‘தினம்’ ஒரு பேத்தல்!

“ஹனி டார்லிங்! சூட்கேஸ்ல ஸ்வெட்டர், ஷால், கம்பராமாயணம், காசி அல்வா எல்லாம் எடுத்து வெச்சுக்கிட்டியா?”

“ஆச்சு டியர்! அப்புறம், போன தடவையே கேட்டாரே, தி.ஜானகிராமன் நாவல்கள், அதையும் மறக்காம எடுத்து வெச்சுக்கிட்டேன்!”

“வெரிகுட்! அமிர்தாஞ்சன், கால் வலித் தைலம்...”

“மறப்பேனா டியர்? புதுப் போர்வை கூட ஒண்ணு எடுத்துக்கிட்டேன்...”

“கிரீட்டிங் கார்டு மறந்துட்டீங்களே மம்மி!”

“ஐயோ, என் குழந்தை எத்தனை சமத்து பார்த்தீங்களா?”

“யெஸ்... யெஸ்! என் ரத்தம் இல்லையா?”

அவள் தன் மகனைத் தூக்கிக் கொள்ள, அவளின் கணவன் அவர்களை அழைத்துக்கொண்டு கிளம்புகிறான் - முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் அப்பாவைக் காண!

தந்தையர் தினமாயிற்றே! வாழ்த்துப் பெற வேண்டாமா அப்பாவிடம்!

மெரிக்காவின் அசட்டுக் கலாசாரம் இங்கேயும் பரவி வருகிறது.

அன்னையர் தினம், காதலர் தினம், முட்டாள்கள் தினம், கழுதைகள் தினம், நாய்கள் தினம் என்று வர்ஜா வர்ஜமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஒரு தினம் கொண்டாடி, கையில் ஒரு பொக்கேவோ கிரீட்டிங் கார்டோ கொடுத்து முடித்துக்கொள்வது அவர்கள் வழக்கம். நாகரிகம் என்ற பெயரில் பிறரிடம் உள்ள நல்ல வழக்கங்கள் எதை நாம் பின்பற்றி இருக்கிறோம்? பிறரிடம் உள்ள ஏதாவது ஒரு பழக்கத்தை நாம் பின்பற்றுவதாக இருந்தால், அது ஒன்று ஆபாசமாக இருக்கும்; அல்லது, இந்த மாதிரியான அசட்டுத்தனமாக இருக்கும்.

தினம் கொண்டாடுவது வருடாந்திர திதி மாதிரி ஆகிவிட்டது.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாகக் கொண்டாட வேண்டுமாம். இது அமெரிக்காவில்! ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாத முதல் ஞாயிற்றுக்கிழமைதான் தந்தையர் தினம். இன்னும் நாட்டுக்கு நாடு இது மாறலாம்!

அமெரிக்கனுக்கு பெண்டாட்டியும் பிள்ளைகளுமே சாஸ்வதமில்லை. ‘என் பிள்ளையும் உன் பிள்ளையும் நம் பிள்ளையோடு விளையாடுகின்றன பார்!’ என்கிற ரீதியில் போகிற வாழ்க்கை அவர்களுடையது. ‘கிளிக்கு றெக்க முளைச்சுடுத்து; ஆத்தை விட்டுப் பறந்து போயிடுத்து’ என்று அங்கே யாரும் வசனம் பேசிக்கொண்டு இருக்க மாட்டார்கள். பறந்து போகவில்லை என்றால்தான் துரத்தி விடுவார்கள். பதினாறு வயசுக்கு மேல் அந்தப் பையனாகவே யாராவது ஒரு கேர்ள் ஃப்ரெண்டைத் தேடிக்கொண்டு, அவளோடு செட்டிலாகிவிடுவான். அப்படி ஆகவில்லை என்றால், பெற்றோர் பதைபதைத்துப் போவார்கள்.

அப்பா-மகன் என்கிற உறவுகளுக்கெல்லாம் அங்கே அர்த்தம் கிடையாது. வழியில் இருவரும் எப்போதாவது சந்திக்க நேர்ந்தால், “ஹி ஈஸ் மை ப்ளட்!” என்று அப்பா தன் அப்போதைய துணையிடமோ, அல்லது “ஒன்ஸ் ஹி வாஸ் மை மதர்’ஸ் ஃபியான்ஸ்” என்று மகன் தன் சிநேகிதியிடமோ ஒரு மூன்றாம் மனிதரைப் போல அறிமுகம் செய்துவைத்துவிட்டு, அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு அப்பால் நகர்ந்துவிடுவார்கள். அவர்களுக்குத் தேவை வருடத்தில் ஒருநாள் மம்மி டே, டாடி டே எல்லாம்!

