அதிகம் நிலவு; கொஞ்சம் நெருப்பு!

ந்தோஷமான செய்தி ஒன்று; கொஞ்சம் வருத்தமான செய்தி ஒன்று!

முதலில் சந்தோஷமான செய்தியைச் சொல்லிவிடுகிறேன். ராஷ்மி பன்சால் ஆங்கிலத்தில் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ புத்தகம் என்னுடைய மொழிபெயர்ப்பில் விகடன் பிரசுரத்தின் மூலம் தமிழில் வெளியாகிவிட்டது. (அது பற்றிப் பதிவிட நான்தான் தாமதமாக்கிவிட்டேன்.) வழக்கமான மெல்லிய புத்தகமாக இல்லாமல், ஒரு கனமான நூலாக, அட்டகாசமாக வெளியாகியிருக்கிறது. உயர்தர தாளில், மிக அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. மூல புத்தகம் முந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள் என்றால், தமிழ்ப் பதிப்பு ஐந்நூற்றுச் சொச்சம் பக்கங்கள். கையில் வைத்திருக்கவே ஒரு கௌரவமாக இருக்கிறது.

மூலப் புத்தகத்தை வெளியிட்டவர்கள், தமிழில் இதை வெளியிட சில நிபந்தனைகளை விதித்திருந்தார்கள். அவை:

1. மூலப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரைகளைச் சரியான தமிழில் மொழிபெயர்க்க வேண்டும். மொழிபெயர்க்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் நாங்கள் ஒரு தமிழ் வல்லுநரை வைத்துப் படித்துப் பார்த்துச் சரியாக இருந்தால்தான் புத்தகம் வெளியிட அனுமதிக்கப்படும்.

2. நாங்கள் மூலப் புத்தகத்தை எவ்வாறு அட்டை மற்றும் உள் பக்கங்களை வடிவமைத்திருக்கிறோமோ அதே போன்ற வடிவமைப்பைத்தான் தமிழிலும் பின்பற்ற வேண்டும். புத்தகத்தின் நீள, அகலம், அட்டையில் அரக்கு நிற எழுத்துக்கள் என எதையும் ஒரு இம்மியளவும் மாற்றக் கூடாது.

3. நாங்கள் உபயோகித்திருக்கும் அதே தரத்தினாலான பேப்பரைத்தான் பயன்படுத்த வேண்டும்.

4. விலை எக்காரணம் கொண்டும் ரூ.150/-ஐத் தாண்டக்கூடாது. அதற்காகக் கட்டுரையில் எடிட் செய்து குறைத்து, பக்கங்களைக் குறைக்க அனுமதியில்லை.

மூலப் பிரசுரகர்த்தர்கள் இந்தப் புத்தகத்தை இந்திய மொழிகள் எல்லாவற்றிலும் கொண்டு வருகிறார்கள். எனவே, எல்லாமே ஒன்று போல் யூனிஃபார்மாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். எனவேதான் இத்தகைய நிபந்தனைகள்.

விகடன் பிரசுரம் சளைத்ததா என்ன! நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு களத்தில் இறங்கியது.

முதல் ஐம்பது பக்கங்களுக்கான மொழிபெயர்ப்பைப் பார்த்தவர்கள், “மிகச் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இனி மேற்கொண்டு எதுவும் நாங்கள் பார்க்கத் தேவையில்லை. கோ அஹெட்!” என்று பச்சைக் கொடி காட்டிவிட்டார்கள்.

கடைசி நிபந்தனை மட்டும் கொஞ்சம் இடித்தது. பொதுவாகவே ஆங்கிலப் பதிப்பு அதிக அளவில் விற்பனையாகும். இதர மொழிகளில் அந்த அளவு விற்பனையை எட்டுவது கஷ்டம். எனவே, மூலப் பதிப்பைக் கணக்கிடுகிற அதே அளவுகோலின்படி விலை வைத்தால் நிச்சயம் கட்டுப்படியாகாது. எனவே, அவர்களிடம் பேசிப் புரிய வைத்து, விலை ரூ.175/- என நிர்ணயித்துக் கொள்ள ஒப்புதல் வாங்கிவிட்டது விகடன் பிரசுரம். இது கூட அதிக லாபம் இல்லாத ஒரு விலைதான்!

