எப்படி வந்தான் தமிழன்?

சுட்டி விகடன் விழாவுக்காகக் குழந்தைகளிடம் ‘உனக்குள் இருக்கு ஒரு கதை’ என்கிற தலைப்பில், கதை எழுதும் நுணுக்கங்கள் பற்றி எளிமையான உதாரணங்கள் கொடுத்து விளக்குவதற்காகக் குறிப்புகள் எடுத்துக்கொண்டு இருந்தபோது, ‘கதை எழுத எழுதத்தான் அந்தத் திறமை கைவசமாகும்’ என்பதை விளக்கும் உதாரணமாக ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்...’ என்கிற பாடல் வரிகளைப் பற்றி யோசித்தேன். அடுத்த வரிகள் எனக்குத் தெரியவில்லை.

நண்பர்களிடம் கேட்டேன். தெரிந்தவர்களிடம் கேட்டேன். யாருக்கும் சட்டென்று அடுத்த வரிகளைச் சொல்லத் தெரியவில்லை. சிலர், ‘வைத்த கல்விதொரு மனப்பழக்கம்’ என்று அடுத்த வரியைச் சொன்னார்களே தவிர, முழுப்பாடலும் யாருக்கும் தெரியவில்லை. சொற்பொழிவுகளில் உதாரணம் கொடுத்துப் பேசுபவர்களும் இந்த இரண்டு வரிகளோடு அடுத்த விஷயத்துக்குத் தாவிவிடுவதால், மற்ற வரிகள் பற்றி அவர்கள் கவலைப்படவேண்டியிருக்கவில்லை. நானும் அப்படித் தாவிவிடலாம்தான். ஆனால், பெரியவர்கள் மாதிரி எனக்கென்ன என்று போகிறவர்கள் இல்லை சுட்டிகள். சட்டென்று எழுந்து ‘அடுத்த வரி என்ன அங்கிள்?’ என்று யாராவது ஒரு சுட்டி தடாலென்று கேட்டுவிட்டால், நான் அங்கே திருதிருவென்று முழிக்கக்கூடாதே! எனவே, நெட்டில் தேடி, அதன் மற்ற வரிகளைக் கண்டுபிடித்தேன். (இணையம் இருப்பது எத்தனை வசதி!)

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
வைத்த கல்விதொரு மனப்பழக்கம் - நித்தம்
நடையும் நடைப்பழக்கம் - நட்பும்
தயையும் கொடையும் பிறவிக் குணம்.

இதுதான் அந்தப் பாடல்.

தமிழிலேயே நாம் தெரிந்துகொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது. வேற்று மொழி இலக்கியங்களில் மாதிரிக்கு ஒன்றிரண்டைப் படித்துக்கொண்டுவிட்டு, தமிழில் மொத்தத்தையும் கரைத்துக் குடித்துவிட்ட மாதிரி, பேச்சினிடையே ‘கீட்ஸ்’ என்றும், ‘காஃப்கா’ என்றும் வித விதமான பெயர்களைச் சொல்லி அசத்த நினைக்கும் ஒரு சில கத்துக்குட்டி இலக்கியவாதிகளைக் கண்டால் எனக்கு உள்ளூற கடுப்பாக இருக்கிறது.

‘தமிழன் என்றொரு இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு’ என்கிற வரியும் அதுபோல்தான்; ஈழத் தமிழர் பிரச்னையின்போது பரவலாகப் பலரது வாயில் புரண்ட வரி அதுதான். அந்தப் பாடலின் அடுத்தடுத்த வரிகள் யாருக்காவது தெரியுமா என்றால், சத்தியமாகத் தெரியாது. தமிழருவி மணியன் போன்று தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கலாம். மற்றபடி, அந்த வரியைத் தன் ஆவேசப் பேச்சினிடையில் பயன்படுத்தியவர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்குமா என்றால், நிச்சயம் தெரிந்திருக்காது. சரி, அதை யார் எழுதியது என்றாவது கேட்டுப் பாருங்கள். முழிப்பார்கள்.

நாமக்கல் வே.ராமலிங்கம் பிள்ளையவர்கள் எழுதிய கவிதை வரி அது. ‘தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா’ என்கிற பிரபல வரியும் அவர் எழுதியதுதான் என்று நினைக்கிறேன். அல்லது, பாரதிதாசனா? (இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும் இந்த நேரம் வரை, எனக்கும் முழுப்பாடலும் தெரியாது. கட்டாயம் நாளைக்குள் தெரிந்துகொண்டுவிடுவேன்.)

‘தமிழன்’ என்கிற சொல்லை முதன்முதல் கையாண்டவர்கள் மகாகவி பாரதியார், நாமக்கல் கவிஞர் இவர்களாகத்தான் இருக்கும் என்றுதான் நான் இதுவரையில் நினைத்துக்கொண்டு இருந்தேன். ‘இல்லை. அவர்களுக்கு வெகு காலம் முன்பே தமிழன் என்ற சொல் பிறந்துவிட்டது’ என்று சொல்லி என்னை அசத்தினார் 80 வயதான ஒரு சீனியர் சிட்டிசன். திருச்சி சுட்டி விழாவுக்குப் போயிருந்தபோது, அங்கு வந்திருந்த பார்வையாளர்களில் ஒருவர் அவர்.

இளங்கோவடிகள்கூட தமிழரைத் தமிழர் என்று குறிப்பிடவில்லை. ‘காவாநாவின் கனகனும் விசயனும்... அருந்தமிழாற்றல் அறிந்திலர் ஆங்கென... தென் தமிழாற்றல் காண்குதும் யாமென... வாய்வாள் ஆண்மையின் வண்தமிழ் இகழ்ந்த... தண்டமிழ் இகழ்ந்த ஆரிய மன்னரின்...’ என்று இப்படியெல்லாம் சிலப்பதிகாரம் முழுக்க ஆங்காங்கே தமிழ், தமிழ் என்றுதான் குறிப்பிடுகிறாரே தவிர, தமிழர் என்று ஓரிடத்திலும் குறிப்பிடவில்லை.

தொல்காப்பியத்திலும் தமிழன், தமிழர் என்ற சொற்கள் இல்லை. ‘தமிழம்’ இருக்கிறது.

‘சரி, தமிழனைத் தமிழன் என்று முதலில் குறிப்பிட்டது யார்?’ என்று அந்தப் பெரியவர் துரைசாமி அய்யா அவர்களை ஆவல் தாளாமல் விசாரித்தேன்.

‘யானே தவம் செய்தேன் ஏழ்பிறப்பும் எப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்த தமிழ் நன்மாலை இணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது’

இந்தப் பாடலைச் சொல்லிவிட்டு, ‘இதை எழுதியது யார் தெரியுமா?’ என்று என்னை அந்தப் பெரியவர் கேட்டார். ‘தெரியவில்லை’ என்றேன்.

“முதல் ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார் எழுதிய பாடல் இது. இரண்டாம் திருவந்தாதியில், 74-வது பாசுரம் இது. இவர் தவிர, ‘ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உரை எம் அண்ணல் கண்டாய்’ என்று அப்பர் சுவாமிகளும் தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். திருத்தாண்டகம், திருமறைக்காடு பகுதியில் 5-வது பாடலாக இது உள்ளது. பூதத்தாழ்வாரும், அப்பர் சுவாமிகளும் கி.பி.6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்கள்.

ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ் மொழிக்கு ஆற்றிய ஒப்பற்ற பணிகள் ஏராளம். அவர்களுக்குத் தமிழர்களாகிய நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம்” என்றார் பெரியவர் துரைசாமி.

“உண்மைதான் அய்யா! கூடவே, இது போன்ற அருமையான விஷயங்களை இன்றைய தலைமுறைக்கு ஆர்வத்தோடு எடுத்துச் சொல்லும் உம் போன்ற பெரியவர்களுக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என்றேன். சரிதானே?

*****
உங்களுக்கு என்னவெல்லாம் தெரிந்திருக்கிறது என்று தெரிந்திருப்பது நல்லதுதான். ஆனால், என்னவெல்லாம் தெரியாமல் இருக்கிறது என்று தெரியாமல் இருப்பது நல்லதல்ல!

சுட்டிகள் விழா!

குழந்தைகளை, சிறுவர்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர்கள் செய்கிற சுட்டித்தனங்கள் பிடிக்கும். பெரியவர்களுக்கே தோன்றாத வித்தியாசமான சில கோணங்களில் சுட்டிகள் மனதில் எண்ணங்கள் உதிப்பது எனக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும்.

