பெரியாரும் பெரியவரும்!

ரு நாள், ஒரு பெரியவரைப் பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். மறுநாள், வேறு ஒருவர் மூலம் வேறு ஒரு பிரபலம் பற்றிய வேறொரு விஷயம் கேள்விப்பட்டேன். ஆச்சரியமாக, அந்த இரண்டு விஷயங்களுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருந்ததைக் கண்டேன். அந்த இரண்டு விஷயங்களைச் சொல்கிறேன். நீங்களே இரண்டுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்று கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.

காஞ்சிப் பெரியவரின் கூடவே இருந்து, அவருக்கு 40 ஆண்டுக் காலம் சேவை செய்யும் பாக்கியம் பெற்றவர் லக்ஷ்மிநாராயணன் என்னும் 76 வயதுப் பெரியவர். மாங்காட்டில் இருக்கிறார். சக்தி விகடனில் காஞ்சிப் பெரியவர் பற்றிய அனுபவங்களை எழுதச் சொல்லலாம் என்று, எழுத்தாளர் சாருகேசியுடன் சென்று, அவரைச் சந்தித்துப் பேசினேன். காஞ்சிப் பெரியவர் பற்றி அவர் சொன்ன ஒரு விஷயம் எனக்கு புதுசாக இருந்தது.

காஞ்சிப் பெரியவர் தமது பரிவாரங்களுடன் நடந்து வருகிறார். லஸ் அருகில், அவரையும் அவரது அடியவர் கூட்டத்தையும் தாக்குவதற்காக திராவிடர் கழகத்தினர் கழி, கட்டைகளோடு நின்றுகொண்டு இருக்கிறார்கள். காஞ்சிப் பெரியவருக்கு ஏதேனும் சங்கடம் நேர்ந்துவிட்டால், தங்களால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாதே என்கிற பதைப்போடு டி.டி.கே., சதாசிவம் போன்றோர் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறார்கள். பெரியவரை மேலே முன்னேறி வர வேண்டாம் என்று அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். அவரது பாதுகாப்புக்கு போலீஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள். இருந்தாலும், அவர்களும் தங்களை மீறி பெரியவருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்கிற பயத்தில், அவரை மேலே செல்ல வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறார்கள்.

பெரியவர் புன்னகைக்கிறார். “ஏன் வீணா பயப்படறேள்? அவா என்னை ஒண்ணும் பண்ண மாட்டா!” என்று சொல்லிவிட்டு, அருகே இருந்த அம்பாள் கோவில் எதிரே நின்று சிறிது நேரம் கண்களை மூடிப் பிரார்த்தனை செய்துகொண்டுவிட்டு, மேலே நடக்கத் தொடங்குகிறார். கூடவே நடந்து செல்லும் அனைவரின் மனதிலும் திக்... திக்..! என்ன ஆகப் போகிறதோ என்று படபடப்பு!

அந்த நேரத்தில், ஈ.வே.ரா. பெரியார் அங்கே வருகிறார். திராவிடர் கழகத் தொண்டர்களைப் பார்த்து உரத்த குரலில், “எல்லாரும் கட்டைகளைக் கீழே போட்டுட்டு, ஒதுங்கி நில்லுங்க. பெரியவரை வழி மறிக்கிறது, தாக்குறது எல்லாம் கூடாது, சொல்லிட்டேன்! அவர் எங்கே போகணுமோ, அங்கே அவரை ஒரு ஆபத்தும் இல்லாம கொண்டு போய்ச் சேர்க்க வேண்டியது உங்க பொறுப்பு!” என்று கட்டளை இடுகிறார். அந்தக் கணீர்க் குரல் பெரியவருக்கும் அவரைச் சுற்றி நிற்கும் அனைவருக்கும் கேட்கிறது. “நான்தான் சொன்னேனே, பார்த்தீர்களா!” என்பதுபோல் பெரியவர் தம் அருகில் இருப்பவர்களைப் பார்த்துப் புன்னகை பூத்தபடி, தொடர்ந்து நடக்கிறார்.

பெரியாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு, பெரியவரைப் பாதுகாப்பாக அழைத்துக் கொண்டுபோய் விடுகிறார்கள் திராவிடர் கழகத் தொண்டர்கள். இந்தச் சம்பவம் நடக்கும்போது கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். இதை அவர் விவரித்தபோது, அன்றைக்கிருந்த படபடப்பு அவரது வர்ணனையில் இருந்தது.

இந்தச் சம்பவத்துக்குச் சில ஆண்டுகளுக்கு முன்னால் வரை, காஞ்சிப் பெரியவர் ‘மேனா’ என்று சொல்லக்கூடிய சிவிகையில்தான் சென்றுகொண்டு இருந்தார். சிவிகை என்பது பல்லக்கு. பழைய காலத் திரைப் படங்களில் இளவரசியை ஒரு பல்லக்கில் வைத்து, முன்னால் நான்கு பேர், பின்னால் நான்கு பேர் தூக்கிச் செல்வதைப் பார்த்திருக்கலாம். பெரியவரையும் அதுபோல்தான் அடியவர்கள் தூக்கிச் செல்வார்கள்.


ஒருமுறை, பெரியவர் அதுபோல் மேனாவில் சென்றுகொண்டு இருந்தபோது, வழியில் மேடை போட்டுப் பெரியார் பேசிக்கொண்டு இருக்கிறார். “மற்றவர்கள் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்ல, சொகுசாக உட்கார்ந்துகொண்டு போகிறாரே, இவரெல்லாம் ஒரு துறவியா? மனிதனை மனிதன் சுமப்பது எத்தனைக் கேவலமானது! துறவி என்றால் எல்லாச் சுகங்களையும் துறக்க வேண்டும். இப்படி அடுத்தவர் தோளில் உட்கார்ந்து போகும் இவரைத் துறவி என்று எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?” என்று பெரியார் முழங்கிக்கொண்டு இருப்பது பெரியவரின் காதுகளில் விழுந்தது.