மிகச் சிறந்த உள்ளடக்கம்; மிகத் தரமான தாள்; மிக அருமையான அச்சு. மூன்றையும் கூட்டிப் பார்த்தால் இந்த விலை மிகக் குறைவானது என்று புரியும்.

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனே! அது வேறொன்றுமில்லை. இந்தப் புத்தகத்தின் தமிழ்ப் பதிப்புக்கான தலைப்புதான்.

ஆங்கிலத்தில் ராஷ்மி பன்சால் மிக ஸ்டைலாக ‘STAY HUNGRY, STAY FOOLISH’ என்று தலைப்பு வைத்திருந்தார். ‘பசியோடு இரு, முட்டாளாக இரு’ என்பது நேரடி அர்த்தம். அதாவது, காலிப் பாத்திரமாக நம் மனத்தை வைத்திருந்தால்தான், வெளியிலிருந்து பல நல்ல விஷயங்களை உள்ளே இறக்கிக் கொள்ள முடியும்; அதே போல் நம்மை முட்டாளாக நினைத்துக் கொண்டால்தான், பல விஷயங்களைக் கேட்டும் கற்றும் உள்வாங்கிக் கொள்ள முடியும். கவித்துவமான தலைப்பு இது.

புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தபோது, இந்தத் தலைப்பைத் தமிழ்ப்படுத்த எனக்குச் சிரமமாகவே இல்லை. காரணம், இதைத்தான் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே திருவருட்பிரகாச வள்ளலார் அழகாக, ‘பசித்திரு, தனித்திரு, விழித்திரு’ என்று உபதேசித்துவிட்டுப் போனார். பசியோடு இருப்பவனுக்குத்தான் சாப்பாடு இறங்கும்; செரிமானமாகும். தனித்திருப்பது என்பது வேறில்லை. மற்றவர்களைப் போலவே சிந்திக்காமல், இயங்காமல், தனக்கென ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்துவது; விழித்திரு என்றால், எப்போதும் விழிப்புடன் இருத்தல். நம்மைச் சுற்றிலும் என்ன நிகழ்ந்துகொண்டு இருக்கிறது என்கிற விழிப்பு உணர்வு இருந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும். எனவே, ஆங்கிலத் தலைப்புக்கு மிகப் பொருத்தமாக ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ என்று வைத்தேன். ஆங்கில பதிப்பில் உள்ளது போலவே நான்கு வரிகளாக மடக்கிப் போட்டு லே-அவுட் செய்யவும் வசதியான தலைப்பு இது.

ஆனால், இந்தத் தலைப்பில் உள்ள பொருத்தமும், நயமும், அழகும் மூலப் பதிப்பாளர்கள் நாடிய தமிழ் வல்லுநர்களுக்குப் புரியவில்லை போலும்... ‘முயற்சி திருவினையாக்கும்’ என்று நேரடியான தலைப்பைத் தந்து, அதைத்தான் வைக்க வேண்டும் என்பதை ஐந்தாவது நிபந்தனையாக்கிவிட்டார்கள். அவர்களிடம் பேசிப் புரிய வைக்க நேரமோ பொறுமையோ இல்லாததால், மேற்படி தலைப்பிலேயே வெளியாகியிருக்கிறது இந்தப் புத்தகம். என்னைப் பொறுத்த வரையில் இது எனக்கு ஒரு குறைதான்.

மயிலுக்குக் காக்கா என்று பெயர் வைத்தாலும், மயில் மயில்தானே? அது போல, தலைப்பு மாறினாலும், இந்தப் புத்தகம் நிச்சயம் எனக்குப் பெருமைக்குரிய ஒன்றுதான்!

ன்னொரு சந்தோஷமான செய்தியும், கொஞ்சம் வருத்தமான செய்தியும்கூட இருக்கிறது.

அடுத்ததாக நான் இப்போது மொழிபெயர்த்துக்கொண்டு இருப்பது டாக்டர் ஆர்.கே.ஆனந்த்தின் ‘GUIDE TO CHILD CARE’ என்ற புத்தகம். குழந்தை வளர்ப்பு பற்றிய அருமையான, விளக்கமான புத்தகம்.

மருத்துவப் புத்தகம் என்பதால் மொழிபெயர்ப்பில் ஒரு சிறு தவறும் நேர்ந்துவிடக் கூடாது என்பது என் கவலை. “கவலையே படவேண்டாம். டாக்டர் ஆனந்தின் நெருங்கிய நண்பர் இங்கே சென்னையில் டாக்டர் பார்த்தசாரதி இருக்கிறார். அவரும் சிறந்த குழந்தை மருத்துவர். உங்கள் மொழிபெயர்ப்பை அவரிடம் காண்பித்து, தவறுகள் இருந்தால் திருத்தித் தரும்படி கேட்போம்” என்றார் விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி அவர்கள்.