எனக்கு அப்போது 13 வயது. என் தம்பிக்கு 10 வயது. ஒரு சமயம், கிராமத்தில் எங்கள் தந்தையோடு நாங்கள் இருவரும் நடந்துபோய்க்கொண்டு இருந்தபோது, ஒரு வீட்டு வாசலில் இருந்த ஒரு பசு மாட்டைச் சுட்டிக் காட்டி, “அப்பா! அங்கே பாருப்பா, அந்த மாடு ஓட்டை!” என்று குழந்தையாக இருந்த என் தம்பி கத்தியது இன்னமும் எனக்குத் தெளிவாக ஞாபகத்தில் இருக்கிறது. ‘என்னது! மாடு ஓட்டையா?!’ என்று நாங்கள் ஆச்சரியத்தோடு திரும்பிப் பார்த்தபோது, பக்கென்று சிரித்துவிட்டோம். தம்பி அப்படிச் சொன்னதற்குக் காரணம் வேறொன்றுமில்லை... அந்தப் பசுமாடு தொட்டியில் தண்ணீர் குடித்துக்கொண்டே சிறுநீர் கழித்துக்கொண்டு இருந்தது.

பெரியவர்கள் ‘எல்லாம் தெரிந்தவர்களாக’ இருப்பதால், வழக்கமான தடத்திலேயே அவர்களின் சிந்தனை ஓடுகிறது. குழந்தைகள் எதையுமே புதுசாகப் பார்ப்பதால் அவர்களின் சிந்தனையும் புதுமையாக இருக்கிறது. அந்த விதத்தில் குழந்தைகளை குரு ஸ்தானத்தில் வைத்தே நான் மதிக்கிறேன்.

எனவேதான், சுட்டி விகடனின் தலைமைப் பொறுப்பாசிரியர் திரு. உபைதுர் ரஹ்மான், திருச்சியில் நடைபெறவிருக்கும் சுட்டி விகடன் விழாவில் கலந்து கொள்ள முடியுமா என்று கேட்டபோது, மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்டேன். ‘உனக்குள் இருக்கு ஒரு கதை’ என்கிற தலைப்பில், சுட்டிகளுக்குப் புரியும் விதத்தில் மிக எளிமையாக, சிறுகதை எழுதும் முறையை விளக்கிப் பேச வேண்டும் என்பது, அந்த விழாவில் எனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பு.

திருச்சி, நேஷனல் ஹைஸ்கூலில், 25.7.2009 அன்று காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5:30 மணி வரையில் மிகக் கலகலப்பாகவும், குதூகலமாகவும், கடைசி வரையில் உற்சாகம் ஒரு சிறிதும் குறையாமலும் மிகச் சிறப்பாக நடந்தேறியது அந்த விழா. வழக்கமான அலுவல்களையெல்லாம் மறந்து, ஒருநாள் முழுக்கச் சுட்டிகளோடு இருந்த அந்த அனுபவம் எனக்குள் புது ரத்தம் பாய்ச்சிய மாதிரி இருந்தது.

இன்றைய குழந்தைகள் மகா புத்திசாலிகள் என்று ஏற்கெனவே தெரியும். ஆனால், பலப் பல குழந்தைகளிடம் நேரடியாகப் பேசிப் பழகி அதைக் கண்கூடாக அனுபவித்தபோது, நிஜமாகவே பிரமிப்பில் ஆழ்ந்து போனேன். ஒவ்வொரு குழந்தையிடமும் எத்தனை விதமான திறமைகள்... சிந்தனைகள்!

எனது பேச்சின் நடுவே, ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட பார்வை வேண்டும் என்பதற்கு உதாரணமாக, ‘மேக ஒட்டடை அடிக்கும் மரங்கள்’ என, சிறுகதை ஒன்றில் எழுத்தாளர் சுஜாதா வர்ணித்திருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னேன். உடனே, ஒரு சிறுமி எழுந்து, சிலப்பதிகாரத்தில் ஓரிடத்தில், கோவலன் கைது செய்யப்பட்டுச் சிரச் சேதம் செய்யப்படப் போகிறான் என்பதை அறிந்து கொடி மரங்கள் சோகத்தோடு அவனை வராதே என்று சைகை செய்வது போல் ஆடின என்கிற உதாரணத்தைச் சட்டென்று சொன்னாள். அடேங்கப்பா!

மறுநாள் ஞாயிற்றுக் கிழமை... இங்கே சென்னையில் சுட்டிகள் விழா. இங்கேயும் சிறுகதை எழுதுவது பற்றிக் குழந்தைகளிடம் நான் பேசினேன். ஒரு சிறுகதையை முடிக்கும்போது, படிப்பவரின் மனதில் அந்த முடிவு ஆச்சரியத்தையோ அல்லது ஒரு பாதிப்பையோ ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லி, உதாரணமாக எழுத்தாளர் அசோகமித்திரன் எழுதிய ‘எலி’ சிறுகதையை விவரித்துச் சொன்னேன்.

தொல்லை தரும் எலியை அப்புறப்படுத்துவதற்காக, எலிப்பொறியில் மணக்கும் ஒரு மசால்வடையை வாங்கி வைக்கிறான் ஒருவன். வடையைத் தின்ன வரும் எலி மாட்டிக் கொள்கிறது. எலிப்பொறியைக் கொண்டு போய் ஒரு பரந்த வெளியில் திறந்துவிடும்போது, எலி தப்பித்து ஓடுகிறது. ஆனால், ஒரு காகம் அதை அலகால் குத்திக் கதறக் கதற அந்த எலியைக் கொத்திச் செல்கிறது. இதைக் கண்ட இவன் மனம் அந்த எலிக்காகப் பரிதாபப்படுகிறது.

இந்த இடத்தில், அவன் எலிப்பொறியை எடுத்துக்கொண்டு வீடு திரும்பினான் என்று கதையை முடிக்காமல், ‘அவன் அந்த எலிப்பொறியைப் பார்த்தான். உடனே, அவனது துக்கம் பன்மடங்கு பெரிதாகிவிட்டது’ என்று குறிப்பிடுகிறார் அசோகமித்திரன். ‘ஏன்?’ என்று சுட்டிகளிடம் கேட்டேன்.

சட்டென்று ஒரு சிறுவன் எழுந்து, “ஏனென்றால், அவன் எலிக்காக வைத்த வடையை அந்த எலி கொஞ்சம் கூடத் தின்னாமல் இருந்திருக்கும். வடை முழுசாக இருக்கும்” என்று மிகச் சரியாக, அசோகமித்திரன் எழுதிய கடைசி வரியைச் சொல்லி அசத்தினான்.

குழந்தைகள் அறிவாளிகள்; அன்பானவர்கள்; புத்திசாலிகள். அவர்களைத் திருத்தி வளர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு பெரியவர்களாகிய நாம்தான் அவர்களைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டு இருக்கிறோம்.

*****
குழந்தை செய்யும் சேட்டைகளைத் தாங்கினாலும் தாங்கிவிடலாம்; குழந்தையின் சேட்டைகளே இல்லாத வெறுமையைத் தாங்க முடியாது!

ஞாநியின் கேணி!

ஞாநி சமீபத்தில் குடியேறியிருக்கும் கே.கே.நகர் வீட்டின் பின்னால் ஒரு கேணி உண்டு. அதைச் சுற்றிக் கொஞ்சம் இடமும், தென்னை, வாழை, நாரத்தை மரங்களும் (நாரத்தைதானா என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை. இலையைப் பிய்த்துக் கசக்கி முகர்ந்து சோதிக்கவில்லை.) உள்ளன. சென்னையில் இப்படித் தென்னையும் கேணியும் உள்ள வீடா என்று காணி நிலம் கேட்ட பாரதி போன்று குதூகலித்து, அங்கே அந்தக் கேணியை மையமாகக் கொண்டு ஓர் இலக்கிய அமைப்பு தொடங்கலாமே என்று யோசித்து, ‘கேணி’ என்ற பெயரிலேயே தொடங்கியும் விட்டார் நண்பர் ஞாநி.