அவ்வளவுதான்... மேனாவை அங்கேயே தரையிறக்கச் சொல்லி இறங்கிவிட்டார் பெரியவர். “அவர் ஏதோ சொல்றார்; சொல்லிட்டுப் போறார். அதைப் பெரிசா எடுத்துக்காதீங்கோ! உங்களைச் சுமந்துண்டு போறதை நாங்க பாக்கியமா கருதறோம்!” என்று மடத்தைச் சேர்ந்தவர்கள் பெரியவரிடம் கெஞ்சியிருக்கிறார்கள்.

“இல்லை. அவர் சொல்றதுதான் சரி! சுகத்தைத் துறக்காதவன் துறவியே இல்லை. இனிமே எனக்கு இந்த மேனா வேண்டாம். இனி நான் எங்கே போகணும்னாலும் நடந்துதான் போகப் போறேன்” என்று தீர்மானமான முடிவெடுத்துவிட்டார் காஞ்சிப் பெரியவர்.


கடைசி வரையிலும், அவர் அந்த முடிவிலிருந்து மாறவில்லை. அவர் கால்கள் தெம்பு இருக்கும்வரை நடந்துகொண்டே இருந்தன.

ரண்டாவது சம்பவம்... எழுத்தாளர் பாக்கியம் ராமசாமி சொன்னது.

அந்நாளில் குமுதம் ஊழியர்களுக்கென்று ஒரு குவார்ட்டர்ஸ் உண்டு. (இப்போதும் உள்ளதா என்று எனக்குத் தெரியாது.) அங்கேதான் ரா.கி.ரா., ஜ.ரா.சுந்தரேசன் என்கிற பாக்கியம் ராமசாமி, புனிதன் எனப் பலரும் குடியிருந்தார்கள்.

வசதியான குவார்ட்டர்ஸ்தான். ஆனால், அப்போது கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். எனவே, குவார்ட்டர்ஸ்களில் தண்ணீர் வரவில்லை. அங்கே குடியிருந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால், யாரும் எஸ்.ஏ.பி-யின் கவனத்துக்கு இந்த விஷயத்தைக் கொண்டு போகவில்லை.

வெள்ளிக்கிழமைகளில் சாயந்திர வேளையில் குமுதம் ஊழியர்களுக்கென்றே பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட பஜனைகள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் நடக்கும். அனைவரும் கட்டாயம் அதில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குமுதம் நிறுவனரும், எடிட்டருமான எஸ்.ஏ.பி-யின் உத்தரவு. அவரும்கூடக் கலந்து கொள்வார் - ஃப்ரெஷ்ஷாக ஷவர் அடியில் நின்று ஒரு குளியல் போட்டுவிட்டு வந்து!

ஒருநாள், அவர் யதேச்சையாக, “ஆன்மிகச் சொற்பொழிவுகள் உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவதற்கு. அதற்காக யாரும் உடம்பைத் தூய்மைப்படுத்திக் கொள்ளாமல் இதில் வந்து கலந்து கொள்ளக் கூடாது. எல்லோரும் குளிச்சுட்டீங்கதானே?” என்று பொதுவாகக் கேட்டிருக்கிறார்.

“குளியலா..? அப்படின்னா..?” என்று கேட்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி.

எஸ்.ஏ.பி-க்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன சொல்றீங்க ஜ.ரா.சு.?” என்று கேட்டார்.


“இல்லே... குளிக்கணும்னா தண்ணி வேணுமோல்லியோ? நாங்க தண்ணியைப் பார்த்தே பல மாசமாச்சு! நாங்க எல்லாரும் தலையில தண்ணியைப் புரோக்ஷணம்தான் (விரல்களால் தண்ணீரை எடுத்துத் தெளித்துக் கொள்வது) பண்ணிக்கிட்டு வரோம் கொஞ்ச நாளா!” என்று விஷயத்தைப் பட்டென்று போட்டு உடைத்துவிட்டார் பாக்கியம் ராமசாமி.

அமைதியில் ஆழ்ந்துவிட்டார் எஸ்.ஏ.பி.


அதன்பின், சில மாதங்களில் மழை பெய்து, தண்ணீர்ப் பிரச்னை தீர்ந்து, எல்லோரும் குதூகலமாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைகூட தாராளமாகக் குளிக்க முடிந்தது. கிட்டத்தட்ட ஒரு வருட காலம் ஓடியிருக்கும். பழைய தண்ணீர்ப் பஞ்ச அனுபவங்கள் மறந்தே போன நிலை.

வழக்கம்போல் ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஆன்மிக நிகழ்ச்சியில் குமுதம் ஊழியர்கள் அனைவரும் கலந்துகொண்டிருந்தார்கள். அனைவரும் ஃப்ரெஷ்ஷாகக் குளித்துப் புத்துணர்ச்சியோடு இருந்தார்கள்.

எஸ்.ஏ.பி. வந்தார். பாக்கியம் ராமசாமி அவரிடம் யதார்த்தமாக, “என்ன சார்! திவ்வியமா ஷவர் குளியல் போட்டுட்டு வந்தீங்களா?” என்று கேட்டார்.

“ஷவரா... அப்படின்னா?” என்று திருப்பிக் கேட்டார் எஸ்.ஏ.பி.

பாக்கியம் ராமசாமிக்குப் புரியவில்லை. பின்பு விசாரித்தபோதுதான் தெரிந்தது, சுமார் ஒரு வருட காலமாகவே - அதாவது, ‘குளியலா... அப்படின்னா?’ என்று பாக்கியம் ராமசாமி குறும்பாகக் கேட்டுத் தண்ணீர்ப் பிரச்னை பற்றிச் சொன்ன அன்றைய தினத்திலிருந்தே, ஷவரின் அடியில் நின்று குளிப்பதைத் தவிர்த்துவிட்டிருக்கிறார் எஸ்.ஏ.பி. சிக்கனமாக ஒரே ஒரு பக்கெட்டில் தண்ணீர் வைத்து, சொம்பால் மொண்டு ஊற்றிக்கொண்டுதான் குளிப்பாராம்.

கடைசி வரையில், ஷவர் குளியலை அவர் மீண்டும் அனுபவிக்கவே இல்லை!

