நோபல் வெங்கியும் நோணாவட்டம் துக்ளக்கும்!

http://beta.thehindu.com/multimedia/dynamic/00007/AP_Venki2_7167f.jpg
மீபத்தில் நோபல் பரிசு பெற்ற ராமகிருஷ்ண வெங்கட்ராமனைப் பற்றி துக்ளக் 28-10-2009 தேதியிட்ட இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார் எஸ்.குருமூர்த்தி. வெங்கட்ராமனின் அருமை பெருமைகளை விளக்கி, பரிசு குறித்த அவரின் கருத்துக்கள் எப்படி பகவத் கீதை வரிகளோடு ஒத்துப் போகின்றன என்பதை விவரித்து, ‘நோபல் பரிசைவிட உயர்ந்தவர் அவர்’ என்று முடித்திருக்கிறார். எல்லாம் சரி!

ஆனால், அதில் வெங்கி (எஸ்.குருசாமி போலவே நானும் செல்லமாகக் குறிப்பிட்டுள்ளேன்.) சொன்னதாகக் குருசாமி சொல்லியிருக்கும் ஒரு கருத்திலும், கட்டம் கட்டி வெளியிட்டுள்ள ஒரு பெட்டிச் செய்தியிலும்தான் எனக்கு உடன்பாடு இல்லை.

பி.பி.சி நிறுவனம் வெங்கியைப் பேட்டி கண்டபோது, அவர் ‘நோபல் பரிசு தனக்குக் கிடைத்தது பெரிய கௌரவம்’ என்று பணிவாகக் கூறிவிட்டு, ‘ஆனால், பரிசுகளால் மட்டும் ஒரு படைப்பைக் காணக் கூடாது. அதாவது, பரிசு பெற்றுவிட்டால் மட்டுமே அது பெரியதாகி விடாது. பரிசு பெறாததால் அதன் மகிமை குறைந்து விடாது. பரிசுகளால் ஒரு படைப்பின் மதிப்பைக் காண்பது தவறு’ என்று சொன்னாராம். இதுவரைக்கும் சரி. அடுத்த வரிகளைப் பார்ப்போம்.

‘பத்திரிகைகளும் சரி, பொதுமக்களும் சரி, இந்தத் தவற்றையே செய்கிறார்கள். ஏன்... இரண்டு நாட்களுக்கு முன் கூட எந்தப் பத்திரிகையும் என்னுடைய ஆய்வைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லையே?’ என்று நிருபரையே கேட்டாராம் வெங்கி.

அப்படி அவர் கேட்டிருந்தால், அது ரொம்ப அசட்டுத்தனமான கேள்வியாகவே எனக்குப் படுகிறது. பலப்பல விஞ்ஞானிகள் ஏதேதோ ஆராய்ச்சிகள் செய்துகொண்டிருப்பார்கள். அது என்றைக்குப் பூர்த்தியாகும் என்று அவர்களுக்கே தெரியாது. அப்போது பேட்டி கண்டால், அவர்களுக்கும் தெளிவாகச் சொல்லத் தெரியாது; நேரமும் இருக்காது. இந்நிலையில் இப்படி ஓர் ஆராய்ச்சி நடக்கிறது என்று பொதுவாகத்தான் பத்திரிகைகளில் எழுத முடியும். அப்படிப் பத்திரிகைகள், ஆராய்ச்சியில் இருக்கும் எத்தனையோ விஷயங்களைப் பற்றிப் பலமுறை எழுதியுள்ளன. டி.என்.ஏ. ஏணி, குளோபல் வார்மிங், ஓஸோன் படலம், க்ளோனிங் என எதுவும் தெளிவில்லாத காலத்திலேயே பத்திரிகைகள் வெளியிட்ட விஞ்ஞான ஆராய்ச்சிக் கட்டுரைகள் எத்தனை எத்தனை?

திரைப்படம் எடுத்துக்கொண்டிருக்கும்போது அது பற்றிய ஒரு சின்ன அவுட்லைன்தான் தரமுடியும். கதையையும் விமர்சனங்களையும் படம் ரிலீசான பிறகுதான் கொடுக்க முடியும். நோபல் பரிசு பெறாத எத்தனையோ விஞ்ஞான ஆராய்ச்சிகள் பற்றியெல்லாம் பத்திரிகைகள் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன. நோபல் பரிசு கிடைத்ததும், பரவலான அளவில் மக்களின் பார்வை அங்கே விழுகிறது. அதைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் பத்திரிகைகள் முனைகின்றன. இதை ஏன் இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே கேட்கவில்லை என்றால், எங்கே போய் முட்டிக் கொள்வது?

அதே கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் பெட்டிச் செய்தி, ‘பிரிட்டனில் வாழும் தமிழரான வெங்கட்ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்தாலும் கிடைத்தது; எல்லோரும் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள். இந்தியருக்குக் கிடைத்த பரிசு, தமிழருக்குக் கிடைத்த பரிசு என்று ஆள் ஆளுக்குத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள்’ என்று தொடங்குகிறது. பின்னே என்னதான் செய்ய வேண்டும் என்கிறார் கட்டுரையாளர் என்று புரியவில்லை. கண்டுகொள்ளாமல் விடவேண்டும் என்கிறாரா? அப்படி விட்டிருந்தால், அதே கட்டுரையை ‘பிரிட்டனில் வாழும் தமிழரான வெங்கட்ராமனுக்கு நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஆனால், அந்தச் செய்தி இங்கேயுள்ள ஊடகங்களுக்குப் பெருமையாக இல்லை போலிருக்கிறது. இவர்களுக்கு வேண்டியதெல்லாம் கவர்ச்சியான பின்-அப் படங்களும், எந்த நடிகை எந்த நடிகரின் வாழ்வில் குறுக்கிடுகிறார் போன்ற செய்திகளும்தான்’
என்று தொடங்கியிருப்பார்.