கேணி இல்லாவிட்டாலும்கூட ஞாநி ஏதேனும் இப்படி ஓர் இலக்கிய அமைப்பு தொடங்கியிருப்பார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ‘இலக்கியத் தோட்டம்’ என்று தொடங்கியிருக்கலாம். என் வீட்டில் இந்தத் தோட்டம் என்ற பேச்சுக்கே வழியில்லை. வீட்டினுள்ளும் வரவேற்பறை, கூடம், படுக்கையறை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லாம் சம அளவிலான எட்டுக்கு எட்டு கொண்ட அறைகள். ஞாநி வீட்டுக்கு வருவோம். கூடம் என்று கூட அவர் இலக்கிய அமைப்பு தொடங்கியிருக்கலாம். இலக்கியவாதிகள் கூடும் இடம் என்று பொருத்தமாக இருக்கும்தானே? முற்றம் என்றும் வைத்திருக்கலாம். சமையலறை என்று வைத்திருந்தாலும் பொருத்தமாகவே இருந்திருக்கும். சமைப்பது என்றாலே படைப்பதுதானே? சரி, கேணி ஒரு சாக்கு! எனக்கும் இந்தப் பதிவுக்கு எதுகை மோனையோடு ஒரு தலைப்பு கிடைத்தது.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிறன்று மாலை 4:30-க்கு ஞாநி வீட்டில் கேணிக் கூட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் வண்ணதாசன் இல்லத் திருமண வரவேற்பில் ஞாநியைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தபோதுதான், அவர் இந்தத் தகவலைச் சொல்லி, ‘முடிந்தால் வாருங்கள்’ என்றார். இது இரண்டாவது கூட்டம். முதல் கூட்டத்தில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு, தான் ரசித்த சிறுகதைகள் பற்றி உரையாடிவிட்டுச் சென்றிருந்தார். இந்த இரண்டாவது கூட்டத்தில் எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்துகொள்ளவிருப்பதாகச் சொன்னார் ஞாநி.

இலக்கியவாதிகள் என்றாலே எனக்குக் கொஞ்சம் அலர்ஜி! குறுந்தாடியும், ஜோல்னாப் பையும், வெற்றிலை போட்டுக் குதப்பிய உதடுகளும் மட்டும்தான் இன்றைய இலக்கியவாதிகளிடம் மிஸ்ஸிங்! மற்றபடி, ‘தோல்ஸ்தோவெய்ஸ்கி ஒரு இடத்துல என்ன சொல்லியிருக்கான்னா...’ என்று ஆரம்பித்து பிளேடு போடுகிற ஆசாமிகள் என்பது என் அபிப்ராயம். நான் சினிமாவை ரசிப்பேன்; சினிமாக்காரர்களை அல்ல! அதே போல் படைப்புகளை ரசிப்பேன்; படைப்பாளிகளோடு அதிகம் தொடர்பு வைத்துக்கொள்ள நான் விரும்புவதில்லை.

நான் சாமானியன். நான் இலக்கியவாதி கிடையாது. பத்திரிகையில் பணியாற்றுவதால், நானும் இலக்கியவாதியாக இருக்கவேண்டும் என்கிற அவசியம் கிடையாது. ஆனாலும், நான் அந்தக் கூட்டத்துக்குச் சென்றிருந்தேன், அங்கே என்னதான் நடக்கிறது என்று வேடிக்கை பார்க்க! இதுவே ஞாநி அந்த இலக்கியக் கூட்டத்தை ஒரு ஸ்டார் ஹோட்டலில், அல்லது ஒரு பொது மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தால், இந்தப் பதிவை இப்போது நான் எழுதிக்கொண்டு இருக்கமாட்டேன்.

அங்கே வந்திருந்தவர்களில் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி, எஸ்.சங்கரநாராயணன் (சாவி காலத்து நண்பர்), ஏ.ஏ.ஏ. (மூணு ‘ஏ’தானே?)ஹெச்.கே.கோரி. க.சீ.சிவகுமார், பிரதம விருந்தினர் பிரபஞ்சன் இவர்களைத் தவிர, வேறு யாரையும் எனக்குத் தெரியவில்லை. நான்தான் இலக்கியவாதி இல்லையே!

பிரபஞ்சனின் ‘கனவுகளைத் தின்போம்’ தொடர்கதை ஆனந்த விகடனில் வெளியாவதற்கு முன்னதாக, அதற்கு எந்த ஓவியரிடம் படம் வாங்கலாம் என்று திரு.வீயெஸ்வி என்னிடம் கலந்தாலோசித்தார். அது இலக்கியப் பெண்மணி ஒருத்தியைப் பற்றிய, அவளுக்கும் பேராசிரியருக்கும் உள்ள உறவு பற்றிய கதை என்று ஞாபகம். சரியாக நினைவில்லை. கோபுலு போட்டால் சரியாக இருக்கும் என்று நான் கருத்து சொன்னேன். ஆனால், விகடனுக்கும் கோபுலுவுக்கும் உள்ள தொடர்பு விட்டுப் பல காலம் ஆகியிருந்தது. அவர் போட்டால் நன்றாக இருக்கும்; ஆனால், போடுவாரா என்று ஓர் ஐயம் இருந்தது. ‘கேட்டுப் பார்க்கிறேனே! இல்லாவிட்டால், மாற்று யோசிப்போம்’ என்றேன்.

ஓவியர் கோபுலுவிடம் பேசினேன். அவர் அந்தத் தொடருக்குப் படம் வரைய ஒப்புக்கொண்டு, அற்புதமாக வரைந்துகொடுத்தார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் மீண்டும் விகடனுக்கும் கோபுலுவுக்கும் உள்ள தொடர்பு உயிர்பெற்று, நீடித்து வருகிறது.

நேர்மையாகச் சொல்வதானால், பிரபஞ்சனின் சிறுகதைகளை நான் அதிகம் படித்ததில்லை. ஒன்றிரண்டு படித்திருக்கலாம். ஆனால், நான் அவரது எழுத்தை அதிகம் வாசித்து வியந்தது, ‘வானம் வசப்படும்’ நாவலில். பாண்டிச்சேரி கவர்னராக இருந்த டியூப்ளெக்ஸ் துரை, அவரது மனைவி ழான், அவர்களிடம் துபாஷாக வேலை பார்த்த ஆனந்தரங்கப் பிள்ளை அவர்களின் வாயிலாக பாண்டிச்சேரியின் கதையை அன்றைய காலகட்டத்துக்குப் பொருத்தமான தமிழ் நடையில் எழுதியிருப்பார். படிக்கவே ரசனையாக இருக்கும்.

மாதிரிக்கு அதிலிருந்து சில வரிகள்...

ழான், ஆவி பறந்த சீனப் பீங்கான் பாத்திரத்தை வெள்ளைத் துணி கொண்டு போர்த்தி, வெகு நாகரிகமாகவே குவர்னருக்குக் கபேவைப் பெய்தாள்.

“ழான்... இன்னிக்குக் காலமே, நம்முடைய ஆப்தரும், சினேகிதருமான சந்தா சாகிப்பின் பாரியாளைச் சந்திக்க வேணும் என்பதாகச் சொன்னாயே... உனக்குப் புறப்பாட்டுக்கு நேரமாகவில்லையா?”

“இருக்கட்டும். ராஜாவாகிவிட்ட என் ழோசேப் இனி அடிக்கடி காணவும், கேழ்க்கவும், பேசவும் அருமையாகிவிடுவார், அல்லவா? ஆதலினால் கிடைக்கும் நேரத்தை அருகில் இருந்து சுகப்பட வேணும் என்று ஆசை.”

எடுத்தால் கீழே வைக்க மனம் வராதபடிக்கு விறுவிறுப்பாகப் போகும் கதை. சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாவல் இது.

திறமையான எழுத்தாளர்கள் பலர் திறமையான பேச்சாளர்களாக இருப்பதில்லை. ஆனால், பிரபஞ்சனின் பேச்சு வெகு ரசனையாக இருந்தது. ஜோக்கைக் கூடக் கடுகடுவென்று படித்துத் தேர்ந்தெடுப்பவன் என்று எங்கள் அலுவலகத்தில் எனக்கொரு ‘நல்ல பெயர்’ உண்டு. என்னையே பகீர் பகீரென்று பல இடங்களில் சிரிக்க வைத்தது பிரபஞ்சனின் பேச்சுப் பாணி. ஒரு கதையை விவரிக்கும்போது, அது யாரோ எழுதியதாக இருந்தாலும், அதைத் தான் எழுதியிருந்தால் எப்படி அதில் தோய்ந்து அனுபவித்து ஏற்ற இறக்கங்களுடன், தேவையான இடங்களில் சற்று இடைவெளி கொடுத்துச் சொல்வாரோ, அப்படி விவரித்தார். சங்க இலக்கியம், ஐரோப்பிய இலக்கியம், ரஷ்ய இலக்கியம், நவீன இலக்கியம் என சங்கிலித் தொடர்ச்சி போன்று இயல்பாகத் தொட்டுத் தொடர்ந்தது அவரது உரையாடல்.