புத்தகப் பரிசுகள் அனுப்பிவைத்தது குறித்து மறுபடி மறுபடி எழுத எனக்குக் கூச்சமாக இருக்கிறது. ‘ஆமா! பெரிசா புத்தகம் அனுப்பி வெச்சுட்டான். இதை இவனே எத்தனை முறை எழுதிக்குவானோ!’ என்று இன்னொரு வாசகரின் நிலையிலிருந்து நானே கேலியாகக் கேட்டுக் கொள்கிறேன். இருந்தாலும், சிலவற்றைச் சொல்லியாக வேண்டியிருப்பதால் இதை எழுதுகிறேன்.

தயவுசெய்து இனிமேல் யாரும் தங்கள் முகவரிகளை அனுப்பி வைக்க வேண்டாம். ‘ரசிகன்’ பாடல் போட்டி முடிந்துவிட்டது. இனி, வேறு ஒரு போட்டியில் சந்திப்போம்!


ஒரே ஒருவரைத் தவிர, மற்றவர் அனைவருக்கும் புத்தகப் பரிசுகள் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானாவர்கள் நன்றியுடன் தகவல் அனுப்பிவிட்டார்கள். தகவல் அனுப்பிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!


‘ஒரே ஒருவரைத் தவிர’ என்று குறிப்பிட்டேனல்லவா... அவர் ராமசாமி பிரபாகர். அவர் கொடுத்திருந்த ‘தெடாவூர்’ முகவரி தவறானது என்று கூரியர் திரும்பி வந்துவிட்டது.

பரிசுப் போட்டியை அறிவிக்கும்போது இத்தனைப் பின்னூட்டங்கள் வரும், அவற்றில் இத்தனை சரியான விடைகள் இருக்கும், இவ்வளவு புத்தகங்களைப் பரிசாக அனுப்ப வேண்டியிருக்கும் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும், சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே உடனடியாக அத்தனைப் புத்தகங்களையும் வாங்கி அவரவர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டேன். மிக மகிழ்ச்சியான மன நிலையிலேயே அவற்றை அனுப்பி வைத்துள்ளேன். ஒருக்கால், புத்தகங்கள் அனுப்புவதைத் தாமதிக்கத் தாமதிக்க, இந்த மகிழ்ச்சியான மனநிலை போய், இப்படி மாட்டிக் கொண்டோமே என்று என்னையும் அறியாமல் உள்ளூர ஒரு வருத்த உணர்வு வந்துவிட்டால் என்ன செய்வது என்றுதான் அவசர அவசரமாக அனுப்பி வைத்தேன். இந்த நேரம் வரைக்கும் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைத்ததில் எனக்குப் பூரண மகிழ்ச்சிதான். என்றாலும், மனித மனம் நாளைக்கு எப்படி மாறும் என்று யாருக்குத் தெரியும்?

‘ரசிகன்’ போட்டிக்கான சரியான விடைகளைக் கணக்கிட்டதில், மொத்தம் 70 புத்தகங்களை வாங்கி நான் பரிசாக அனுப்ப வேண்டியிருந்தது. ஆனால், குறித்த நேரத்தில் முகவரி கிடைக்காததால், 58 புத்தகங்களை மட்டுமே அனுப்பினேன். 70 புத்தகங்களையும் அனுப்ப இயலாது போனதில் எனக்கு வருத்தம்தான்.

போகட்டும்... அடுத்த போட்டியில் பார்க்கலாம்!


***

உங்களை மூளையால் கையாளுங்கள்; மற்றவர்களை இதயத்தால்!

‘அப்புசாமி-சீதாப்பாட்டி’யின் பிரம்மா!

‘ரசிகன்’ போட்டி தொடர்பாக நான் ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, சரியான பாடல்களைக் குறிப்பிட்டு எழுதியவர்களுக்கு, அவர்கள் கண்டுபிடித்திருந்த பாடல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகப் பரிசுகளை, இன்று எங்கள் அலுவலக ஊழியர் மூலம் கொடுத்து கூரியரில் சேர்க்கச் சொல்லிவிட்டேன். அவரவர்களுக்கு உரிய புத்தகப் பரிசுகள் வருகிற திங்கள், செவ்வாயில் கிடைத்துவிடும். கிடைத்ததும் எனக்கு இ-மெயிலில் ஒரு வரி தகவல் தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.

இந்தப் போட்டியில் கலந்துகொண்டவர்களில் ஒரு சிலர் தவிர, மற்ற அனைவருமே ஒரே ஒரு பாடலையாவது சரியாகக் குறிப்பிட்டிருந்தார்கள். எனவே, கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி, விடை தெரியும் வரை காத்திருக்கவேண்டாம்; உடனடியாக எனக்குத் தங்கள் முகவரிகளை இ-மெயில் செய்யுங்கள் என்று முன்பொரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அடுத்து மார்ச் 8-ம் தேதியன்று எழுதிய பதிவில் யார், யார் எத்தனைப் பாடல்களைச் சரியாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டு எழுதி, சுமார் 20 பேரிடமிருந்து முகவரிகள் வரவில்லை என்பதையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், இன்னமும் சிலரிடமிருந்து அவர்களின் அஞ்சல் முகவரிகள் எனக்கு வந்து சேரவில்லை. மற்றபடி, முகவரிகள் அனுப்பிய அனைவருக்கும் இன்றைக்கு அவரவர்களுக்கு உரிய பரிசுப் புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டேன். இத்துடன் ‘ரசிகன்’ போட்டி தொடர்பான புத்தகப் பரிசுகள் அனுப்புவதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்படுகிறது. இனிமேல் யாரும் தங்கள் அஞ்சல் முகவரிகளை எனக்கு இ-மெயில் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்; புத்தகப் பரிசு பெற்றோர் பட்டியலில் அவர்களின் பெயர் இருந்தாலும்கூட!

