ஹைய்யா... பேர் வெச்சாச்சு!

‘ஒரு பேர் வைங்களேன், ப்ளீஸ்!’ என்கிற என்னுடைய பதிவைப் படித்துவிட்டு, தங்களுக்குத் தோன்றிய தலைப்புகளை உடனடியாக பின்னூட்டத்தில் பதிந்த என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த நன்றிகளை முதலில் சொல்லிக் கொள்கிறேன்.

இந்த மன நெகிழ்ச்சியினூடே எனக்குத் தோன்றிய ஒரு வாக்கியத்தை இந்தப் பதிவின் இறுதியில் எழுதுகிறேன்.

‘பெயர் வைத்தல்’ என்பது அத்தனை முக்கியமானது. புதிதாகப் பிறந்த ஒரு குழந்தைக்குப் பெயர் வைக்கும்போது எத்தனை சிரத்தை எடுத்துக் கொள்கிறோம்! ஆங்கில எழுத்தான ‘A’-யில் தொடங்குகிற மாதிரி பெயர் வைப்பார்கள் சிலர். அப்போதுதான், பட்டியலில் மட்டுமல்ல... வாழ்க்கையிலும் முன்னணியில் வர முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை!

நட்சத்திரம், ராசியெல்லாம் பார்த்து அதற்குப் பொருத்தமாக எந்த எழுத்தில் பெயர் வைத்தால் குழந்தை பிற்காலத்தில் ஆஹா, ஓஹோவென இருக்கும் என்று ஜோசியர்களைக் கேட்டுக் கொண்டு, அதன்படி பெயர் வைப்பவர்கள் பலருண்டு. நியூமராலஜி பார்த்து அதற்கேற்ப, பெயரில் இயல்பாக இருக்க வேண்டிய (ஆங்கில) எழுத்துக்களுக்கு மாறாக வேறு எழுத்துக்களைச் சேர்த்தோ, கூடுதல் எழுத்துக்களைப் போட்டோ அல்லது சிதைத்தோ பெயர் வைப்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

என் பெயர் RAVIPRAKASH என்பதில் உள்ள K-வுக்குப் பதிலாக C போட்டு எழுதினால், எனக்குப் பணம் கொட்டோ கொட்டென்று கொட்டும் என்று நட்பு ரீதியில் ஆலோசனை தந்தார் எனக்குத் தெரிந்த பிரபல நியூமராலஜிஸ்ட் ஒருவர். என் பெயரைச் சிதைத்துத் தள்ளிவிட்டு வருகிற பணம் எனக்குத் தேவையே இல்லை என்று அவரிடம் சிரித்துக்கொண்டே சொன்னேன். கடைசிவரை நான் என் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அவர் சொன்னதுபோல் என் பெயரை மாற்றிக்கொண்டு இருந்தால், ஒருவேளை நான் கோடீசுவரனாக ஆகியிருப்பேனோ என்று இப்போது வலிந்து யோசித்தாலும், அது எனக்குச் சிரிப்பாகத்தான் இருக்கிறதே தவிர, கவலையாக இல்லை.

அதே நியூமராலஜிஸ்ட் அப்போது என் தம்பி ராஜ்திலக்குக்கும் ஒரு யோசனை சொன்னார். அவன் பெயர் RAJATHILAK என்பதை RAJTHILUCK என மாற்றி எழுதிக் கொண்டால், அவன் மிகுந்த அதிர்ஷ்டக்காரனாக விளங்குவான்; அவன் தொட்டதெல்லாம் பொன்னாகும் என்றார். அது ஆயிற்று பல வருஷங்கள்! அவனுக்கு அப்படியொன்றும் எந்த அதிர்ஷ்டமும் அடிக்கவில்லை. மாறாக, அதிர்ஷ்டக்கட்டையாகத்தான் ஆனான். அவன் சுமார் ரூ.20,000 வரை பணம் கட்டிச் சேர்ந்த கம்ப்யூட்டர் படிப்பு, அந்தக் கல்வி நிறுவனமே காணாமல் போனதால், முழுமை பெறவில்லை. கட்டிய பணமும் கோவிந்தா! அவன் சொந்தமாகத் தொடங்கிய இரண்டு தொழில்கள் நஷ்டத்தில் முடிந்து, ஏகப்பட்ட பண இழப்பு! இத்தனைக்கும் அவன் என்னைவிடத் திறமைசாலி; எதையும் சட்டென்று பற்றிக் கொள்ளும் கற்பூர புத்தி. கம்ப்யூட்டர் ஹார்டுவேர் துறையில் கில்லாடி!