நிஜமாகவே ஒரு நல்ல, பயனுள்ள பொழுதாகக் கழிந்தது அன்றைய மாலை! கோயிலுக்குப் போவதே புண்ணியம். அங்கே பிரசாதமாக சுவையான சுண்டல் வேறு கிடைத்தால், அது கூடுதல் பயன் அல்லவா? கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்குச் சுண்டல், டீ பிரசாதங்களும் கிடைத்தன.

இதை வாசிப்பவர்கள், இதையே அழைப்பாகக் கொண்டு, அடுத்த மாதம் இரண்டாவது ஞாயிறன்று மாலை நடக்கவிருக்கும் ‘ஞாநியின் கேணி’ கூட்டத்துக்கு அவசியம் வரவேண்டும் என இதன்மூலம் அழைக்கிறேன். இடம்: 39 அழகிரிசாமி சாலை, கே.கே.நகர், சென்னை-78.

ஞாநியைக் கலந்தாலோசிக்காமல் நானாகவே விடுத்த இந்த அழைப்புக்கு ஞாநி கோபிக்க மாட்டார் என நம்புகிறேன்.

*****
ஒரு நல்ல காரியத்தைச் செய்வதற்கு ஏற்ற மிக நல்ல நாள் நேற்றைக்கும் நாளைக்கும் இடையில் இருக்கிறது.

படித்தேன்... பார்த்தேன்..!

‘அடுத்த மாதம் ஏழாம் தேதி, நான்கு மணி சுமாருக்கு ஓர் அதிசயம் நடக்கப் போகிறது. மிஸ் செய்துவிடாதீர்கள். கொண்டாடுங்கள். இனி இப்படி ஒரு அதிசயம் உங்கள் வாழ்வில் நிகழவே நிகழாது!’ என்ற குறிப்போடு, எனக்கு ஒரு இ-மெயில் வந்தது. அப்படி என்னதான் அதிசயம் என்று படித்துப் பார்த்தேன்.

அதாவது, அடுத்த மாதம் ஏழாம் தேதி, காலை நான்கு மணி, ஐந்து நிமிடம், ஆறு விநாடி ஆகும்போது பார்த்தால், 04:05:06:07:08:09 என்று வரிசையாக வருமாம்.

உக்காந்து யோசிப்பாய்ங்களோ?!

ன்னொரு மெயில்... முன்பெல்லாம் வீட்டுக்கு வீடு ஒரு கார்டு வரும் பார்த்திருக்கிறீர்களா... அதில், ‘கோயிலுக்குள் ஒரு பாம்பு புகுந்தது. அது பின்னர் ஒரு பிராமண வடிவம் தாங்கி, மூலவரை மூன்று சுற்றுச் சுற்றிவிட்டு...’ என்று இஷ்டத்துக்கு அளந்துவிட்டு, ‘இந்த கார்டில் உள்ள வாசகங்களை அப்படியே பிரதியெடுத்து ஒரு பத்து பேருக்கு அனுப்பவும். அப்படிச் செய்த இன்னார் பதவி உயர்வு பெற்றார்; இன்னாருக்கு லாட்டரியில் பத்தாயிரம் ரூபாய் பரிசு விழுந்தது. மாறாக, இதை அலட்சியம் செய்த இன்னார் ரத்த வாந்தி எடுத்துச் செத்துப் போனார். இன்னார் தொழில் நஷ்டம் அடைந்து, குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது’ என்று பயமுறுத்தி எழுதப்பட்டிருக்கும். அதையும் நம்பி, மாங்கு மாங்கென்று கடிதங்கள் எழுதித் தள்ளிய பல பெரியவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

இந்த இன்டர்நெட் யுகத்தில் அத்தகைய கடிதங்கள் ஒழியவில்லை. இ-மெயிலில் அப்படியான கடிதங்கள் அவ்வப்போது வந்துகொண்டு இருக்கின்றன. சீன ஜோசியம் என்ற ஒன்று எனக்கு அப்படித்தான் வந்தது. இன்ன நம்பருக்கு இவர் என்று உங்களுக்கு அறிமுகமான ஒருவர் வீதம் ஒரு ஏழெட்டு நம்பர்களுக்கு மனதுக்குள் நினைத்துக்கொள்ளச் சொல்லிற்று அந்த மெயில். இதில், ‘ஒரு முறை நினைத்த நபரை மாற்றக்கூடாது; முதலில் என்ன தோன்றுகிறதோ, அவரையேதான் அந்தக் குறிப்பிட்ட எண்ணுக்கு உரியவராக வைத்துக்கொள்ள வேண்டும்; இல்லாவிட்டால் ஜோஸியம் பலிக்காது’ என்று ஏகப்பட்ட பில்டப்கள் வேறு!

சரி, சும்மா விளையாடித்தான் பார்ப்போமே என்று முயற்சி செய்ததில், சீன ஜோஸியம் சொன்ன ஒரு பலனும் எனக்குப் பொருந்தவில்லை. ஆனால், இறுதியில் அந்த மெயில், ‘என்ன, எப்படி இத்தனைப் பொருத்தமாகப் பலன்கள் அமைந்தது என்று வியக்கிறீர்களா? அதுதான் இந்த சீன மேஜிக்கின் மகிமை! உடனே இந்த மெயிலை உங்களுக்குத் தெரிந்த பன்னிரண்டு பேருக்கு ஃபார்வேர்ட் செய்யவும். அப்படிச் செய்தவர்களுக்கு அவர்களின் வேண்டுதல் அடுத்த பத்தே நிமிடத்தில் பலிதமாகும். அலட்சியம் செய்தவர்களுக்கு இது நேர்மாறாகத் திரும்பி, கெடுதி உண்டாகும். ஜாக்கிரதை!’ என்று மிரட்டியது.

‘என்னிய வெச்சுக் காமெடி கீமெடி ஒண்ணும் பண்ணலியே!’ என்று நினைத்தபடி, அதைக் கிடப்பில் போட்டுவிட்டேன். அது ஆயிற்று ஒரு மாதம்! அந்த மெயில் மிரட்டிய மாதிரியே எனக்கு ஒரு கெடுதி நடந்துவிட்டது. செருப்பு அறுந்துபோய்விட்டது. புதுசு வாங்க இருநூறு ரூபாய் தண்டச் செலவு. சொல்லுங்க, இது கெடுதிதானே?

சில நாட்களுக்கு முன்னால், அதாவது மே 28-ம் தேதி, ‘ஞாநி தந்த ஞானம்’ என்ற தலைப்பில் எழுதிய பதிவில், ஒரு பஸ் டிரைவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அவரது ஓட்டும் திறமையை நான் பாராட்டப் போக, அதற்கு அவரின் எதிர் விளைவு நன்றி தெரிவிப்பதற்குப் பதிலாக, ‘என்ன, நக்கல் பண்றீங்களா?’ என்று கோபமும் வருத்தமாக இருந்தது என்று வியப்புடன் எழுதியிருந்தேன். அவரை மீண்டும் சந்தித்தால், இது பற்றி அவரிடம் நிதானமாகப் பேசி விவரம் கேட்பேன் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.

அவரை இத்தனை நாட்களுக்குப் பிறகு, இன்று மீண்டும் சந்தித்தேன். பழைய விஷயத்தை அவரிடம் ஞாபகப்படுத்திவிட்டு, “அன்றைக்கு ஏன் அப்படி ரியாக்ட் செய்தீர்கள்?” என்று கேட்டேன்.

“அப்படியா! ஸாரி, ஏதோ ஒரு மூடில் இருந்திருப்பேன்” என்றார். “ஆனா, நான் உங்களை அன்னிக்குப் பாராட்டத்தானே செய்தேன்? அதற்கே கோபப்பட்டீர்களே, அதுதான் எனக்குப் புரியவில்லை” என்றேன்.

“சாக்கடை அள்ளுறவன்கிட்டே போய், ‘நீ சூப்பரா சாக்கடை அள்ளுறடா’ன்னு பாராட்டினா, அவன் கோபப்படுவானா, மாட்டானா?” என்று திருப்பிக் கேட்டார். இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. பின்பு நிதானமாக, “யோசித்துப் பார்த்தால், எந்தத் தொழிலும் கேவலம் இல்லைதான். ஆனால், அவரவர் மன நிலையிலிருந்துதான் இதைப் பார்க்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்வதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், டிரைவர் வேலை என்பது ஒன்றும் கீழானதோ, கண்ணியக் குறைவானதோ இல்லையே?” என்றேன்.