மன்னிக்கவும்! என் மீது தவறில்லை. குறிப்பிட்ட ‘ரசிகன்’ நிகழ்ச்சி ஒளிபரப்பானதற்கு மறுநாளே, பரிசு பெற்றோர் அத்தனை பேருக்கும் புத்தகப் பரிசுகள் அனுப்பி வைக்க வேண்டும் என்றுதான் நான் ஆர்வப்பட்டேன். ஆனால், பலர் தங்கள் முகவரிகளைத் தெரிவிக்கவில்லை. எனவேதான், முகவரிகள் அனுப்பாதவர்களையும் அனுப்பும்படி கேட்டு எழுதி மறுநாள் ஒரு பதிவிட்டுவிட்டு, ஆறு நாட்கள் காத்திருந்து, இன்று காலை வரை வந்து சேர்ந்த அத்தனை முகவரிகளுக்கும் பரிசுப் புத்தகங்களை அனுப்பி வைத்துவிட்டேன். இனி, இது முடிந்துபோன விஷயம். இந்தப் போட்டியில் கலந்துகொண்டு புத்தகப் பரிசு பெற்று, ஆனால் தங்கள் முகவரியை இதுவரை அனுப்பி வைக்காதவர்கள் இனிமேல் அனுப்ப வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக் கொள்கிறேன். என் பணி நெருக்கடியில் உதிரி உதிரியாக, துண்டுத் துண்டாகப் புத்தகங்களை அனுப்பி வைப்பது என்பது இயலாது.

க.நா.சாந்தி லெட்சுமணன் தனது அந்தமான் முகவரியைத் தந்திருக்கிறார். முகவரி அனுப்பியவர்களில் இவருக்கு மட்டும்தான் பரிசுப் புத்தகங்கள் அனுப்பவில்லை. வெளிநாட்டில் இருப்பவர்கள் தங்கள் இந்திய முகவரியைத் தரும்படி கேட்டிருந்தேன். சாந்தி லெட்சுமணன் தனது இந்திய முகவரியைத் தந்தால், வரும் திங்களன்று அவருக்குரிய இரண்டு புத்தகங்களை அனுப்பி வைக்கிறேன். இரண்டு புத்தகங்களை அந்தமானுக்கு அனுப்ப ஆகிற செலவு புத்தக விலைக்கு நிகராக ஆகிவிட்டால், அதைவிட அபத்தம் வேறு இருக்காதே என்றுதான் யோசிக்கிறேன். கூரியர் செலவு அந்தமானுக்கு அப்படியொன்றும் அதிகம் இல்லையெனில், கட்டாயம் வருகிற புதன்கிழமைக்குள் அவருக்குரிய புத்தகங்களும் அனுப்பி வைக்கப்படும்.

ஆக... ‘ரசிகன்’ போட்டி இத்துடன் மங்களகரமாக நிறைவுற்றது. இனி வேறு ஒரு பதிவில், வேறு ஒரு போட்டி!

***

ழுத்தாளர் திரு. பாக்கியம் ராமசாமியை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தேன். வேறென்ன... ‘சக்தி விகடனி’ல் அவரையும் எழுத வைக்க எண்ணம்தான்!

ஏற்கெனவே தொலைபேசியில் அவருடன் பேசி, இரண்டு கட்டுரைகளை வாங்கிவிட்டேன். ஆக, சக்தி விகடனின் கடைசிப் பக்க கலகலப்புக்கு அவர் உத்தரவாதம்! எனினும், மரியாதை நிமித்தமாக இன்று அவரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினேன்.

பாக்கியம் ராமசாமியை (இயற்பெயர் ஜ.ரா.சுந்தரேசன்) எனக்கு இருபது வருடங்களாகப் பழக்கம் உண்டு. சாவி சார் கடைசி முறையாக 1995-ல் ‘சாவி’ ஆசிரியர் குழுவினரை பெங்களூருக்கு அழைத்துச் சென்றபோது, பா.ரா-வும் உடன் வந்தார். ஆசிரியர் குழு என்றதும், பத்துப் பதினைந்து பேர் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். பணியாற்றுபவர்கள் என்று பார்த்தால், சாவி இதழ் பொறுப்பாசிரியராகிய நான், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன் (இவர் ஓவியர் ஜெயராஜின் அக்கா மகன்) ஆகிய இருவர்தான். தவிர, ஃப்ரீலான்ஸராக சாவியில் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டு இருந்த மதிக்குமார் (இன்றைய தினமணி கார்ட்டூனிஸ்ட் மதி) மற்றும் பல ஆண்டுகளாக சாவி சாரின் வலக்கரமாகத் திகழ்ந்து வந்த ராணிமைந்தன் இவர்களோடு அந்த முறை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியும் எங்களோடு வந்தார்.

சாவி சார் ஆண்டுக்கு மூன்று முறை இப்படி எங்களை ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் செல்வார். சாவி பத்திரிகையில் என்னென்ன பகுதிகள் கொண்டு வரலாம், என்னென்ன மாற்றங்களைச் செய்யலாம் என்று விவாதித்தாற்போலவும் ஆச்சு; எங்களுக்கு ஒரு டூர் புரொகிராம் மாதிரியும் ஆச்சு! 1995-ல் அப்படிப் போனபோதுதான் சாவி சார் பெங்களூரில் என் மேல் கடுங்கோபத்துக்கு ஆளாகி, “சாவி பத்திரிகையை நான் இங்கேயே, இந்த க்ஷணமே நிறுத்தறேன். யாரும் என் கண் முன்னே நிக்க வேணாம். ஓடிப் போங்க” என்று சீறி விழுந்தார். அதோடு நிஜமாகவே சாவி பத்திரிகை மூடப்பட்டது. அது பெரிய கதை!

நான் பின்னர் விகடனில் சேர்ந்தேன். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, திருவேங்கடம் என்பவர் (இவர் ஒரு தொழிலதிபர்; ‘ஹலோ’ என்று பிரசாந்தை வைத்து ஒரு திரைப் படம் தயாரித்துள்ளார். சிறந்த எழுத்தாளர். இவரின் நான்கைந்து நூல்களை விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது.) சாவி பத்திரிகையை எடுத்து நடத்தினார். சாவி அவர்களே ஆசிரியராக இருந்து அதை நடத்திக் கொடுத்தார். அப்போது சாவி இதழைக் கவனித்துக்கொள்ள சாவி சார் எனக்கு அழைப்பு அனுப்பினார். ஆனால், நான் அவரைப் போய்ப் பார்க்கவே இல்லை.