சரி, பெயர் வைக்கும் விஷயத்துக்கு வருகிறேன். சிலர் புதுமையாக இருக்க வேண்டும் என்று தங்கள் குழந்தைக்குக் காமா சோமா என்று பெயர் வைத்துவிடுவது உண்டு. கிராமங்களில் எம்.ஜி.ஆர்., டாக்டர், வாத்தியார் என்றெல்லாம் பெயர்கள் இருந்ததை, நான் என் அப்பாவுக்கு உதவியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குச் சென்றபோது பார்த்து வியந்திருக்கிறேன். சிதம்பரம், பழனி என்று ஊர் பெயர்களை வைப்பவர்களும் உண்டு. பெரியார் ஒரு முறை இதைக் கேலி செய்து, ஒரு பெண்ணுக்கு ‘ரஷ்யா’ என்று பெயர் வைத்தார். அறிவியல் மேதை தாமஸ் ஆல்வா எடிசன் தன் வாரிசுகளுக்கு DOT, DASH என்று செல்லப் பெயர்கள் வைத்திருந்தார்.

ஓர் அம்மாள் தனக்குப் பிறந்த மூன்று ஆண் குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர்களை யோசித்து வைத்தார். சோழன்புத்திசாலி, சேரன்பலசாலி, பாண்டியன்அறிவாளி என்பவையே அந்தப் பெயர்கள். மூவரில், பாண்டியன்அறிவாளி என்பவர் தன் சொந்தப் பெயரில் சில திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

கிராமங்களில் தன் குழந்தைக்கு திருஷ்டி படக் கூடாது என்பதற்காக ‘மண்ணாங்கட்டி’ என்றெல்லாம் பெயர் வைப்பதுண்டு. வரிசையாகப் பெண்ணாகவே பெற்றுக்கொண்டவர்கள், இனிமேல் பெண் குழந்தையே வேண்டாம் என்பதற்காக ‘போதும்பொண்ணு’ என்றும் பெயர் வைப்பார்கள். ‘பசங்க’ படத்தில் இது ஒரு காட்சியில் இடம்பெற்றிருக்கும். மேலும் அருக்காணி, பொக்கலை, பொச்சிலை போன்ற பெயர்களையெல்லாம் பார்த்து வியந்திருக்கிறேன். படிப்பறிவற்ற பாமர மக்கள் மத்தியில் அழகுராணி என்பது அருக்காணியாகவும், பொற்கலை என்பது பொக்கலையாகவும், பொற்சிலை என்பது பொச்சிலையாகவும் திரிந்துவிட்டிருக்கிறது. இப்படிப் பல பெயர்கள்.

ஆக, பெயர் வைத்தல் என்பது எத்தனை முக்கியமானது என்பதற்காக எழுதத் தொடங்கி, அது எங்கெங்கேயோ திசை மாறிப் போய்விட்டது.

பழமொழியும் அல்லாத, பொன்மொழியும் அல்லாத ஒரு வரிச் செய்திகளை ஆங்கிலத்தில் ‘ஒன்லைனர்’ என்பார்கள். தமிழிலும் அப்படி முயற்சி செய்து பார்ப்போமே என்று எழுதியதுதான் ஆரம்பத்தில் ஆனந்த விகடனில் ‘டிக்... டிக்... டிக்...’ என்னும் தலைப்பில் தொடர்ந்து ஒரு வருட காலம் வெளியானது. அதை என் பெயரில் பிரசுரிக்க எனக்கு விருப்பமில்லை. ‘நீங்களே ஏதாவது ஒரு புனைபெயர் வைத்துக் கொள்ளுங்கள்’ என்று விகடன் இணை ஆசிரியர் திரு.கண்ணனிடம் சொன்னேன். அவரும் யோசித்து, ‘மிஸஸ். டக்ளஸ்’ என்ற புனைபெயரில் பிரசுரித்தார் (அப்போது வெளியாகியிருந்த ‘பருத்தி வீரன்’ படத்தில் கஞ்சா கருப்பின் பெயர் டக்ளஸ்).