“எனக்குப் பிடிக்கலை” என்றார். “வயித்துப்பாட்டுக்காகத்தான் நான் இந்த டிரைவர் வேலைல இருக்கேன். இதை விட்டா எனக்கு வேறு எதுவும் தெரியாது!”

மெல்லப் பேச்சுக்கொடுத்தேன். அவர் பெயர் ராதாகிருஷ்ணன். மதுரைப் பக்கம் ஏதோ கிராமமாம் அவரின் சொந்த ஊர். சினிமா ஆசையில் கிளம்பி வந்தவர், இங்கே சில இயக்குநர்களுக்குக் கார் டிரைவராகவும் இருந்திருக்கிறாராம். சினிமா வாய்ப்பு தேடி அவர் அலையாத அலைச்சலில்லை. நடிகனாகவேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறவே இல்லையாம். ‘சும்மா கதாநாயகனோடு சேர்ந்து பத்தோடு பதினொன்றாக நிற்கிற வாய்ப்புக்கூடக் கிடைக்கவில்லை’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார்.

“கையில் எடுத்து வந்த பணமெல்லாம் தொலைஞ்சுது. நடிகனாகிட்டுதான் ஊருக்குத் திரும்புவேன்னு எல்லார்கிட்டயும் சபதம் போட்டுட்டு வந்தேன். நான் தோத்துட்டேன். ஊருக்குத் திரும்பிப் போக அவமானமா இருந்துது. அதான், இங்கேயே தங்கிட்டேன். ஹெவி வெகிக்கிள் லைசென்ஸ் எடுத்து வெச்சிருந்தேன். பஸ் டிரைவர் வேலைக்கு அப்ளை பண்ணி, வாங்கிட்டேன். ஏதோ காலம் ஓடிக்கிட்டிருக்கு!” என்றார்.

“நீங்கள் நம்பி வந்த சினிமா உங்களைக் கைவிட்டுவிட்டது. டிரைவர் தொழில்தான் உங்களை இப்போது வாழ வைத்துக்கொண்டு இருக்கிறது. நீங்கள் என்னடாவென்றால், கைவிட்ட காதலியையே மனதில் நினைத்துக் கொண்டு, உடன் இருக்கும் அன்பு மனைவியை உதாசீனப்படுத்துகிற கணவன் மாதிரி நடந்துகொள்கிறீர்களே, நியாயமா?” என்று கேட்டேன்.

சிரித்துவிட்டார்.

பிடிக்காத வேலையையே இத்தனைச் சிறப்பாகச் செய்தால், அதே வேலையை அவர் பிடித்துச் செய்தால் இன்னும் எத்தனை அருமையாகச் செய்வார் என்று நினைத்துப் பார்த்தேன்!

‘வசந்த மாளிகை’ படத்தில் ஒரு வசனம் வரும்... ‘நீ விரும்புகிற பெண்ணை விட உன்னை விரும்புகிற பெண்ணை மணந்துகொள்வதுதான் உனக்கு நல்லது!’ என்று. அதைப் போல, ‘நீ விரும்புகிற வேலை கிடைக்காவிட்டால், உனக்குக் கிடைத்த வேலையை விரும்பு’ என்றொரு வாசகம் மனதில் தோன்றியது. சொன்னேன்.

“அதெல்லாம் எப்பவோ மறந்துட்டேன், சார்! சினிமாவே வேணாம் நமக்குன்னு ஒதுங்கி நாலஞ்சு வருஷமாவுது. நடுவுல ஊருக்கும் ஒருமுறை போய் வந்தேன். கல்யாணம் கட்டிக்கிட்டேன். முறைப்பொண்ணுதான். ஒரு பொண் குழந்தை. எல்.கே.ஜி. படிக்குது. நல்லபடியா போயிட்டிருக்குது வாழ்க்கை. அன்னிக்கு நீங்க கேட்டதும், என்னவோ தெரியல, பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்து, ஒரு மாதிரி சுர்ருனு ஆயிருச்சு. பட்டுனு பேசிட்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க!” என்றார்.

சில நேரங்களில் சில மனிதர்கள்!

*****
பேச்சுக் கலை என்பது சரியான நபருக்கு சரியான விஷயத்தை விளக்கிச் சொல்வது மாத்திரமல்ல; தவறான நபரிடம் தவறான விஷயத்தைப் பேசாதிருப்பதும் ஆகும்!

கல்யாண்ஜி வீட்டுக் கல்யாணம்!

சைக்களில் வந்த
தக்காளிக் கூடை சரிந்து

முக்கால் சிவப்பில் உருண்டது
அனைத்துத் திசைகளிலும் பழங்கள்

தலைக்கு மேலே

வேலை இருப்பதாய்
கடந்தும் நடந்தும்
அனைவரும் போயினர்
பழங்களை விடவும்

நசுங்கிப் போனது
அடுத்த மனிதர்கள்
மீதான அக்கறை!

***

தினசரி வழக்கமாகிவிட்டது

தபால்பெட்டியைத் திறந்து பார்த்துவிட்டு

வீட்டுக்குள் நுழைவது.

இரண்டு நாட்களாகவே

எந்தக் கடிதமும் இல்லாத ஏமாற்றம்.

இன்று எப்படியோ என்று பார்க்கையில்

அசைவற்று இருந்தது

ஒரு சின்னஞ்சிறு இறகு மட்டும்

எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.

- கல்யாண்ஜி

***
மூக அக்கறையும், இயற்கை மீதான ஈரக் கசிவும், மனித உறவுகளில் மாறாத பிரியமும் கொண்டு நம் மனத்தை நெகிழ்த்திவிடும் கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் கல்யாண்ஜி என்கிற வண்ணதாசன் என்கிற திரு.கல்யாணசுந்தரம் அவர்கள்.

அவரது மகன் நடராஜ சுப்ரமணியனின் திருமண வரவேற்பு விழா இன்று மாலை ஆறரை மணியளவில், அசோக் நகர் உதயம் கல்யாண மண்டபத்தில் நிகழ்ந்தது. அன்புடன் அழைப்பு அனுப்பியிருந்தார் திரு.வண்ணதாசன். போயிருந்தேன்.

திரு. வண்ணதாசன் எழுத்துக்கள் கவித்துமாக இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, ஓராண்டுக்கு முன் வரை அதிகம் அவரது எழுத்துக்களை வாசித்ததில்லை. எப்போதேனும் அவரது கவிதை வரிகளைச் சிலாகித்து சுஜாதா தமது ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் குறிப்பிடுவார்.

ஓராண்டுக்கு முன்பு, திரு. வண்ணதாசன் ஆனந்த விகடனில் ‘அகம் புறம்’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதத் தொடங்கினார். அவற்றைப் படிக்கப் படிக்க, அந்த எழுத்தின் வசீகரத்தில் ஆழ்ந்தேன். இத்தனை நாட்களாக இவரது எழுத்துக்களைப் படிக்காமல் விட்டிருக்கிறேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். சக மனிதர்கள் மீதான அக்கறையை, அன்பைப் போதித்த கட்டுரைகள் அவை. படிக்கப் படிக்கக் கண்கள் கசிந்தன; இதயம் இளகியது.

அவருக்கு உடனே ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். அவரது எழுத்துக்களை இதற்கு முன் வாசித்ததில்லை என்பதை நேர்மையாகச் சொல்லி வருத்தப்பட்டு, குறிப்பிட்ட கட்டுரை ஒன்றைப் பற்றிய என் அனுபவத்தையும் எழுதியிருந்தேன். உடனடியாக பதில் எழுதியிருந்தார். அவர் சாதாரணமாக எழுதுகிற கடிதம் கூட மனதை இறகால் வருடுகிற மாதிரியான வரிகளோடுதான் இருந்தது.

திருமண வரவேற்புக்குச் சென்றதன் முக்கிய நோக்கமே அவரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்கிற பெருவிருப்பம்தான். கையோடு எடுத்துப் போயிருந்த என் மூன்று புத்தகங்களையும் அவரிடம் மகிழ்ச்சியோடு தந்துவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். அத்தனைப் பரபரப்பிலும், கூட்ட நெருக்கடியிலும்கூட அவர் தன் அருகில் இருந்தவரிடம் என்னைச் சுட்டிக் காட்டி, ‘இவர் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார் பாருங்க, அருமையான கடிதம்!’ என்று சிலாகித்து, ஒரு விநாடி நேரத்துக்கு என் கால்கள் தரையில் பாவாமல் செய்துவிட்டார்.

எழுத்தாளர் ஜெயகாந்தன் சிங்கம் போல் வந்தார். மாலன், ஞாநி என எண்ணற்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்ட விழா அது.