அவர்மீது எனக்குக் கோபம் எதுவும் இல்லை. போய் அவர் முன் நின்றால், மகுடிக்குக் கட்டுண்ட நாகம் போன்று அவர் பேச்சுக்குத் தலைசாய்த்து, அவரோடு மீண்டும் சேர்ந்துவிடுவேன். இது என் பலவீனம். ஆனால், நான் விகடன் என்னும் விருட்சத்தின் நிழலில் இடம் கிடைத்து ஒதுங்கியிருந்ததால், மேற்படி நிலையைத் தவிர்க்க விரும்பியே அவர் அழைத்தும் போகாமல் இருந்தேன். விகடனில் ஒருவாறு காலூன்றி, சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியத்தின் அன்புக்குப் பாத்திரமாகி, ஆறு மாத காலத்தில் நிரந்தர ஊழியனாக மாறிய பின்னர்தான் மீண்டும் முதன்முறையாக சாவி அவர்களை, அவரது சதாபிகேஷத்தின்போது நேரில் சந்தித்துப் பேசினேன்.

சரி, விஷயத்திற்கு வருகிறேன். பாக்கியம் ராமசாமியை இன்று சந்தித்தபோது, இந்தப் பழைய கதைகளையெல்லாம் வெகு சுவாரசியமாகப் பேசிக்கொண்டு இருந்தோம். தவிர, திருவேங்கடம் பொறுப்பில் ‘சாவி’ இதழ் வந்தபோது, ஆசிரியர் சாவியுடன் பணியாற்றியுள்ளார் பாக்கியம் ராமசாமி. அந்த அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். திரு. பா.ரா-வுடன் பேசுவதே ஒரு சுவாரசியமான அனுபவம். நேரம் போவதே தெரியாது. சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டு இருப்பார். பொதுவாக, சிரிக்கச் சிரிக்க நகைச்சுவையாக எழுதுகிறவர்கள் பலர் நிஜத்தில் கடும் கோபக்காரர்களாகத்தான் இருப்பார்கள் - சாவி சார் போல! ஆனால், பாக்கியம் ராமசாமி அவர்கள் தமது எழுத்தைப் போலவே நிஜத்திலும் மிக ஜாலியான நபர். மிக அந்நியோன்னியமாக, அன்போடு, ஒரு தோழன் போல நமக்குச் சரிசமமாக அவர் ஒரு சில மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தால், நமது கவலைகள், துயரங்கள் யாவும் பறந்துவிடும். வேறு யோகா, தியானம், ரிலாக்சேஷன் எதுவும் நமக்குத் தேவைப்படாது.

‘சாவி’ காலத்திலிருந்து பா.ரா-வைப் பழக்கம் என்றேன். ஆனால், நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே குமுதம் பத்திரிகையில் அவரது அப்புசாமி கதைகளை நான் படித்து ரசித்திருக்கிறேன். ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்’ தொடர்கதையை ஒவ்வொரு வாரமும் படிக்கும்போது சிரித்துச் சிரித்து நிஜமாகவே வயிற்று வலி வந்துவிடும். இந்த நகைச்சுவை மேதையை ஒரு நாள் நேரில் சந்திப்போம், பழகுவோம், அவரின் அன்புக்குப் பாத்திரமாவோம் என்று நான் அப்போது கனவிலும் எண்ணியதில்லை.

‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ என இரண்டு கேரக்டர்களைப் படைத்து, தமது ஜீவிய எழுத்துக்களால் அவர்களுக்கு உயிரூட்டிய பிரம்மா பாக்கியம் ராமசாமி, அப்புசாமி பெயரிலேயே ஒரு வலைத்தளம் தொடங்கி, சுவாரசியமாக அதில் பதிவிட்டு வருகிறார்.

இணைப்புக்கு இங்கே சொடுக்கவும்...
http://www.appusami.com

***
நகைச்சுவை உணர்வு நிரம்பியவர், மென்மையான இலவம்பஞ்சுத் தலையணை போல... அவரும் லேசாக இருப்பார்; அடுத்தவருக்கும் இதமாக இருப்பார்!

பெரியவர் பெரியவர்தான்!

போலிச் சாமியார்களின் முகமூடிகள் கிழிபட்டுக்கொண்டே வருகின்றன. உண்மையிலேயே இது சந்தோஷமான விஷயம்தான். இந்தக் கழிசடைகளையெல்லாம் நான் எந்தக் காலத்திலும் ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டதே இல்லை. காரணம், அவர்கள் முகத்தைப் பார்த்தாலே காமுகன் என்றும், கொலைகாரன் என்றும் அவர்கள் நெற்றியிலேயே எழுதி ஒட்டியிருப்பது என் கண்களுக்கு நன்றாகத் தெரிகிறது. என்னைப் போன்ற ஒரு சாமானியனுக்குத் தெரிந்த விஷயம் ஏன் மற்ற லட்சோப லட்சம் மக்களுக்குத் தெரியவில்லை, அந்தப் போலிகளின் காலடியில் கொண்டு போய் கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டும் குபேரர்களுக்கு ஏன் தெரியவில்லை, படித்த மேதாவிகள் பலருக்குக்கூட ஏன் இது புரியவில்லை என்பதுதான் எனக்குப் பெரிய ஆச்சரியமாக இருக்கிறது.

சரி, முகமூடிகள் கிழிபட்ட பின்பாவது அந்தப் போலிச் சாமியாரை ஒதுக்குகிறார்களா என்றால், இல்லை. இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற பிரேமானந்தா ஆசிரமத்தில் இன்னமும் கூட்டம் அம்முகிறதாம்; வெளிநாட்டுப் பக்தர் கூட்டம் கூடிக் கும்மியடிக்கிறதாம். நூறு பெரியார்கள் வந்தாலும் இவர்களைத் திருத்தவே முடியாது என்றுதான் தோன்றுகிறது. இந்த மாதிரி மதிகெட்ட ஆன்மிகத்துக்குப் பதிலாக நாத்திகமே தேவலை என்பேன். ஆனால், நாத்திகத்திலும் போலி நாத்திகம் கூடாது. அதுவாவது முழுமையான நாத்திகமாக இருக்க வேண்டும். ஆனால், பரவலாக இங்கே காணக் கிடைப்பதெல்லாம் ‘காரிய நாத்திகம்’தான்!