‘தினசரி வந்து குவிகிற இ-மெயில்களைச் சுத்தம் செய்வதற்கே ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் ஆகிறது. என் மீது இரக்கம் இல்லையா? நேற்று வரை இவர்களை யாரென்றே தெரியாதே’ என்று எரிச்சல்பட்டிருக்கிறார் வெங்கட்ராமன் என்று அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கட்டுரையின் இறுதியில் வெங்கிக்கு ஒரு வேண்டுகோளும் வைக்கிறார் கட்டுரையாளர். அவர் தமிழகம் பக்கமே தலை வைத்துப் படுத்துவிடக் கூடாதாம். இங்கே அவர் வருகிறார் என்கிற விஷயம் வெளியே தெரிந்தால், விருதுகள் வழங்கவும், பொன்னாடைகள் போர்த்தவும் ஒரு பெரும் கும்பல் நாக்கைத் தொங்கப் போட்டுக்கொண்டு காத்துக் கிடக்கிறதாம். ‘ஜாக்கிரதை வெங்கட்ராமன்’ என்று எச்சரிக்கை வேறு விடுக்கிறார்.

அரசியல்வாதிகள் தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா எடுத்துக் கொள்வதைப் பார்த்துப் பார்த்துச் சலித்து வெறுத்து, மனம் மயங்கி, குழம்பிப் போய், எல்லாப் பாராட்டு விழாக்களையுமே அந்த லிஸ்ட்டில் சேர்த்து, பாவம், வெங்கட்ராமனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பாராட்டுக்களையும் தடுக்க நினைக்கிறாரே என்றுதான் தோன்றுகிறது எனக்கு. சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருது வாங்கினபோது நாம் கொண்டாடாத கொண்டாட்டமா? நடத்தாத பாராட்டு விழாக்களா? அப்போதெல்லாம் என்ன செய்துகொண்டிருந்தார் இவர் என்று தெரியவில்லை.

ஒருவரின் சாதனையைப் பாராட்டுவதற்கு அவரை முன்னே பின்னே தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அவருக்குக் கிடைத்த புகழைத் தனக்குக் கிடைத்ததாய் எண்ணி மகிழ்கிற, பெருமிதம் கொள்கிற மனசு இருந்தால் போதும். ‘தினசரி வந்து குவிகிற பாராட்டு இ-மெயில்களைச் சுத்தம் செய்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகிறது. என் மேல் இரக்கமே இல்லையா?’ என்று உண்மையில் வெங்கி வருத்தப்பட்டிருப்பாரேயானால், அதற்காக நான் வருத்தப்படுகிறேன். ஒரு விஞ்ஞானிக்குப் பொறுமை வேண்டும்; அலசி ஆராயும் திறன் வேண்டும்; எந்த விளைவையும் சகித்துக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும். இ-மெயில்களைச் சுத்தம் செய்வதைக்கூடச் சலித்துக்கொள்கிற பேர்வழியால் எப்படி உண்மையான விஞ்ஞானியாகத் திகழ முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. எனவே, வெங்கி கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது போல் அந்த அர்த்தத்தில் சொல்லியிருக்க மாட்டார் என்றே நினைக்கிறேன்.

இது இருக்கட்டும்... ‘சில நாட்களுக்கு முன்னால் வெங்கட்ராமன் என்று சொன்னால், அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போயிருப்பார்கள். நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதுமே நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரே க்ஷணத்தில் புகழின் உச்சாணிக் கொம்புக்குப் போய்விட்டார்’ என்று கேலியாக எழுதுகிற துக்ளக் பத்திரிகையும் இப்போதுதானே குருசாமியை விட்டு வெங்கட்ராமனின் அருமை பெருமைகளைக் கட்டுரையாக எழுதச் சொல்லி வெளியிட்டிருக்கிறது.

ஊருக்குத்தான் உபதேசம்!

*****
நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று யாரும் கவனிக்கப் போவது இல்லை - எதையாவது நீங்கள் செய்து முடிக்காதவரை!

6 comments:

பொன்னியின் செல்வன் said...

/ நீங்கள் என்ன செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று யாரும் கவனிக்கப் போவது இல்லை - எதையாவது நீங்கள் செய்து முடிக்காதவரை! /

அருமை சார் !

பொன்னியின் செல்வன் said...

/ நோணாவட்டம் / அப்டின்னா என்ன சார் .. புதுசா இருக்கு ... மெயிலில் சொன்னா கூட போதும் சார்....

butterfly Surya said...

சரிதான்.

ungalrasigan.blogspot.com said...

பொன்னியின் செல்வனுக்கு நன்றி! நோணாவட்டம் என்பது குற்றங்களைத் தோண்டித் துருவி வேண்டுமென்றே மிகைப்படுத்திச் சொல்வது!

பட்டர்ஃப்ளை சூர்யா சரிதான்னு சொன்னா சரிதான்!

பிரபாகர் said...

நீங்கள் சொல்வதில் அப்படியே உடன்படுகிறேன். பத்திரிகைகள், சுய லாபத்துக்காக இது போன்ற நோணாவட்டங்களை நிறைய பயன்படுத்துகின்றன.

நல்லதோர் இடுகை.

பிரபாகர்.

ungalrasigan.blogspot.com said...

பிரபாகர், மற்ற பத்திரிகைகள் இருக்கட்டும்; துக்ளக் அந்தக் காரியத்தைச் செய்யலாமா என்பதே என் கோபம்!

செல்வேந்திரன், _/\_