ஞாநியுடன் வெகு நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். நடுவில் இரண்டு மாத காலம் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகச் சொன்னார். ‘இண்டஸ்டைன் டி.பி’ என்று கொஞ்சம் லேட்டாகக் கண்டறிந்து, மருந்து சாப்பிட்டு வருவதாகவும், இன்னும் ஆறு மாத காலத்துக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டும் என்றும் சொன்னார். ஏற்கெனவே ஊர் பூரா சிக்கன்குனியா வந்து வாட்டியபோது, இவரையும் சில காலம் வாட்டியெடுத்தது. ஷுகர் உண்டு. அதற்கும் மாத்திரை சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார். அத்தனைக்கும் அசராத ஆத்மா. வில் பவர் அதிகம் உள்ள எழுத்தாளர். அவருடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தால், கொஞ்ச நேரத்தில் நமக்கும் தோள்கள் தினவெடுப்பது போலிருக்கும்.

கே.கே.நகரில் உள்ள தன் வீட்டிலேயே பிரதி மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை ‘கேணி’ என்ற தலைப்பில் இலக்கியக் கூட்டம் ஒன்றை நடத்தி வருவதாகச் சொன்னார். எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன் போன்ற பெரிய எழுத்தாளர்கள் கலந்துகொண்டு, தாங்கள் ரசித்த சிறுகதைகள் பற்றிப் பேசுவதாகச் சொன்னார். வருகிற ஞாயிற்றுக்கிழமை ‘கேணி’ கூட்டத்துக்கு அவசியம் வந்துவிடு என்று எனக்கு அன்பு அழைப்பு விடுத்தார்.

திருமண வரவேற்பில், கரோகி முறையில் பாடல்களைப் பாடினார்கள். அதாவது, ஏற்கெனவே பதிவான ஒரிஜினல் மியூஸிக் டிராக்கில் பாடகர்களின் குரலை மட்டும் ம்யூட் செய்துவிட்டு, இந்த மேடைப் பாடகர்கள் குரல் கொடுத்துப் பாடுகிற முறை. அருமையாகவே பாடினார்கள்.

மொத்தத்தில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி ப்ளஸ் இலக்கியக் கூட்டம் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயாக அமைந்தது திரு. வண்ணதாசனின் மகனின் திருமண வரவேற்பு விழா!

*****
நீங்கள் சந்திக்கும் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஓர் ஆசிரியர்!

விவஸ்தை கெட்டவர்கள்!

நாட்டில் ரொம்பப் பேருக்கு விவஸ்தை கெட்டுப் போச்சு! ஓரினச் சேர்க்கையாம், உரிமையாம், தீர்ப்பாம், நியாயமாம்... தூ!

அரவாணிகள் தங்கள் உரிமைகளுக்கான வாதங்களை எடுத்து வைத்தார்கள். சினிமாக்களிலும் பொது வாழ்விலும் தாங்கள் எப்படியெல்லாம் கேலிப் பொருளாக்கப்படுகிறோம் என்பதையும், தங்களுக்கென பஸ்களில் ஸீட்டோ, பொது இடங்களில் பிரத்யேகக் கழிப்பறைகளோ இல்லை என்பதையும் சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள். அவற்றில் நியாயம் இருக்கிறது. இன்றைக்கு ஒரேயடியாக அவர்களின் நிலை மாறிவிடவில்லை என்றாலும்கூட, சமுதாயத்தில் அவர்களைப் பற்றி முன்பிருந்த மோசமான அபிப்ராயமோ, அந்த அளவு கேலிப் பார்வையோ இப்போது இல்லை. கை ஊனம், கால் ஊனம் என்பது போல பிறப்பிலேயே பால் குறைபாட்டோடு பிறந்தவர்கள் அவர்கள் என்பதை ஜனங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டு வருகிறார்கள். அரவாணிகளாகப் பிறந்தது அவர்களின் குற்றம் இல்லை. இயற்கை செய்த குற்றம். எனவே, அவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும், சமுதாயம் அவர்களைப் புறக்கணிக்காமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நியாயமே!

ஆனால், இன்றைக்கு ஓரினச் சேர்க்கையாளர்களும் அப்படியானதொரு கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். இயற்கைக்கு மாறான தங்களின் வக்கிர உணர்வை நியாயப்படுத்தி வருகிறார்கள். வாதம் செய்வது என்றால் எந்தக் கொலை, கொள்ளை, கற்பழிப்புகளையும்கூட நியாயப்படுத்திவிட முடியும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன்கூட ஓரினச் சேர்க்கையாளர்தான் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். எம்.ஆர்.ராதா தன்னை ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர் என்று வெளிப்படையாகச் சொல்லிக் கொண்டார். இன்னும் பல பெரிய புள்ளிகளும் ஓரினச் சேர்க்கையில் நாட்டமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், அவை எதுவும் பரவலான சமூகக் கவனத்தைப் பெறவில்லை. அப்படியே அவற்றை நாம் உண்மை என்றே ஒப்புக்கொள்வதாக இருந்தாலும், அதை அவர்களின் பலவீனமாகத்தான் பார்க்கிறோமே தவிர, சிறப்பம்சமாகப் பார்க்கவில்லை. காமராஜருக்குப் புகை பிடிக்கும் வழக்கம் இருந்தபோதிலும், அதைப் பலர் அறிய அவர் வெளிப்படுத்திக்கொண்டது இல்லை. காரணம், அவர் உண்மையான பெருந்தலைவர்!

‘ரகசியமாகச் செய்தால் சரி, வெளிப்படையாகச் செய்தால் தப்பா?’ என்று குதர்க்க வாதம் எழுப்பிப் பயனில்லை. ரகசியமாகச் செய்வதால் ஒரு தப்பு சரியாகிவிடாது; ஆனால், அதை வெளிப்படையாகச் செய்யும்போது, அதுவும் ஒரு பெரிய புள்ளி செய்யும்போது அது பலருக்கும் முன்னுதாரணம் ஆகிவிடுகிறது. ‘அவரே செய்திருக்கிறார்; நாம் செய்தால் என்ன?’ என்ற தடித்தனம் உடம்பில் ஏறிவிடுகிறது. பெரியவர்களிடமுள்ள நல்ல குணங்களையும், சாதனைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடமுள்ள தீய பழக்கங்களை மட்டும் பிடித்துக்கொள்வதுதானே நம் வழக்கம்? கண்ணதாசனே போதைப் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று சொல்லி, கவிஞனுக்கு முதல் அடையாளம் பெத்தடின் என்பதாக அர்த்தப்படுத்திக்கொண்டு, ஊசி போட்டுக்கொண்ட கவிஞ நண்பரை எனக்குத் தெரியும். பாரதியாரே கஞ்சா அடித்திருக்கிறார் என்று சொல்லி, கஞ்சா அடிக்கிற கயவாளிகளும் இருக்கிறார்கள். அவர் மாதிரி ஆக்ரோஷமாகக் கவிதை எழுதத்தான் வரவில்லை; அவர் மாதிரி கஞ்சாவாவது அடிப்போமே என்கிற எண்ணம்!

ஓரினச் சேர்க்கை என்பது ஒரு வக்கிரம். இயற்கைக்கு மாறான எதுவுமே வக்கிரம்தான். ‘வம்ச விருத்திக்காக மட்டும்தான் உடலுறவா? மனத் திருப்திக்கும்தானே? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ருசி என்பது போல் எங்களுக்கு ஓரினச் சேர்க்கையில் ருசி. இதில் என்ன தப்பு?’ என்பது அவர்களின் கேள்வி. பசிக்குச் சாப்பிடாமல் ருசிக்குச் சாப்பிடப் போய்த்தான் மனிதனுக்கு இத்தனை வியாதிகள்!

‘இதனால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை’ என்பது அவர்களின் இன்னொரு வாதம். தனிப்பட்ட யாரையும் அது நேரடியாகப் பாதிக்காமல் இருக்கலாம்; ஆனால், ஒட்டு மொத்த சமுதாயத்தையும் மறைமுகமாகப் பாதிக்கிறது. எல்லா வக்கிரங்களும் வெளிப்படையாகவே அரங்கேறத் தொடங்கிவிட்டால், அந்த உணர்வு இல்லாதவர்களுக்கும் ஒருமுறை அதையும் அனுபவித்துதான் பார்ப்போமே என்கிற தைரியம் வரும். அப்புறம் அது ஒரு ஃபேஷனாகும். தாங்கள் ஓரினச் சேர்க்கையாளர் இல்லையென்றால்தான் அது கேவலம் என்ற நிலை உருவாகும். சமுதாயம் சீரழியும்.

