயர். அதாவது No Pest-ஆம்! பெஸ்ட் என்றால் கறையான் அல்லவோ? மூட்டை போகுமா என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன். கடைக்காரர் அந்த டப்பா மீது ‘பெட் பக்ஸ்’ உள்பட செத்து ஒழியும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காண்பித்தார். அப்பாடா! முதன்முறையாக மூட்டைப் பூச்சி ஒழிவதற்கான மருந்தைக் கண்டுபிடித்துவிட்டேன்! சந்தோஷமாக அதை வாங்கி வந்து இரவு, “இன்னியோட செத்தீங்கடா மூட்டைங்களா!” என்று அடித்தேன். நெடி தூக்கலாக இருந்தது. ஒழிந்துவிடும் என்று நினைத்தேன். ஒழியவில்லையே! மருந்தின் நெடியிலும், மூட்டைக் கடியிலும் எனக்கு அன்றைக்கும் தூக்கம் கெட்டது.

அதென்னவோ, படுக்கை விரிக்கிற வரைக்கும் ஒரு மூட்டைப் பூச்சியும் கண்களுக்குத் தென்படுவதில்லை. விளக்கை அணைத்துப் படுத்தால், எந்தப் பக்கத்திலிருந்து வந்தன என்றே தெரியாமல் போர்வையின் கீழே எல்லாம் மூட்டைப் பூச்சிகள்! இன்றைக்கு எத்தனை மூட்டைப் பூச்சிகள் என்னைக் கடித்தன என்று கணக்கிடும் ஆசை வந்தது. ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் கெரஸினைக் கொட்டிக் கொண்டு வந்து பக்கத்தில் வைத்துக்கொண்டு, மூட்டை கடிக்கக் கடிக்க, சட்டென்று எழுந்து விளக்கைப் போடுவதும், பரபரத்து ஓடும் மூட்டைகளைப் பிடித்துக் கெரஸின் கிண்ணத்தில் போடுவதுமாய் இருந்தேன். விடியும்போது கிண்ணத்தில் பாதி அளவு மூட்டை நிரம்பியிருந்தது. ஒரு தடவைக்குக் குறைந்தபட்சம் பத்து மூட்டைகளை எடுத்துப் போட்டேன் என்றால், விடிவதற்குள் முப்பது முறையாவது போட்டிருப்பேன். ஆக, ஏறத்தாழ முன்னூறு மூட்டைகள்!

31-10-09: வேப்பெண்ணெய் பூசினால் அந்த வாசனைக்கு மூட்டை போய்விடும் என்று யாரோ சொன்னார்கள். நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, யார் எதைச் சொன்னாலும் கேட்டு அதன்படி செய்து பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். என்ன ஒன்று... ஏதேனும் புதிய ஐடியாவாக இருக்க வேண்டும்! சொன்னதையே சொல்லப்படாது! வேப்பெண்ணெய் பூசி வைத்ததில், எங்கள் தொண்டையெல்லாம் கசப்பு வழிந்தது. மூட்டைக்குத் தொண்டை என்று ஒன்று இருந்தால்தானே?

1-11-09: ஞாயிறு. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து பழைய தலையணைகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, புதிய தலையணைகள், புதிய தலையணை உறைகள் வாங்குவோமென்று எம்.ஜி.ஆர். நகர் போனேன். அந்தக் கடைக்காரரிடம் மூட்டைப் பூச்சி ஒழிய ஒரு உபாயம் சொல்லுங்கள் என்று கேட்டேன். அவர் சுவாரஸ்யமாக இன்றைய நாட்டு நடப்புகளைப் பற்றியெல்லாம் பிரசங்கம் செய்யத் தொடங்கிவிட்டார். “குடிக்கிற தண்ணி நல்லா இருக்கா சார் முதல்ல? அந்தக் காலத்துல மாம்பழம் இயற்கையா பழுக்கும். தின்னிருக்கோம். இல்லேன்னா வைக்கோலைச் சுத்தி, அரிசி டின்ல போட்டு பழுக்க வெச்சுத் தின்னுவோம். இன்னிக்குக் கல்லைப் போட்டுப் பழுக்க வைக்கிறாங்களாம். உடம்பு நாசமாத்தான் போவும். கத்திரிக்காய்ல கூட மரபணுக் கத்திரிக்காய் கண்டுபிடிச்சுருக்காங்களாமே... இன்னும் மனுஷனத்தான் செய்யலே! கூடிய சீக்கிரம் அதையும் செஞ்சுருவாங்க. அப்புறம் அவனைச் சாகடிக்க முடியாது. அவன் நம்மையெல்லாம் சாகடிச்சுட்டுப் போயிடுவான்” என்று, சிக்கினாண்டா சீமாச்சு என ஒரு மணி நேரத்துக்குப் பிளேடு போட்டுவிட்டுக் கடைசியில் உருப்படியாக ஒன்றைச் சொன்னார்... “பக்கத்துல ஹார்டுவேர் கடைங்க இருக்குது. அங்கே போங்க. செல் ஆயில்னு கேளுங்க. தருவாங்க. எடுத்துட்டுப் போயி, முகமூடி கட்டிக்கிட்டு, ஒரு பிரஷ்ஷால சுவர்ல அந்த ஆயிலை அடிங்க. நெடி பயங்கரமா அடிக்கும். மூட்டை நூறு பர்செண்ட் செத்துரும். சந்தேகமே வேணாம்” என்றார்.