ஆனந்த விகடனில் இந்தப் பகுதிக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, பின்னர் ‘அவள் விகடன்’ பத்திரிகையிலும் இந்தப் பொன்மொழிகளை எழுதினேன். ஓர் இதழுக்கு பத்து பொன்மொழிகள் இடம்பெற்றதால், அந்தப் பகுதிக்கு ‘பத்துவம்’ என்று தலைப்பு வைத்துவிட்டார் ‘அவள் விகட’னின் அன்றைய பொறுப்பாசிரியர் தயாமலர். மீண்டும் எனக்கான புனைபெயரை அவர் விருப்பத்துக்கே விட்டேன். ‘ஷெல்லி ராணி’ என்ற பெயரில் பிரசுரித்தார்.

ஆனந்த விகடன், அவள் விகடன் இரண்டிலுமாக வெளி வந்த - பழமொழியும் அல்லாத, பொன்மொழியும் அல்லாத - என் புதுமொழிகள் மொத்தம் 510. இவை எதுவுமே என் சொந்தக் கற்பனை அல்ல. சொந்தமாகப் பொன்மொழிகள் உதிர்க்கிற அளவுக்கு நான் ஒன்றும் இலக்கிய மேதையோ, பெர்னாட்ஷா போன்ற தத்துவ ஞானியோ கிடையாது. அன்னை தெரசா, மகாத்மா காந்தி, புத்தர், ஆர்னால்ட் ஸ்வார்ஷ்நெகர் எனப் பலதரப்பட்டவர்கள் உதிர்த்த கருத்துக்களைத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் படித்து ரசிக்கும்படியாக, எளிமையும் ஜாலியுமான வாக்கியங்களில் பொன்மொழியாகச் சுருக்கினேன். ‘எந்தரோ மகானுபாவுலு அந்தரிகி வந்தனமுலு...’

பத்து தத்துவம் என்பதைச் சுருக்கி வைத்த பெயர்தான் ‘பத்துவம்’. டிக்... டிக்... டிக்... என்பது சம்பந்தமேயில்லாமல் நானாக வைத்த பெயர். இரண்டுமே புத்தகத்துக்குப் பொருந்தாது என்றுதான் வேறு பெயர் யோசித்து, மண்டையை உடைத்துக்கொண்டு, சரியாக ஒன்றும் கிடைக்காமல் ‘என் டயரி’ வலைப்பூ வாசகர்களிடம் சரணடைந்தேன். சுமார் 50 தலைப்புகள் கிடைத்தன.

அவற்றிலிருந்து முதல் கட்டமாக விழிகள் திறக்கும் மொழிகள், என் மொழியில் பொன்மொழிகள், புதுமொழி நானூறு, எனர்ஜி டானிக் ஆகிய நான்கு தலைப்புகளை விகடன் பிரசுர ஆசிரியர் குழுவினர் தேர்ந்தெடுத்தனர். எனக்கும் அந்த நான்கு தலைப்புகளும் மிகவும் பிடித்திருந்தன. விகடன் பிரசுர ஆசிரியர் திரு.வீயெஸ்வி இறுதியாகத் தேர்ந்தெடுத்தது ‘புதுமொழி நானூறு’ என்கிற தலைப்பு. புத்தகத்தில் 500 பொன்மொழிகள் இடம்பெற உள்ளதால், அந்தத் தலைப்பு ‘புதுமொழி 500’ என மாற்றியமைக்கப்பட்டது.

மேற்படி தலைப்பைத் தந்தவர் ‘கிருபாநந்தினி’. ‘படித்துறை’ (padithurai.blogspot.com) என்கிற பெயரில் வலைப்பூ வைத்துள்ளார். அவருக்கு என் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘புதுமொழி 500’ புத்தகத்திலும் ‘என்னுரை’யில் அவருக்கு என் நன்றியைக் குறிப்பிட்டுள்ளேன். விரைவில் புத்தகம் தயாராகிவிடும். ஏற்கெனவே சொன்னதுபோல், புத்தகம் தயாராகி எனக்கான பிரதிகள் கிடைத்ததுமே கிருபாநந்தினிக்கு என் கையெழுத்திட்ட புத்தகம் ஒன்றை என் அன்பளிப்பாக அனுப்பிவைக்கிறேன். இதைப் படிக்கும் கிருபாநந்தினி உடனடியாக என் இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) தனது அஞ்சல் முகவரியை (பின்கோடு உள்பட) தெளிவாக எழுதி அனுப்ப வேண்டுகிறேன்.

தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தத் தலைப்பு அளவுக்கு மற்ற மூன்று தலைப்புகளையும் நான் வெகுவாக ரசித்தேன். ‘விழிகள் திறக்கும் மொழிகள்’, ‘என் மொழியில் பொன்மொழிகள்’ ஆகிய தலைப்புகள் ‘ரோஸ்விக்’ தந்த தலைப்புகளிலிருந்து உருவானவை. அதே போல், ‘எனர்ஜி டானிக்’ என்பது ‘பின்னோக்கி’ கொடுத்திருந்த தலைப்பின் திரிபு. ரோஸ்விக், பின்னோக்கி இருவரும் உடனடியாக தங்கள் அஞ்சல் முகவரிகளை மேலே கொடுத்திருக்கும் என் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வைத்தால், அவர்களுக்கும் தலா ஒரு பிரதியை என் அன்பளிப்பாக நன்றியோடு அனுப்பி வைக்க விரும்புகிறேன்.

இந்தப் பதிவைப் படித்தவர்களுக்கும், தலைப்பு அனுப்பியவர்களுக்கும், தலைப்பு அனுப்ப நினைத்தவர்களுக்கும், புத்தகப் பரிசு பெற்றவர்களுக்கும் அனைவருக்கும் மீண்டும் என் நன்றி!

நெகிழ்ச்சியில் தோன்றிய ஒரு வாக்கியத்தை இறுதியில் சொல்வதாக ஆரம்பத்தில் சொல்லியிருந்தேனே, ஞாபகம் இருக்கிறதா? அது வேறொன்றுமில்லை...

எனது ‘உங்கள் ரசிகன்’ மற்றும் ‘என் டயரி’ வலைப்பூக்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகர்களுக்கு இந்த ஆண்டு முடிய அவ்வப்போது இது போல் போட்டிகள் அறிவித்துப் புத்தகப் பரிசுகள் தர எண்ணியுள்ளேன். குறைந்தபட்சம் மாதத்துக்கு ஒன்று என்ற அளவிலாவது பதினைந்து புத்தகங்கள் வரை அன்பளிக்க ஆசை. பார்க்கலாம்!

***
சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!

11 comments:

Rekha raghavan said...

//இவை எதுவுமே என் சொந்தக் கற்பனை அல்ல. சொந்தமாகப் பொன்மொழிகள் உதிர்க்கிற அளவுக்கு நான் ஒன்றும் இலக்கிய மேதையோ, பெர்னாட்ஷா போன்ற தத்துவ ஞானியோ கிடையாது//

போங்க சார் நீங்க. இப்படியா சொல்றது? அவர்களின் பொன்மொழிகளை ரசிக்கிறமாதிரி கொடுக்கவும் திறமை வேண்டுமே! எனவே உங்களின் கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் . அருமையான பதிவு .

ரேகா ராகவன்.

Ananya Mahadevan said...

நிறைய விஷயங்கள் தெரிந்துகொண்டேன். பொருத்தமான பெயர் கிடைத்ததற்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். பெயர் பரிந்துரைத்த புத்தகம் வென்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Paleo God said...

வாழ்த்துக்கள் சார்.
கிருபாநந்தினி, ரோஸ்விக், பின்னோக்கி அனனவருக்கும் வாழ்த்துக்கள்.

மிக்க மகிழ்ச்சி.:))))
---------

போட்டிகள், மற்றும் புத்தக பரிசுக்கு நன்றிகள் பல. :))

பத்மநாபன் said...

'''பேர் வெச்சாச்சா ? ''' என்று பின்னூட்டம் இட நினைத்தேன் ... தட்ட தட்ட ''வெச்சாச்சு '' என்று உங்கள் பதிவு வந்திறங்கியது ..
பரிசு பெற்ற கிருபாவிற்கு பாராட்டுக்கள் .... தேர்வடைவது / தேர்வு செய்வது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது..
எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி என்னவென்றால் , தேர்வு செய்த சொல்லுக்கு கிட்ட.... தட்ட....... நெருங்கிவிட்டேன் கூடவே நான் குடுத்த
டிப்ஸ் கொஞ்சம் செல்லுபடி யாகி உள்ளது ( நானூறுன்னா , நானூறு, இல்லாட்டி) அதற்காக ''தருமி'' நாகேஷ் மாதிரி பரிசு
கேட்கவில்லை... போட்டிகளும் ,பரிசுகளும் தொடரும் என்றுள்ளீர்கள் ... முயற்சியும் தொடரும் ....