சினிமாவிலும், தொலைக்காட்சியிலும், பண்பலை ஒலிபரப்புகளிலும் காதல் புனிதமானது என்று ஓயாமல் பேசிப் பேசி, இன்றைக்குப் பள்ளி மாணவி்கூட தனக்கு ஒரு பாய்ஃப்ரெண்ட் இல்லாதது கேவலமானது என்று நினைத்து வருத்தப்படும் அளவுக்குக் கொண்டு வந்து விட்டுவிட்டோம். படிப்பை விடக் காதல்தான் முக்கியமாகப் போய்விட்டது மாணவர்களுக்கு. அவர்களை அப்படி ஆக்கி வைத்தது நாம்தானே?

பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருவர் மனம் ஒருமித்தால் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாமா? என்ன கண்றாவி இது! அவர்களின் ரசனை அந்த லட்சணத்தில் இருக்கிறதென்றால், கவுன்சலிங் கொடுத்துதான் திருத்தவேண்டுமே தவிர, எப்படியோ செய்துகொண்டு போ என்று அனுமதிப்பதா நியாயம்!

குடிப்பதற்குக் குடிமகன்களுக்கு உரிமை, கண்டபடி உடை அணிவதற்குப் பெண்களுக்கு உரிமை, ‘தொழில்’ செய்வதற்குப் பாலியல் தொழிலாளர்களுக்கு உரிமை, உடல் சுகம் தருவதற்கு விலைமகன்களுக்கும் உரிமை, ஓரினச் சேர்க்கையாளருக்கும் உரிமை என கேட்டவருக்கெல்லாம் உரிமைகளை அள்ளி வழங்கிக்கொண்டே போனால்...

ஹூம்... நாடு உருப்புட்ட மாதிரிதான்!

*****
முட்டாள்கள் தங்கள் கருத்தில் திடமாக இருக்கிறார்கள்; அறிவாளிகளோ தங்கள் கருத்தில் சந்தேகத்துடனேயே இருக்கிறார்கள். அதுதான் பிரச்னை!

நான் அறிந்த ‘பாலே’!

பாலேவைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது; பரத நாட்டியத்தைப் பற்றியும் தெரியாது! இரண்டையும் தொலைக்காட்சியிலும் சினிமாக்களிலும் பார்த்ததுதான்! இரண்டிலும் எனக்கு அதிகம் பிடித்தது பரதம்தான். அதைத்தான் முந்தைய பதிவில் குறிப்பிட்டேன்.

ஒரு சினிமாப் பாடலை ரசிக்கிறேன்; மற்றொரு பாடல் எனக்குப் பிடிக்கவில்லை என்றால் இந்தப் பாடலின் பல்லவி எந்த ராகத்தில் உள்ளது, சரணங்களில் என்னென்ன ராகங்கள் கலந்திருக்கின்றன, ஆரோகணத்தில் அமைந்துள்ளதா, அவரோகணத்தில் அமைந்துள்ளதா, என்ன தாளக் கட்டு, அட தாளமா, ஆதி தாளமா என்றெல்லாம் எனக்குத் தெரியும் என்று அர்த்தமல்ல.

சொல்லப்போனால் மற்றொரு பாடலை அந்தப் பாடகர் ராகம் வழுவாது பாடியிருக்கக்கூடும்; எனினும் அது எனக்குப் பிடிக்காமல் போகலாம். இந்தப் பாடலை அதைப் பாடியவரின் குரலுக்காகவேகூட நான் ரசிக்கக்கூடும். அதே போல, பரத நாட்டியத்தில் அந்த உடையலங்காரம்கூட பாலேவை விட என்னை அதிகம் ஈர்த்திருக்கலாம். ஈஸ்வரி தன் பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்ததுபோல பாலேவை நானும் ஒரு சர்க்கஸைப் போலத்தான் பார்த்து பிரமித்திருக்கிறேனே தவிர, அதை ஒரு நடனமாக என்னால் பாவிக்க முடியவில்லை. முன்பு, சொர்ணமுகியின் பரத நாட்டியமேகூட ஒரு சர்க்கஸ் என்பது போலத்தான் விமர்சனத்துக்குள்ளாகியது நினைவிருக்கிறதா?

சரி, பாலேவுக்கு வருவோம்.

பாலே என்பது ஒரு பிரெஞ்சு சொல். இதற்கு பாணி அல்லது நடனம் மூலம் கதை சொல்லும் ஒரு மேடைத் தயாரிப்பு என்பது பொருள். அதாவது, பாலே பார்க்கிறோம் என்றால், நடனம் மூலம் கதை சொல்லும் பாணியிலான ஒரு மேடை நிகழ்ச்சியைப் பார்க்கிறோம் என்று பொருள்.

பாலேவில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று பிரெஞ்சு பாலே; மற்றொன்று சோவியத் பாலே! ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால் பாலே நடனத்தின் தாய் இத்தாலிதான். ஐந்து நூற்றாண்டுகளுக்கு முந்தைய இத்தாலிய மன்னர்களின் அரசவையில் ஆண்களும் பெண்களும் நடனமாடி, அரசரையும் அரச குடும்பத்தினரையும் மகிழ்வித்தனர். அந்த நடன முறைதான் பாலேயாக வடிவெடுத்தது.

கொலம்பஸ் காலத்துக்கும் முற்பட்டது இந்த நடன வகை. ஆரம்பத்தில் எல்லாம் கிரேக்க, ரோமானியப் புராணக் கதைகள்தான் இந்த நடனத்தில் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய நடனங்களின் புகழ் ஐரோப்பா முழுவதும் பரவிக்கொண்டிருந்த நேரத்தில், இத்தாலி நாட்டு இளவரசி கேத்ரின், பிரான்ஸ் மன்னரை மணந்து, பிரான்ஸுக்கு வந்தாள். அவள் பாலே நடனத்தில் மிகத் திறமைசாலி. அவள் பிரான்ஸுக்கு வரும்போது தன்னோடு பாலே நடனத்தில் சிறந்த நடனக் கலைஞர்களையும் அழைத்து வந்தாள். அதன்பின்னர்தான் பிரான்ஸில் பாலே நடனம் பரவத் தொடங்கியது.

ராணி கேத்ரினே ஒரு பாலே நடன நிகழ்ச்சியை வடிவமைத்து, 1581-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி அரங்கேற்றினாள். ‘பாலே காமிக்கே டி லா ரைன்’ என்று பெயர் சூட்டப்பட்ட அதுதான் உலகின் முதல் பாலே நடன நிகழ்ச்சி என்கிறது வரலாறு. அதை இயக்கியவர் இத்தாலிய வம்சாவளியில் வந்த பியூஜாயல் என்பவர். அவர்தான் ‘பாலேயின் தந்தை’ என்று போற்றப்படுகிறார்.

இன்றும் பாலே நடனத்தின் துவக்கத்தில் நடனமாடுபவர்கள் உடலை வளைத்து, முன்னால் குனிந்து வணங்கி எழுவது, அந்நாளில் ராணி கேத்ரினின் கணவரான மன்னர் 14-ம் லூயியின் முன் நடனக் கலைஞர்கள் வணங்கியதன் தொடர்ச்சியான பழக்கம்தான்.

பரதம் ஆடுபவர்களின் பாதம் முழுக்கப் பூமியில் படியும். ஆனால், பாலே நடனமாடுபவர்களின் பாதங்களைக் கவனித்தால், கட்டைவிரல் மட்டுமே பூமியில் பதிவது தெரியும். இந்த விதமான வழக்கம் 18-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் வந்திருக்கிறது.

1661-ம் ஆண்டு, பாரிஸ் நகரில் லூயி மன்னரால் பாலே நடனப் பள்ளி ஒன்று துவக்கப்பட்டது. ‘ராயல் டான்ஸ் அகாடமி’ என்கிற அதுதான் முதலாவது பாலே நடனப் பள்ளி.

பாலே நடனம் பின்னர் திரைப்படங்களிலும் இடம்பெற்றது. 'The dumb girl of Portici' என்கிற ஹாலிவுட் படத்தில்தான் பிரபல பாலே நடனக் கலைஞர் அன்னா பாவ்லோவாவின் ‘ஸ்லீப்பிங் பியூட்டி’ போன்ற பல புகழ்பெற்ற பாலே நடனங்கள் இடம்பெற்றன. நம் நாட்டு உதயசங்கரும் அன்னா பாவ்லோவாவும் இணைந்து நமது பாரம்பரிய நடன அசைவுகளையும் பாலே அசைவுகளையும் கலந்து ‘ராதாகிருஷ்ணா’, ‘இந்தியத் திருமணங்கள்’ போன்ற நடன நாடகங்களை நடத்தியிருக்கிறார்கள்.

