பேயைக் கண்டதுண்டா?

து ‘என் டயரி’ வலைப்பூவில் இடவேண்டிய பதிவே அல்ல. இருந்தாலும், இன்றைக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்ததாலும், வேறு யோசனை எதுவும் கிடைக்காததாலும் சும்மா ஜாலியாக இதை எழுதத் தொடங்கினேன்.

நீங்கள் பேயைப் பார்த்ததுண்டா? நான் பார்த்ததில்லை. ஆனால், பார்த்ததாகச் சாதித்தவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் என்னைத் திகிலூட்டுவதற்காகச் சொன்ன பேய்க் கதைகள் உண்மையில் எனக்கு காமெடிக் கதைகளாகத்தான் தோன்றியிருக்கின்றன.

ஆனால், ஒரு திகில் சம்பவம் எனக்கே நேர்ந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். அப்போது நாங்கள் சங்கீத மங்கலம் என்கிற கிராமத்தில் வசித்தோம். நாங்கள் அந்த ஊரில் பிரமாண்டமான ஒரு வீட்டுக்குக் குடிபோயிருந்த புதிது. சந்திரமுகி அரண்மனை போன்று அது ஒரு பாழடைந்த பங்களா! அதன் சிதிலமாகாத ஒரு பகுதியில் வீட்டு ஓனர் குடியிருந்தார்கள். இடிந்து விழாத இன்னொரு புறத்தில் இருந்த இரண்டு அறைகளில் நாங்கள் குடியிருந்தோம். சுண்ணாம்புக் காரையால் கட்டப்பட்ட மிகப் பழைமையான கட்டடம் அது. இளவரசிகள் எட்டிப் பார்க்கும்படியான மாடங்கள் எல்லாம் இருந்தன. மாடிக்கு ஏறினால், மேலே நாற்புறமும் உள்ள ஜன்னல்கள் வழியாக கீழே நடு ஹாலைப் பார்க்க முடியும். சுவர்களில் எல்லாம் மிக உயரே வண்ணச் சுதைகளைக் கொண்டு பழைய பாணி ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. கோபிகைகள் நிர்வாணமாகக் குளிப்பது, கிருஷ்ணன் அவர்கள் துணிகளையெல்லாம் சுருட்டிக் கொண்டு ஒரு மரத்தின்மீது ஏறி உட்கார்ந்து கொள்வது, துணிகளைக் கொடுத்துவிடும்படி கோபியர்கள் கெஞ்சுவது, ‘இரு கை கூப்பி வேண்டினால்தான் தருவேன்’ என்று கிருஷ்ணன் குறும்பு பண்ணுவது போன்ற ராசலீலா படங்கள்தான் எல்லாம்!

மின் வசதி கிடையாது. எனவே, காற்றுக்காக நானும் அப்பாவும் மாடியில் படுத்துக் கொள்வது வழக்கம். அன்றைக்கும் அப்படித்தான் படுத்துத் தூங்கினோம். நடு நிசி! திடீரென்று விழிப்பு வந்தது. யாரோ பிளிறினாற்போன்று கத்துகிற மாதிரி ஓர் அலறல்! போர்வைக்குள் இருந்தபடியே, அது நிஜமா, கனவா என்று அவதானிக்க முயன்றேன். புரியாத குழறலாக, யாரோ கழுத்தைப் பிடித்து நெரிப்பது போன்று கத்திக்கொண்டு இருந்தவர் என் அப்பாதான். நான் சற்றும் அசையாமல், போர்வைக் கிழிசல் வழியே பார்த்தேன். அப்பா எழுந்து நின்றபடி, தன் கழுத்தில் இரண்டு கைகளையும் வைத்துக் கொண்டு, கர்ண கடூரமாக அலறிக் கொண்டு இருந்தார். யாரோடோ போராடிக் கொண்டு இருக்கிற மாதிரி இருந்தது அவருடைய அசைவுகள். ஆனால், யாருமே இல்லை.