இங்கே, காஞ்சிப் பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் பற்றிச் சமீபத்தில் எனக்குத் தெரிய வந்த சிலிர்ப்பூட்டும் தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். உண்மையிலேயே பெரியவர் பெரியவர்தான்!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், காஞ்சிப் பெரியவரின் ஜன்ம தினத்தன்று அவரைச் சந்தித்து ஆசி பெறுவதற்காக ‘கலவை’யில் எக்கச்சக்கக் கூட்டம் திரண்டிருந்தது. அப்போது ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு நபர் தன் மனைவியோடு, ஸ்வாமிகளின் தரிசனத்துக்காக முன் வரிசையில் காத்திருந்தார். அவர் கழுத்திலும், அவரின் மனைவியின் கழுத்திலும் காதிலும் தங்க நகைகள் ஏராளம் மின்னின. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்பது பார்த்த மாத்திரத்திலேயே புரிந்தது.

பெரியவர் தம் அறையிலிருந்து வெளிப்பட்டதும், முன்னால் இருந்த அந்தத் தம்பதி மீதுதான் அவரது பார்வை விழுந்தது. அந்தத் தொழிலதிபரை, “எப்படி இருக்கே?” என்று விசாரித்தார் பெரியவர்.

அதற்கு அந்தத் தொழிலதிபர், தான் செய்து வரும் தான தருமங்கள் பற்றியும், தொடர்ந்தாற்போல் நான்கு நாட்களுக்குத் தன் சொந்தச் செலவில் இலவசமாக ஏழை பிராமணர்களுக்கு ‘சமஷ்டி உபநயனம்’ செய்து வைத்தது பற்றியும் சொல்லிவிட்டு, அது தொடர்பான கையேடுகளைப் பெரியவரிடம் காண்பித்தார். அதை வாங்கிப் பார்வையிட்ட பெரியவர், “சரி, இதுக்கெல்லாம் உனக்கு எவ்வளவு செலவாச்சு?” என்று கேட்டார். தொழிலதிபர் பெருமிதம் தொனிக்கும் குரலில், “சில லட்ச ரூபாய்கள் ஆகியிருக்கும்” என்றார்.

பெரியவர் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர், “அதிருக்கட்டும்... திருநெல்வேலில தக்ஷிணாமூர்த்தின்னு ஒரு பையன் இருந்தானே, அவன் இப்போ எப்படி இருக்கான்?” என்று சன்னமான குரலில் கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் நகர்ந்து போய்விட்டார்.

தொழிலபதிபர் அப்போது அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை. தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் குமுறிக் குமுறி அழத் தொடங்கிவிட்டார். அவர் மனைவி அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. அதற்குள் பத்திரிகையாளர்கள் சிலர் அங்கு கூடி, அவர் ஏன் அழுகிறார் என்று விசாரித்தனர். அதற்கு அவர், “நான் அயோக்கியன்... அயோக்கியன்..!” என்று திருப்பித் திருப்பிச் சொல்லிக்கொண்டு இருந்தார். அவரை ஒருவாறு சமாதானப்படுத்தி விஷயத்தைக் கேட்டதற்கு அவர் சொன்னார்...

“எனக்கு ஒரு அக்கா உண்டு. அவள் கணவனை இழந்தவள். அவளுக்கு ஒரு பையன். அவன் பெயர்தான் தக்ஷிணாமூர்த்தி. அவர்கள் இருவரும் என் வீட்டில்தான் தங்கி வளர்ந்தார்கள். பின்னர் அக்கா காலமாகிவிட்டாள். அதன்பின் அந்தப் பையனை என் வீட்டில் வைத்திருக்க விரும்பாமல், வீட்டை விட்டுத் துரத்தி விட்டேன். அதன்பின் அவன் எங்கே போனான், என்ன ஆனான் என்று எனக்குத் தெரியாது. ‘ஊருக்கெல்லாம் சமஷ்டி உபநயனம் செய்து வைப்பதாய் பெருமை பேசுகிறாய். ஆனால், உன் சொந்தச் சகோதரி மகனை மறந்துவிட்டாய். நீ பெரிய தர்மவானா?’ என்றுதான் பெரியவர் இப்போது என்னை மறைமுகமாகக் கேட்டார். உடனடியாக அந்தப் பையனைத் தேடிக் கண்டுபிடித்து, நல்ல முறையில் வளர்த்துப் பெரியவனாக ஆக்க வேண்டியது என் பொறுப்பு!” என்றபடி தன் மனைவியுடன் கிளம்பிச் சென்றார் அந்தத் தொழிலதிபர்.

இன்னொரு சம்பவம்...

ஒருமுறை ‘திருவாடனை’ என்னும் ஊரிலிருந்து பக்தர்கள் கூட்டம் பெரியவாளைத் தரிசிக்க வந்தது. பெரியவர்கள் அன்று காஷ்ட மௌனம் இருந்தார். அதாவது, ஒரு சிறு சப்தம் கூட எழுப்பாமல், முழுமையான மௌனத்தில் இருப்பார். வருடத்தில் ஒருநாள் அவர் இப்படி காஷ்ட மௌனம் இருப்பது வழக்கம். முப்பது வருடங்களுக்கும் மேலாக அவர் கடைப்பிடித்து வந்த வழக்கம் இது. ஒருமுறை, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திராகாந்தி வந்த சமயத்தில்கூடப் பெரியவர் தம் மௌன விரதத்தை விட்டுக் கொடுக்கவில்லை.

அன்றைக்குத் திருவாடனை ஊரிலிருந்து வந்திருந்த பக்தர் கூட்டத்தில் சங்கரன் என்பவரும் இருந்தார். அவர் பிரிட்டிஷ் ஆட்சியின்போது தேச விடுதலைக்காகப் போராடி, ஆங்கிலேயர்களிடம் தடியடி பட்டு, இரு கண் பார்வையையும் இழந்தவர்.

மடத்துச் சிப்பந்தி ஒருவர், வந்திருந்த பக்தர் ஒவ்வொருவரையும் பெரியவாளுக்கு அறிமுகம் செய்துவைக்க, பெரியவர் மௌனமாகவே ஆசி வழங்கிக்கொண்டு இருந்தார்.