ரோஸ்விக் said...

நான் குறிப்பிட்ட தலைப்புகளில் கிட்டத்தட்ட மூன்று தலைப்புகள் தேர்வானது குறித்து மகிழ்ச்சி. (நான் பொன்மொழி நானூறு என்று கூறியிருந்தேன். அது இப்போது நண்பர் குறிப்பிட்டதுபோல் "புதுமொழி நானூறு" (புதுமொழி 500) என முடிவு செய்யப்பட்டது).

எனது முகவரியை தங்களின் மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கிறேன்.

எனது தலைப்புகளையும் கருத்தில் கொண்டமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். _/|\_
:-)

பின்னோக்கி said...

தேர்ந்தெடுத்த தலைப்பு அருமை. கிருபாநந்தினிக்கு பாராட்டுக்கள். புத்தகம் விற்பனை ரீதியிலும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

நான் அனுப்பிய தலைப்புக்களை நானே மறந்த நிலையில்,அதனை மருவி வைத்த தலைப்புக்கு பரிசு தரும் உங்களுக்கு நன்றி.

சுமார் 17 வருடங்களுக்கு முன் ஆ.வி ஆபிஸுக்கு முதல் முறை போய், அப்பொழுது வெளிவந்த விகடன் பிரசுர புத்தகத்தை வாங்கியது நியாபகம் இருக்கிறது. அலுவலகத்தைப் பார்க்கும் போது “ஓ.. இது தான் இத்தனை வருடங்களாக நான் படித்த விகடன் ஆபீஸ்சா” என்ற வியப்பு ஏற்பட்டது.

பரிசல்காரன் said...

அந்தப்பதிவைப் படிக்கல. மிஸ் பண்ணீட்டேன்! வட போச்சு!

பரிசல்காரன் said...

அட! கடைசி பாரா உற்சாகமூட்டுகிறது. மகிழ்ச்சி!!

கிருபாநந்தினி said...

சார்... எனக்கு வார்த்தையே வரலே! சும்மா ஒரு ஆர்வத்துலதான் பேர் எழுதிப் போட்டேன். அதுல ஒண்ணு தேர்வாகும்னு சத்தியமா நான் நினைக்கலை சார்! ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு. கூடுதல் மகிழ்ச்சி - நீங்க என் வலைப்பூவுக்கு தொடர் வாசகரா சேர்ந்துக்கிட்டது. இரண்டுக்குமாக நன்றி, நன்றி, நன்றி, நன்றி சார்!

pudugaithendral said...

சந்தோஷத்தை வாங்க முயற்சி செய்யாதீர்கள்; அது கடினம். சந்தோஷத்திடம் உங்களை விற்றுவிடுங்கள். அது சுலபம்!//

சூப்பர்.

ungalrasigan.blogspot.com said...

+ நன்றி ரேகா ராகவன்!

+ அநன்யா மஹாதேவன்! சமீபத்தில் என் வலைப்பூவுக்கு வந்தாலும், ஆர்வத்துடன் என் பழைய பதிவுகளையெல்லாம் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள். நன்றி... நன்றி!

+ பலா பட்டறை! வாழ்த்துக்களுக்கு நன்றி!

+ நன்றி பத்மநாபன்!

+ தங்களுக்குத் தோன்றிய தலைப்புகளை ஆர்வத்தோடு பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி, ரோஸ்விக்!

+ பின்னோக்கி! தங்கள் மனதில் உதித்த தலைப்புகளைப் பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

+ பரிசல்காரன்! \\வட போச்சு!// :(
\\அட, வட போகலே; இருக்கு!// :(

+ கிருபாநந்தினி! தங்கள் தலைப்பு தேர்வானது குறித்து என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

+ புதிய வரவான புதுகைத் தென்றலுக்கு வரவேற்பும் நன்றியும்!