நிறைய பொது அறிவு விஷயங்களாகப் பேசினாரே, அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஹார்ட்வேர் கடையில் போய் செல் ஆயில் கேட்டேன். குட்டியூண்டு கேன் 48 ரூபாய். ஸ்வைன் ஃப்ளூ முகமூடி ஒன்று பத்து ரூபாய். ஒரு பிரஷ் 30 ரூபாய். அவர் சொன்னது போல செல் ஆயிலின் நெடி உங்க வீட்டு நெடி எங்க வீட்டு நெடி இல்லை. நேரே தொண்டைக் குழிக்குள் காரமாக இறங்கியது அந்த நெடி. இருமல் வந்தது. இரவு எட்டு மணிக்கு செல் ஆயில் அடித்தபோது இருந்த நெடியை விட நேரமாக ஆக, நெடியின் வீர்யம் அதிகரித்துக்கொண்டே போயிற்று. அறைக் கதவைச் சாத்திவிட்டு வேறொரு அறையில் படுத்தும் எனக்குத் தூக்கம் இல்லை. இரவு மூன்று மணிக்குக் கதவைத் திறந்து பார்த்தால், குபீரென்று கார நெடி முகத்தைத் தாக்கிற்று. சாத்திவிட்டுப் படுத்துக்கொண்டேன். ‘நிச்சயம் இந்த மருந்து சூப்பர் பவர்தான். மூட்டைகள் ஒழிந்தால், அந்தத் தலையணைக் கடைக்காரருக்கு சாக்லேட் வாங்கிப் போய்த் தரவேண்டும்’ என்று யோசித்தபடியே படுத்திருந்தேன்.

2-11-09: மறு நாள் காலை எழுந்து, அலுவலகம் கிளம்புகிற வரைக்கும் செல் ஆயிலின் நெடி இருந்தது. மாலை வீட்டுக்கு வந்தபோதும் லேசான நெடி இருந்தது. நேற்றைக்கு முழு நம்பிக்கையோடு படுத்தேன். என் நம்பிக்கை மொத்தமும் வீணானது. செல் ஆயிலை செல்லாத ஆயிலாக்கிவிட்டு, மூட்டைப் பூச்சிகள் என் மீது ஊர்ந்தன. கொலை வெறியோடு ஒவ்வொன்றாகப் பிடித்துக் கட்டை விரலுக்கும் நடு விரலுக்கும் இடையே வைத்துத் திரித்து நசுக்கினேன். ஒரு வித்தியாசம் கவனித்தேன். இதற்கு முன் மூட்டையை நசுக்கினால், புளிச்சென்று ரத்தம் பீய்ச்சியடிக்கும். இப்போதோ, ஏதோ அழுக்கைத் தேய்ப்பது போல் மூட்டை கசங்கியதே தவிர, ரத்தம் வரக் காணோம். செல் ஆயில் வீர்யத்தால் அதன் ரத்தம் சுண்டிவிட்டதா என்று தெரியவில்லை. அப்படியும் கடிக்கிறதே!

3-11-09: இன்றே கடைசி! மூட்டைக்கெதிரான என் யுத்தத்தை முடித்துக்கொண்டு சரண் அடைந்துவிடலாம் என்றிருக்கிறேன். காலையில் அருகில் உள்ள ஹார்ட்வேர் கடைக்குப் போய் செல் ஆயில் இருக்குமா என்று கேட்டேன். எதுக்குங்க என்றார். சொன்னேன். “மூட்டைப் பூச்சிக்குன்னு டெர்மைட்ஸ்னு ஒரு ஆயில் இருக்குது. இதப் போடுங்க. நெடி அதிகம் இருக்காது. ஆனா, மூட்டை போயிடும்” என்று சொல்லிக் கொடுத்தார். என் அறை, என் அறையைத் தொட்டுக்கொண்டு இருக்கும் மற்ற இரண்டு அறைகள் முழுக்க லைசோல் தெளித்து, ஹார்ப்பிக் போட்டுச் சுத்தமாகக் கழுவித் தள்ளினேன். துணியால் துடைத்துக் காய வைத்தேன். டெர்மிட்ஸ் ஆயிலை அங்கிங்கெனாதபடி பூசினேன். போர்வைகளை, பாய்களை, தலையணைகளை வெளியே கொண்டு போய் உதறினேன். ஒவ்வொரு இழையாகப் பார்த்துக் கண்ணுக்குத் தென்பட்ட ஓரிரண்டு மூட்டைப் பூச்சிகளையும் எடுத்து வாசல் கேட்டிலேயே வைத்து நசுக்கினேன். சுத்தமாக உதறி ஒவ்வொன்றையும் உள்ளே எடுத்து வந்தேன். மூட்டைகளின் வசிப்பிடம், பிறப்பிடம் என்று நான் சந்தேகித்த ஒரு பெரிய அட்டைப் பெட்டியை அதனுள்ளிருந்த வஸ்துக்களோடு கொண்டு போய் அப்படியே நீல் மெட்டல் பனால்கா குப்பைத் தொட்டியில் கடாசினேன். போர்வை விளிம்புகளில் கெரஸின் தடவி வைத்தேன். தரை முழுக்க கெரஸின் பூசி வைத்தேன்.

‘மூட்டைப் பூச்சியை நசுக்குவது மாதிரி உன்னை நசுக்கிடுவேன்’ என்று வில்லன்கள் சுலபமாகச் சவால் விட்டுவிடுகிறார்கள். மூட்டைப் பூச்சியை நசுக்குவது எத்தனைப் பெரிய பாடு என்று அவர்களுக்குத் தெரியுமா என்று சந்தேகமாக இருக்கிறது. சொல்ல முடியாது. அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு ராஜபக்‌ஷே, மூட்டைப் பூச்சிகளைவிடக் கேவலமாக ஒரு மனித இனத்தையே பூண்டற்று நசுக்கிவிட்டாரே!

***
முயற்சியைக் கைவிடும்வரை தோல்வி என்பதே இல்லை!