(இங்கே ஒரு முக்கியக் குறிப்பு: நான் SSLC வரை மட்டுமே படித்தவன். அந்தக் காலத்து SSLC என்று வேண்டுமானால் பெருமைக்காகச் சொல்லிக் கொள்ளலாம். ஆங்கிலப் புலமை இல்லாதவன்.)

அதன்படி, முதல் ஐம்பது பக்கங்களை மொழிபெயர்த்ததும், அதை டாக்டர் பார்த்தசாரதிக்கு அனுப்பி வைத்தோம். அடுத்த நாளே அது திரும்பி வந்தது, டாக்டரின் குறிப்புகளோடு.

‘Hats off for the excellent translation’ என்று முதல் வரியாகக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர். தொடர்ந்து, அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததன் சாராம்சம்:

‘மிகச் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறீர்கள். வார்த்தைகள் மிகக் கச்சிதமாக, அதே சமயம் எளிமையாகக் கையாளப்பட்டுள்ளன. இதைப் படிக்கும்போது ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்தது போலவே தோன்றவில்லை. நேரடியாக மருத்துவர் தமிழிலேயே எழுதியிருக்கிறாரோ என்றே எண்ணத் தோன்றுகிறது. அத்தனைக் கச்சிதம்!’

டாக்டர் அந்த மொழிபெயர்ப்பில் போட்டிருந்த திருத்தங்களைப் பார்த்தேன். அத்தனையும் மருத்துவப் பெயர்கள். நான் எனக்குத் தெரிந்த தமிழில் அந்த வார்த்தைகளை மொழிபெயர்த்திருக்க, அவற்றுக்குச் சரியான பதங்களைக் குறிப்பிட்டிருந்தார் டாக்டர்.

டாக்டர் பார்த்தசாரதியின் பாராட்டு எனக்கு மிகுந்த உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்துள்ளது. டாக்டருக்கு நன்றி!

சரி, கொஞ்சம் வருத்தமான செய்தி என்று சொன்னேனல்லவா? ‘ஸ்டே ஹங்ரி...’யை மொழிபெயர்க்கும்போது, ஆங்கில மூலத்தை PDF ஃபைலாக நெட்டிலிருந்து டவுன்லோட் செய்து வைத்துக் கொண்டேன். அதை மொழிபெயர்க்கும்போது மானிட்டரின் மேல் பாதியில் அதை வைத்துக் கொண்டு, கீழ்ப்பாதியில் வேர்ட் பேடைத் திறந்து, அப்படியே பார்த்துப் பார்த்துத் தட்டச்சு செய்துகொண்டே போவேன். எனக்கு வேலை சுலபமாக இருந்தது. தலையை அங்கே இங்கே திருப்ப வேண்டிய அவசியமில்லை. கடகடவென்று ஒரு நாளைக்குப் பத்துப் பதினைந்து பக்கங்கள் வரை மொழிபெயர்த்தேன்.

இந்தப் புத்தகம் இன்னும் PDF-ஆக வரவில்லை. எனவே, பக்கத்தில் புத்தகத்தை நிறுத்திக் கொண்டு, புத்தகத்தையும் மானிட்டரையும் மாறி மாறிப் பார்த்து அடிக்க வேண்டியுள்ளது. இதனால் கழுத்து வலி ஏற்படுவதோடு, மொழிபெயர்ப்பு வேலை மிக மிக மந்தமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

பார்க்கலாம், டாக்டரின் உற்சாக வார்த்தைகள் கழுத்து வலியையும் மீறி என்னை இயக்குகிறதா என்று!

***
சிறப்பாகச் செய்வது சிறப்பாகச் சொல்வதைவிடச் சிறப்பானது!

12 comments:

பொன்னியின் செல்வன் said...

சார், புத்தக மொழிபெயர்ப்புக்கு வாழ்த்துக்கள். நீங்கள் மொழி பெயர்த்த தலைப்பு ‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ நன்றாக இருக்கிறது.

விரைவில், வாசகர்கள் வாங்கி படித்து பயனடைவார்கள் என்று நம்பலாம்.

butterfly Surya said...