இசைக்கேற்ப தண்ணீருக்கடியில் நீந்தியபடி நடனமாடும் பாலே நடன வகை கூட உண்டு. ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆரும் லதாவும் ஆடும் ‘அவளொரு நவரச நாடகம்...’ பாடல் காட்சி ஞாபகம் இருக்கிறதா? அது கிட்டத்தட்ட தண்ணீர் பாலேவை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டதுதான்.

பாலேவின் சில அசைவுகள் பின்னர் சர்க்கஸ் விளையாட்டுகளிலும், ஒலிம்பிக்ஸ் ‘ஜிம்னாஸ்டிக்ஸ்’ ஆகியவற்றிலும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ‘டேனிஷ் ஜர்னல்’ என்கிற பத்திரிகைக் குறிப்பு தெரிவிக்கிறது.

ஆக, அங்கே இங்கே சுத்திக் கடைசியில் பாலேவும் ஒரு சர்க்கஸ்தான் என்று முடித்துவிட்டேனா?!

*****
எதிர்க்காற்று இருந்தால்தான் காற்றாடி உயரே எழும்பும்!

மைக்கேல் ஜாக்ஸன்

மைக்கேல் ஜாக்ஸன் இறந்துவிட்டார். ஐம்பது வயசு. பத்திரிகைகள் கதறித் தீர்த்துவிட்டன. உலகமெங்கிலும் உள்ள ஜாக்ஸனின் கோடிக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளைப் பரப்பிவிட்டதாம் இந்த மரணம். இசையே மரணித்துவிட்டது என்று கூட எழுதுகிறார்கள்.

மைக்கேல் சாதனையாளர்தான். இருக்கட்டும். ஆனால், அவரது மரணம் எப்படி இசையின் மரணமாகும் என்று எனக்குப் புரியவில்லை. அதிர்ச்சி அலைகள் எப்படிப் பரவும் என்றும் தோன்றவில்லை. அது ஓர் இசையரசனின் மரணம். அவ்வளவே!

சாதனையாளர்களும் மனிதர்கள்தான். சாகாவரம் பெற்றவர்கள் அல்ல. அதிலும் மைக்கேல், தானே சொந்தச் செலவில் சூனியம் வைத்துகொண்ட கதையாக, தன் உடம்பைப் படுத்திக்கொண்ட பாட்டுக்கு அந்த மரணம் எதிர்பாராத ஒன்றல்ல. மாதமொன்றுக்கு 25 லட்ச ரூபாய் மாத்திரைகளை முழுங்கிக்கொண்டு இருந்தவர் இத்தனை நாள் வாழ்ந்ததே அதிசயம்தான்!

மிகத் திறமைசாலி. ஆனால், முட்டாள்! தன்னம்பிக்கை அற்றவர். சொர்க்கம், நரகம் இதெல்லாம் உண்டென்று நம்பியவர். சிவப்புத் தோல்காரர்களுக்கும், அழகாக இருப்பவர்களுக்கும்தான் சொர்க்கத்தில் இடம் உண்டென்று நம்பி, கோடிக்கோடியாய்ப் பணம் செலவிட்டுத் தன் நிறத்தையும் முகத்தையும் மாற்றிக்கொண்டேஏஏஏஏஏஏ இருந்தவர். ‘நான் என் நிறத்தை மாற்றிக்கொள்ளவில்லை. அது லூகோடர்மா என்கிற தோலின் நிறமாற்றத்தால் ஏற்பட்ட சிவப்பு’ என்று அவரே ஒரு முறை தன்னிலை விளக்கம் கொடுத்தார். மூக்கை அத்தனை சிதைத்தவர் நிறத்தை மாற்றிக் கொள்ளவும் ஏன் செலவிட்டிருக்க மாட்டார்?

உலகமெங்கிலும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்றது ஒன்றும் சாமானிய விஷயமில்லை. எத்தனையோ விருதுகள், கின்னஸ் சாதனைகள்... எல்லாம் சரி! ஆனால், என்னை அவரது நடனம் அப்படியொன்றும் ஈர்க்கவில்லை. அவரின் நிறைய ஆல்பங்கள் பார்த்திருக்கிறேன். கழுத்தை வெட்டித் திருப்புவதும், ஸ்கேட்டிங் வழுக்கல் போல பின்னால் நகர்வதும்தான் நடனம் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. ‘கலக்கப்போவது யாரு?’வில் மதுரை மருது இதைவிட அற்புதமாக உடம்பை ஒடிக்கிறார்; வில்லாய் வளைக்கிறார். யாராவது பாராட்டுகிறோமா? இல்லை. ஒரு கூட்டமே சேர்ந்து பாராட்டினால் அதில் மயங்கி, அல்லது தான் தனித்து நின்றால் தன்னை ரசனையற்றவன் என்று சொல்லிவிடுவார்களோ என்று அஞ்சி, ‘ஆகா! அவரைப் போல உண்டா!’ என்று கோஷ்டி கானம் பாடத்தான் நாம் தயாராகிவிடுகிறோம்.

பரத நாட்டியத்துக்கு ஈடான நடன வகை உலகிலேயே இல்லை. அது ஆழமும், நுணுக்கமும் நிறைந்தது. அத்தனைச் சுலபமாக ஆடிவிட முடியாது. அதையடுத்து ஒடிஸி, கதக் எனப் பல இந்திய நடன வகைகள் அற்புதமானவை! அவற்றோடெல்லாம் ஒப்பிடும்போது மைக்கேலின் நடனமெல்லாம் ஒரு நடனமே இல்லை என்பேன். அது சரி, அவர் எங்கே நடனம் ஆடினார்? ஜிம்னாஸ்டிக்ஸ்தானே செய்தார்!

அதே போல்தான் அவரின் பாடல்களும்! நன்றாக இருக்கின்றன. அதற்காக, உலகத்திலேயே அவரைப் போலப் பாடக்கூடியவர்கள் யாருமே இல்லை; அவர் மறைந்ததால் இசை உலகமே அஸ்தமித்துவிட்டது என்பதெல்லாம் ரொம்ப ஓவர்! ஸ்வேதா ஷெட்டியின் குரலில் உள்ள கம்பீரம் கூட அவர் குரலில் இல்லை. பல வருடங்களுக்கு முன்னெல்லாம் அவரது பாடலை மட்டும் கேட்டுவிட்டு, ஒரு பெண்தான் பாடுகிறாள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன்.

நம்ம ஊர் ஜி.வி. மைக்கேலை வைத்து இந்தியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த நிகழ்ச்சியை மைக்கேல் ரத்து செய்துவிட்டார். இதனால் ஜி.வி-க்கு ஏகப்பட்ட கோடி ரூபாய் நஷ்டம். மைக்கேல் மீது வழக்குப் போடுவதாகக்கூடச் சொல்லிக்கொண்டு இருந்தார். கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோன ஜி.வியின் மரண சாஸனத்தில் மைக்கேலின் கையொப்பமும் இருந்திருக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது.

மைக்கேலின் மரணத்துக்காக அனுதாபப்படலாம்; ஒரு நிமிடம் மௌன அஞ்சலி கூடச் செலுத்தலாம். மற்றபடி, அவரது மரணத்தால் யாரும் அதிர்ச்சியெல்லாம் அடையவேண்டியது இல்லை. இலங்கையில் ஒரு பாவமும் அறியாத அப்பாவித் தமிழர்கள் லட்சக்கணக்கானோரை ரசாயன குண்டுகளைப் போட்டுக் கொன்றார்களே... அதற்கே அதிர்ச்சி அடையாதவர்கள் இயல்பானதொரு மரணத்துக்கு அதிர்வதாகச் சொல்வது அநியாயம்!

உலகில் எத்தனையோ மேதைகள், ஜாம்பவான்கள் பிறக்கிறார்கள்; மறைகிறார்கள். ஒவ்வொரு தடவையும் அதிர்ந்துகொண்டிருந்தால் இந்த உடம்பு என்னத்துக்காவது?

*****
உண்மை என்பது ஓங்கி ஒலிக்கும் கண்டா மணியைப் போன்றது. பல சமயம், மனச்சாட்சி என்கிற அதன் நாக்கு இழுத்துக் கட்டப்பட்டிருக்கிறது!