அப்பாவின் அலறல் அந்தத் தெரு முழுக்கக் கேட்டிருக்கும்போல. திபுதிபுவென்று எங்கள் வீட்டின் முன் இருபது முப்பது பேர் திரண்டு விட்டார்கள். படுப்பதற்காக மாடிக்கு வந்தபோது, மாடிக் கதவை வெளிப்புறம் நாங்கள் தாழிட்டுக் கொண்டதால், வந்த கூட்டம் மாடிப்படிகளில் நின்றபடி கதவைத் தட்டு தட்டென்று தட்டியது. எனக்கு எழுந்திருக்க பயம். அப்பாவோ அசரீரியுடன் போராடிக் கொண்டு இருக்கிறார்.

சற்று நேரத்தில், கூட்டம் கதவைத் தள்ளியதில் மர தாழ்ப்பாள் பெயர்ந்து விழுந்து, கதவு திறந்து கொண்டது. வந்தவர்களில் ஒரு பலசாலி, அப்பாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினார். அப்பா கீழே ஒரு நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார். கோயில் பூசாரி வந்து வேப்பிலை அடித்தார். விபூதியை அப்பா மீது இரைத்தார். கற்பூரம் ஏற்றிக் காட்டினார். தன் முன் கொழுந்துவிட்டு எரிந்த அந்தக் கற்பூரத்தை அப்படியே நெருப்போடு எடுத்து விழுங்கிவிட்டார் அப்பா. கோயில் பூசாரிக்கு வசவான வசவு! ‘நாயே! எங்கேடா வந்தே? போடா! போ! ஒரு அறை விட்டேன்னா ரத்தம் கக்கிச் செத்துப் போவே!’ என்றார். பூசாரி கொஞ்சமும் பயப்படாமல் அம்மன் பெயர்களை உச்சரித்துக் கொண்டே, வேப்பிலையால் அப்பாவை அடித்தார். ‘உன்ன மாதிரி எத்தனை பேரைப் பார்த்திருக்கேண்டி! ஓடிப் போயிருடி. உதை வாங்கிச் சாகாதே! போகலேன்னா உன்னைப் பிடிச்சு, புளிய மரத்துல ஆணி வெச்சு அடிச்சுடுவேன்!’ என்று அவரும் பதிலுக்கு என்னென்னவோ சொல்லி மிரட்டினார்.

ஒரு மணி நேரம் இந்தக் கூத்து நடந்தது. பின்பு அப்பா மயங்கினாற்போல் சரிந்து விழவும், அவரைத் தூக்கிக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு, “இனி பயமில்லம்மா! தூங்கி எந்திரிச்சார்னா சரியாயிடும்! மொட்டை மாடில படுத்திருந்தார் இல்லியா! இன்னிக்கு அமாவாசை வேற. ராத்திரி 12 மணிக்கு மோகினிப் பேய்ங்க வானத்துல வரிசையாப் போகும். மொட்டை மாடியில படுத்தா குப்புறப் படுக்கணும். சார் மல்லாந்து படுத்திருப்பாரு. அதான், ஏதோ ஒரு மோகினிப் பேய் சட்டுனு சார் உடம்புல இறங்கிடுச்சு. விரட்டிட்டேன். இனி அதன் தொல்லை இருக்காது. நிம்மதியா படுங்க!” என்று சொல்லிவிட்டுப் போனார் பூசாரி.

அதுவரை பேய் நம்பிக்கை இல்லாதிருந்த எனக்கு முதன்முறையாக, நிஜமாகவே பேய் என்ற ஒன்று இருக்குமோ என்று பயம் வந்துவிட்டது. போதாக்குறைக்கு அந்த வீட்டு அம்மாள் ஒரு திடுக் செய்தியைச் சொல்லி என்னை மேலும் பயமுறுத்தி விட்டார். சில வருடங்களுக்கு முன்பு அங்கே மொட்டை மாடியில் அவரின் உறவுக்காரப் பெண் ஒருத்தி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டாளாம். அவளின் ஆவியாகக்கூட இருக்கலாம் என்றார். அதன்பின் நான் மொட்டை மாடிக்குப் படுக்க வரமாட்டேன் என்று அப்பாவிடம் பிடிவாதம் பிடித்தேன்.