வாழ்த்துகள் சார்.

இந்த வருட புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்து விட்டேன்.

கிருபாநந்தினி said...

முயற்சி திருவினையாக்கும்! நான் உங்கள் மொழிபெயர்ப்பு முயற்சியைச் சொன்னேன். உங்களின் அடுத்த புத்தகத்தை மிக ஆவலோடு எதிர்பார்க்கிறேன் - ஒரு வயதுகூடப் பூர்த்தியாகாத ஓர் அழகான பெண் குழந்தைக்குத் தாய் என்கிற முறையில்!

ungalrasigan.blogspot.com said...

வாழ்த்துகள் ரவிபிரகாஷ்!
மொழிபெயர்ப்பு வாசனையே தெரியாமல் மொழிபெயர்ப்பது பெரிய காரியம்தான்.
[சத்யராஜ்குமார்]

ரிஷபன் said...

மொழிபெயர்ப்பிலும் உங்கள் பங்களிப்பு அறிய சந்தோஷமாய் இருக்கிறது..

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துக்கள் ரவி சார்! ஆங்கிலத்தில் அந்த புத்தகத்தை படித்திருந்தாலும் தாய்த்தமிழில் படிப்பதற்கு ஒரு அருமையான வாய்ப்பினை அளித்துள்ளீர்கள். ஆன்லைன்-இல் உடனே வாங்கிவிட வேண்டியது தான்!

அடுத்த மொழிபெயர்ப்பு வெற்றி பெற இப்பொழுதே வாழ்த்துகளுடன்,

வெங்கட் நாகராஜ்
புது தில்லி

கே. பி. ஜனா... said...

தங்கள் சிரத்தையையும் அக்கறையையும் இந்தப் பதிவு அழகாக மொழி பெயர்த்துள்ளது. சிறந்த ஒர் புத்தகத்தின் உருவாக்கத்தின் பின்னணியில் இத்தனை சுவாரசியமான விஷயங்களா? ...

Anonymous said...

வாழ்த்துகள் சார் :)

எனக்கும் இந்த டைட்டில் கொஞ்சம்கூடப் பிடிக்கலை, ரவிபிரகாஷ் முன்பு சொன்ன நல்ல டைட்டிலை ஏன் மாத்தினாங்க என்று ட்விட்டரில் புலம்பியிருந்தேன், இப்போதுதான் காரணம் புரிகிறது :(

ஆனால் ஒன்று, ஏற்கெனவே இதை ஆங்கிலத்தில் படித்துவிட்டதால் தமிழில் வாங்குவேனா தெரியவில்லை :)

- என். சொக்கன்,
பெங்களூரு.

Rajaraman said...

Hatts off for your great noble efforts sir

Paleo God said...

ரொம்ப மகிழ்ச்சி... புத்தக பட்டியலில் இதுவும் உண்டு. தொடரட்டும் உங்கள் பணி.

ungalrasigan.blogspot.com said...

திரு.பொன்னியின் செல்வன், \\‘என்றும் பசித்திரு, என்றும் விழித்திரு’ நன்றாக இருக்கிறது.// நன்றாக இருந்தது என்று இருக்க வேண்டும். தலைப்பைத்தான் மாற்றிவிட்டார்களே! :(

திரு.சூர்யா, நன்றி!

திருமதி கிருபாநந்தினி! அடுத்த புத்தகம் நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்தான். நன்றி!

திரு.சத்யராஜ்குமார், இ-மெயிலில் தாங்கள் அனுப்பிய கடிதத்தை இங்கே சேர்த்துள்ளேன். ஏன், கமெண்ட் பாக்ஸில் பின்னூட்டம் இடுவதில் ஏதாவது பிரச்னையாகிவிட்டதா? மற்றபடி, பாராட்டுக்கு நன்றி!

திரு.ரிஷபன், மிக்க நன்றி!

திரு.வெங்கட் நாகராஜ்! ஆர்வத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி!

திரு.கே.பி.ஜனார்த்தனன், பாராட்டுக்களுக்கு நன்றி!

திரு.சொக்கன், பாராட்டுக்களுக்கு நன்றி!

Thank you Mr.Rajaraman!

பலா பட்டறை! நன்றி!

padmanabhan said...

congrats sir for your book.regarding title, i agree with others.I think Mr.A.V.M.Saravanan also wrote a book in the same title few years back.