சங்கரன் முறை வந்தபோது, அவரையும் பெரியவருக்கு அறிமுகம் செய்தார் மடத்துச் சிப்பந்தி. சங்கரனை பெரியவருக்கு ஏற்கெனவே தெரியும். சங்கரனைப் பார்த்ததும் பெரியவர் உரத்த குரலில், “என்ன சங்கரா? எப்படி இருக்கே? சௌக்கியமா? உன் மனைவியும் குழந்தைகளும் நன்னா இருக்காளா? இன்னும்கூட உன்னால முடிஞ்ச வரைக்கும் தேசத் தொண்டு செஞ்சுண்டு இருக்கே போலிருக்கே?” என்று கேட்டு, ஆசீர்வதித்தார்.

சங்கரனுக்கு ரொம்ப சந்தோஷம். அதே நேரம், மடத்து சிப்பந்திகளுக்கும் மற்றவர்களுக்கும் பெரிய ஆச்சரியம்... முப்பது வருஷமாகக் கடைப்பிடித்து வரும் மௌன விரதத்தை முறித்து விட்டாரே பெரியவர் என்று!

எல்லோரும் பிரசாதம் வாங்கிக்கொண்டு அங்கிருந்து அகன்ற பின்பு, சிப்பந்திகள் தயங்கித் தயங்கிப் பெரியவரிடம் சென்று, “பெரியவா எதுக்காக மௌன விரதத்தை முறிச்சுட்டீங்க? எல்லாருக்கும் மௌனமா ஆசி வழங்கினது போலவே இந்தச் சங்கரனுக்கும் ஆசி வழங்கியிருக்கலாமே? இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா?” என்று கேட்டனர்.

பெரியவர் புன்னகைத்தபடியே, “எல்லாரையும் போல சங்கரனை நடத்தக் கூடாது. இவனுக்குப் பாவம் கண் தெரியாது. என்னைப் பார்த்து ஆசி வாங்கணும்னு அவ்வளவு தூரத்திலேர்ந்து வந்திருக்கான். அவனால் என்னைப் பார்க்க முடியாது. நானும் மௌனமா ஆசீர்வாதம் பண்ணினேன்னா, அது அவனுக்குப் போய்ச் சேராது. நான் அவனைப் பார்த்தேனா, ஆசீர்வாதம் பண்ணினேனான்னு அவனுக்குத் தெரியாது. மனசுக்குக் குறையா இருக்கும். வருத்தப்படுவான். இந்தத் தேசத்துக்காகத் தன் கண்களை தானம் செஞ்சவன் அவன். அவனுக்காக நான் என் ஆசாரத்தை விட்டுக் கொடுத்தேன்னா ஒண்ணும் குடிமுழுகிப் போயிடாது. அதனால எதுவும் குறைஞ்சுடாது. அவனோட தியாகத்துக்கு முன்னாடி என்னோட ஆசாரம் ஒண்ணுமே இல்லே!” என்றார் நிதானமாக.

பெரியவர் வெறும் சாஸ்திர சம்பிரதாயங்களை மட்டும் வறட்டுப் பிடிவாதமாகப் பிடித்துக்கொண்டு இருப்பவர் அல்ல; அதற்கும் மேலாக மனிதாபிமானத்தை, மனித நேயத்தையே விரும்பியவர்; இந்த விஷயத்தில் மற்றவர்களுக்குத் தாமே ஒரு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் உதாரணம்!

***

நீங்களே உதாரணமாகத் திகழ்ந்துவிட்டால், பலப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டிய வேலை உங்களுக்கு மிச்சம்!

புத்தகப் பரிசுகள் யார் யாருக்கு?









‘ரசிகன்’ தொடருக்கு ஒரு ரசிகனாக இருந்து சென்ற மாதம் நான் நடத்திய ‘ம.செ. ஓவியம் - கண்ணதாசன் பாடல் போட்டி’யில் உற்சாகத்துடன் கலந்துகொண்டு விடைகளைப் பின்னூட்டம் மூலம் உடனடியாக அனுப்பிய வலைப்பூ நேயர்கள் அனைவருக்கும் நன்றி..! நன்றி..!

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று ‘ரசிகன்’ தொடரை கலைஞர் தொலைக்காட்சியில் பார்த்து ரசித்திருப்பீர்கள்; நீங்கள் எனக்கு எழுதியனுப்பிய விடைகளில் எத்தனை சரி என்பதையும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ‘ரசிகன்’ தொடரைப் பார்க்க இயலாதவர்களுக்காக சரியான விடைகளைக் கீழே தந்திருக்கிறேன்.

முதல் படத்துக்குரிய பாடல்... ‘அமைதியான நதியினிலே ஓடும்...’
2-வது படத்துக்குரிய பாடல்... ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...’
3-வது படத்துக்குரிய பாடல்... ‘ராமனின் மோகனம், ஜானகி மந்திரம்...’
4-வது படத்துக்குரிய பாடல்... ‘வாழ நினைத்தால் வாழலாம்...’

முதன்முதலாகப் பின்னூட்டம் இட்ட சொக்கன் இந்த நான்கு பாடல்களையுமே சரியாகக் கண்டுபிடித்திருக்கிறார். அவருக்கு நான்கு புத்தகங்கள் பரிசு. சொக்கன் தவிர, நான்கு பாடல்களையும் சரியாகக் கண்டுபிடித்திருப்பவர்கள் முத்துலெட்சுமி, ஜாபர் அலி, தமிழ்ப்ரியன் ஆகியோர். இந்த மூவருக்கும்கூட தலா நான்கு புத்தகங்கள் பரிசாக அனுப்பி வைக்கப்படும். (மொத்தம் 16 புத்தகங்கள்).