“சீ! பேயாவது, பிசாசாவது! எல்லாம் பிரமை. அன்னிக்கு எனக்கு ஏதோ நரம்புத் தளர்ச்சி. உடல் அசதி. தூக்கக் கலக்கம். ஏதோ கனவு கண்டு உளறியிருப்பேன். அதுக்காகப் பேய், அது இதுன்னு பயந்துடறதா? இன்னிக்கு என்கூட வந்து மொட்டை மாடியில படு. என்ன பேய் வருதுன்னு நானும் பார்க்கிறேன்” என்றார். கை கால்கள் நடுங்க மாடிக்குப் போனேன்.

நாங்கள் இருந்த வீட்டுக்குப் பின்னால் பெரிய ஏரி. மழைக்காலங்களில் மட்டும் அதில் நீர் இருக்கும். மற்ற நாட்களில் பாலைவனமாகக் காட்சியளிக்கும். ஏரிக்கரையின் அந்தப் பக்கத்தில் ஒரு சுடுகாடு. மாடியிலிருந்து பார்த்தால் கண்ணுக்குத் தெரியும். வீட்டுக்கார அம்மாள் பேய் நம்பிக்கை மிகுந்தவர். அவர் என் அப்பாவிடம், “மாடியில படுக்காதீங்கோ! பேய் உண்டு. கொள்ளி வாய்ப் பிசாசும் உண்டு. அங்கே சுடுகாடு இருக்கில்லையா, அங்கே கொள்ளி வாய்ப் பிசாசுகள் நடமாட்டம் தெரியும். அதுங்க வாயைத் திறந்தால் நெருப்பு வரும். நானே என் கண்ணால பல முறை பார்த்திருக்கேன். வம்பை விலை கொடுத்து வாங்காதீங்கோ. மாடியில படுக்க வேண்டாம்!” என்றார்.

அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டது. “பேசாம இருங்க மாமி! பேய் அது இதுன்னு குழந்தையை அனாவசியமா பயமுறுத்தாதீங்க. டேய், நீ வாடா! பேயும் கிடையாது, ஒரு புண்ணாக்கும் கிடையாது!” என்று என்னை வம்படியாக அழைத்துக் கொண்டு மாடிக்குப் படுக்கப் போய்விட்டார்.

அன்றைக்கு ராத்திரி எனக்குத் தூக்கமே வரவில்லை. அப்பா தூங்கியதும் நைஸாக எழுந்து கீழே போய்விடலாமென்று நினைத்தேன். அப்பா தூங்க வெகு நேரமாகியது. நான் கொட்டக் கொட்ட விழித்திருந்தேன். சற்று தூரத்திலிருந்த ஒரு வீட்டிலிருந்து மணி 12 அடிக்கும் சத்தம் கேட்டது. எழுந்து, அப்பா தூங்குகிறாரா என்று பார்த்தேன். அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார். கீழே போகலாம் என்று மெல்லக் கிளம்புவதற்கு முன் யதேச்சையாக என் பார்வை அந்தச் சுடுகாட்டுப் பக்கம் சென்றது.

அங்கே... நெருப்பு பளிச்சென்று எரிவது தெரிந்தது. பின்பு சட்டென்று அணைந்தது. பார்த்துக் கொண்டு இருக்கும்போதே மீண்டும் நெருப்பின் சுவாலை. அடுத்த நிமிடம் இருள் கவ்வியது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. கால்கள் நகர முடியாமல் தரையோடு தரையாக ஒட்டிக் கொண்டன. குடல் தொண்டைக் குழிக்கு வந்தது.