நாமுமா அந்த அசட்டுத்தனத்தில் பங்கேற்பது? மாதா, பிதா, குரு, தெய்வம் என தெய்வத்துக்கும் மேலாகப் பெற்றோர்களை வைத்துப் போற்றுகின்ற கலாசாரம் நமது கலாசாரம். கூவத்தில் முங்கிக் குளித்துவிட்டு கூடிகூரா பவுடர் போட்டுக் கொள்கிற இந்த மாதிரியான பேத்தல்கள் எனக்குச் சகிக்கவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன், ‘விஷ்ராந்தி’ முதியோர் இல்லத்தின் நிறுவனர் சாவித்திரி வைத்தி அவர்களோடு ஒருமுறை நான் பேசிக்கொண்டு இருந்தபோது அவர் சொன்னார்... “முதியோர் இல்லங்கள் எல்லாம் ஒழியணும்!”

“என்னம்மா சொல்றீங்க?” என்றேன் புரியாமல்.

“பின்னே என்ன? போலீஸ் ஸ்டேஷன்கள் ஒரு ஊர்ல அதிகம் இருந்தா திருட்டுப் பசங்க அதிகமாயிட்டாங்கன்னு அர்த்தம். முதியோர் இல்லங்கள் அதிகமா இருந்தா, பிள்ளைங்க மனசு திரிஞ்சு போச்சுன்னு அர்த்தம். அது நாட்டுக்கு நல்லதில்லை!” என்றார்.

எப்போது இங்கே பெற்றோர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எல்லாம் ஆண்டுக்கு ஆண்டு அதிக அளவில் கொண்டாடப்பட்டு வருகிறதோ, அத்தனைக்கத்தனை பெற்றோர்-பிள்ளைகள் உறவு விரிசலாகிக்கொண்டே வருகிறது என்று பொருள்.

எந்தப் பெற்றோராவது் ‘பிள்ளைகள் தினம்’, ‘மகன் தினம்’, ‘மகள் தினம்’ என்றெல்லாம் கொண்டாடியது உண்டா? இல்லை. ஏன்? அவர்கள் மனசு அந்த அளவுக்கு வக்கரித்துப் போகவில்லை.

‘தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையைப் பெத்தா கண்ணீரு
பெத்தவன் மனசு பித்தம்மா, பிள்ளை மனசு கல்லம்மா...’ என்ற கண்ணதாசனின் வரிதான் சட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது!

முடிப்பதற்கு முன்...

ரம்பக் கதையின் முடிவாக இன்னும் சில வரிகள் எழுதலாம் என்று தோன்றியது.

“என்னடா கண்ணா! கையிலே கிரீட்டிங் கார்டு வெச்சிருக்கே! தாத்தா கிட்டேர்ந்து வாங்கிக்கிட்டியா?”

“ஆமா டாடி! நானும் பெரியவனானதும் இதே மாதிரி வந்து பார்த்து உங்களுக்குத் தர வேணாமா டாடி?”

*****
ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு வாழ்வியல் உதாரணமாக நடந்து காட்டவேண்டியவற்றில் முதலாவது, தன் பெற்றோர்களை மதிப்பதுதான்!

2 comments:

butterfly Surya said...

அருமை. விளாசலான பதிவு.

Anonymous said...

முடிவில் சேர்த்த சில வரிகள் கதையை அழகு படுத்திவிட்டது.

அமெரிக்கா மற்றும் அதன் கலாசாரம் பற்றி நாம் நினைத்துக் கொண்டிருக்கும் பல விஷயங்கள் தவறானவை ரவிபிரகாஷ். அது ஒரு பெரிய டாபிக். இந்த சிறிய மின்னஞ்சலில் பேசி முடிக்க முடியாது.

அப்புறம் இந்த தினம் சமாசாரமெல்லாம் அம்மா, அப்பா, மனைவி, காதலிகளை நினைவு கூர அல்ல; அவர்கள் எல்லாரிடமிருந்தும் வருடம் பூராவும் சுழற்சி முறையில் காசு பார்க்க உருவாக்கப்பட்ட மார்கெட்டிங், பொருளாதாரம் மற்றும் வியாபார தந்திரங்களில் ஒன்று.

[சத்யராஜ்குமார்]