அப்பா விழித்துக் கொண்டார். என் கையைப் பற்றி, “என்னடா, இன்னுமா தூங்கலே?” என்றார். “பா... பா... அப்... அப்...” என்றேன். ஆமாம், எனக்குப் பேச்சே வரவில்லை. “என்னடா சொல்றே?” என்றார் அப்பா. “பா... அப்... அப்...” என்றபடி கையை நீட்டிக் காண்பித்தேன்.

அங்கே, கொள்ளி வாய்ப் பிசாசுகள் வாயைத் திறந்து திறந்து மூடிக்கொண்டு இருந்தன. நெருப்பின் சுவாலை விட்டு விட்டுத் தெரிந்தது.

அடுத்து, அப்பா செய்த காரியம் மகா பயங்கரமானது!

அது, என் அடுத்த பதிவில்!

*****
நீங்கள் தூங்கவில்லை. ஆனால், விழிப்புடன் இருக்கிறீர்களா?

7 comments:

A-kay said...

That was really an interesting post - can't wait for the next one. But is it a figment of your imagination or true story/ :-P

PS: I don't believe in ghosts either!

Raju said...

அப்படி என்னதான் செய்தார் உங்கள் அப்பா..? ஆவல்.

கிருபாநந்தினி said...

பேய் உண்டு என்கிறீர்களா, இல்லை என்கிறீர்களா? எதற்கு இந்த சஸ்பென்ஸ்? பத்திரிக்கையாளர் புத்தியைக் காட்டிவிட்டீர்கள். சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க.

Rekha raghavan said...

சுடுகாட்டில் ஏதாவது பிணம் எரிந்துகொண்டு இருக்கும் போல. காற்றில் குபீரென தீ பற்றிக்கொள்ள அது உங்கள் கண்களுக்கு யாரோ வாயிலிருந்து தீயை கக்குவது போல தெரிந்திருக்கும். கொல்லி வாயாவது ?பிசாசாவது ? எல்லாம் மனப் பிராந்தி. இருந்தாலும் ஒரு திகில் படத்தை பார்த்து போலிருந்தது தங்கள் பதிவை படித்த போது.

ரேகா ராகவன்.

கே. பி. ஜனா... said...

திக்.. திக்.. திக்... ஒண்ணுமில்லே, 'பே(ய்) வாட்ச்!' --கே.பி.ஜனா

Anonymous said...

"INNIKKI RATHTHIRI THOOKKAM POCHCHU"

thairiyasali

ungalrasigan.blogspot.com said...

ஏ-கே! உடான்ஸு இல்லை. இது அத்தனையும் நிஜம். பேய் மேல சத்தியம்!

ராஜு! என் அடுத்த பதிவைப் படிச்சுடுங்க, ப்ளீஸ்!

கிருபா! அடுத்த பதிவைப் போடுறதுக்குள்ள ஏன் இந்த அவசரம்? ‘பத்திரிக்கையாளர் புத்தி’ என்பது தவறு. பத்திரிகை என்றுதான் எழுத வேண்டும். ‘க்’ கிடையாது!

ரேகா! தாங்கள் சொன்னது போலத்தான் யூகித்தேன். ஆனால், நடந்தது வேறொன்று. என் அடுத்த பதிவைப் படியுங்களேன், ப்ளீஸ்!

கே.பி.ஜே.! ‘பே வாட்ச்’ குளிரச் செய்யும். ‘பேய் வாட்ச்’ உறையச் செய்யும்! அவ்வளவுதான் வித்தியாசம்!

தைரியசாலி சார்! நீங்களே தூக்கம் போச்சுன்னு ‘நேத்து ராத்திரி யம்மா...’ பாடினால், பயந்தாங்குளி நானென்ன பண்றது?

ஓ.கே! பின்னூட்டம் இட்டார் இடாதார் அனைவருக்கும் நன்றி!