புத்தகப் பரிசு பெறும் மற்றவர்கள் விவரம்:

புதுகைத் தென்றல் - 1 புத்தகம்
கிருபாநந்தினி - 2 புத்தகங்கள்
எம்.எம்.அப்துல்லா - 2 புத்தகங்கள்
ஜீவ்ஸ் - 3 புத்தகங்கள்
பரிசல்காரன் - 1 புத்தகம்
சாய் கோகுல கிருஷ்ணா - 2 புத்தகங்கள்
க.நா.சாந்தி லெட்சுமணன் - 2 புத்தகங்கள்
ஸ்வாமி - 3 புத்தகங்கள்
விஜய் - 1 புத்தகம்
ராமு - 2 புத்தகங்கள்
பிரபாகர் -2 புத்தகங்கள்
அநன்யா மகாதேவன் - 1 புத்தகம்
பொன்னியின் செல்வன் - 3 புத்தகங்கள்
TBCD -2 புத்தகங்கள்
ஜோ - 2 புத்தகங்கள்
ராஜு - 1 புத்தகம்
பி.கே.ராமச்சந்திரன் - 1 புத்தகம்
பாபு - 2 புத்தகங்கள்
கதிர் - 2 புத்தகங்கள்
ஏ.கே. -2 புத்தகங்கள்
பினாத்தல் சுரேஷ் - 3 புத்தகங்கள்
அன்புடன் அருணா - 2 புத்தகங்கள்
கல்யாணி - 1 புத்தகம்
சண்முகம் - 3 புத்தகங்கள்
குமார் - 2 புத்தகங்கள்
கே.பி.ஜனார்த்தனன் - 2 புத்தகங்கள்
தட்ஸ்கூல் சுரேஷ் - 2 புத்தகங்கள்
அம்பி - 1 புத்தகம்
பத்மநாபன் - 1 புத்தகம்
மொத்தம் - 54 புத்தகங்கள்.

ஆக, மொத்தம் 70 புத்தகங்கள்.

தவிர, ‘புதுமொழி 500 புத்தகமும் தயாராகி வந்துவிட்டது.

ஏற்கெனவே ஜனவரி 29 பதிவில் நான் சொல்லியிருந்தபடி கிருபாநந்தினி, ரோஸ்விக், பின்னோக்கி மூவருக்கும் ‘புதுமொழி 500’ புத்தகத்தை தலா ஒரு பிரதி அனுப்பி வைக்கிறேன்.

இந்த அத்தனைப் புத்தகங்களும் இந்த வார இறுதிக்குள்ளாக தபால் மூலம் அவரவர்களின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

முக்கியக் குறிப்புகள்:

1. ‘ரசிகன்’ போட்டியில் கலந்துகொண்டு பின்னூட்டம் அனுப்பிய பலரிடமிருந்து (சுமார் 20 பேர்) அஞ்சல் முகவரிகள் எனக்கு வந்து சேரவில்லை. என் இ-மெயிலுக்குத் தங்கள் முகவரிகளை அனுப்பி வைக்காதவர்கள் இப்போதேனும் உடனடியாக அனுப்பி வைத்தால், கையோடு அத்தனை பேருக்கும் ஒட்டு மொத்தமாக பரிசுப் புத்தகங்களை தபாலில் அனுப்பி வைக்க எனக்கு எளிதாக இருக்கும். என்னுடைய நெருக்கடியான வேலைகளுக்கு நடுவே, புத்தகங்களை தபாலில் தனித்தனி செட்டாக அனுப்புவது என்பது எனக்குக் கொஞ்சம் சிரமமானது.

புத்தகப் பரிசு பெற்றவர்கள் வெளிநாடுகளில் வசிப்பவராக இருந்தால், சிரமம் பாராது தங்களின் இந்திய முகவரியை அனுப்பினால் உதவியாக இருக்கும்.

2. இங்கே கொடுத்திருக்கும் விகடன் பிரசுர புத்தகங்களின் (புதுமொழி 500 தவிர) படங்கள் சும்மா லே-அவுட்டுக்குதான்! இதே புத்தகங்களைத்தான் அனுப்பி வைக்கப்போகிறேன் என்று யாரும் எடுத்துக்கொள்ள வேண்டாம். இந்தப் புத்தகங்களாகவும் இருக்கலாம்; அல்லது, வேறு ஏதாவது புத்தகமாகவும் இருக்கலாம். விகடன் பிரசுரத்தில் தயாராக என்னென்ன புத்தகங்கள் உள்ளன என்பதைப் பொறுத்தே அவற்றை என்னால் அனுப்ப இயலும்.

3. எம்.எஸ்.குமரவேல் மாணிக்கம் என்பவர் தமது முகவரியை அனுப்பி வைத்துள்ளார். ஆனால், ‘ரசிகன்’ போட்டிக்கான பதிலை அவர் பின்னூட்டம் மூலம் அனுப்பி வைக்கவில்லை. எனவே, அவர் இது குறித்து விளக்கமாக எனக்கு பதில் எழுதினால் நல்லது.

4. ‘ரசிகன்’ போட்டியை முழுக்க முழுக்க என் ஆர்வத்துக்காகவும், என் வலைப்பூ நேயர்களுக்காகவும் மட்டுமே நடத்தினேன். இதில் கலந்துகொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு என் சொந்தச் செலவில் புத்தகம் அனுப்புவதாகக் குறிப்பிட்டிருந்தேன். எனினும், இந்த வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வரும் ‘ரசிகன்’ தொடரின் இயக்குநர் மணிவண்ணன் இதில் தனது பங்களிப்பும்கூட இருக்கவேண்டும் என்று விரும்பினார். அவரையோ, நிகழ்ச்சித் தயாரிப்பாளர் விஜயகுமாரையோ கலந்துகொண்டு நான் இந்தப் போட்டியை அறிவிக்கவில்லை என்பதால், இதற்கான செலவு முழுவதையும் நானே ஏற்பதுதான் தார்மிக ரீதியில் நியாயமானது என்று சொல்லியும், இதில் தங்களின் பங்கும் இருக்கவேண்டும் என்று மிகவும் வற்புறுத்தினார். ஓர் அளவுக்கு மேல் மறுப்பது அவரது அன்பையும் ஆர்வத்தையும் அலட்சியப்படுத்துவதாகிவிடுமோ என்ற அச்சத்தால் ஒப்புக்கொண்டு இருக்கிறேன். இது பற்றிய விவரங்களைப் பின்னர் தெரிவிக்கிறேன்.

5. ‘மாதத்துக்கு ஒன்று என்ற அளவில் இந்த ஆண்டு முழுக்கக் குறைந்தபட்சம் 15 புத்தகங்களையாவது பரிசளிக்க எண்ணியுள்ளேன்’ என்று எனது முந்தைய பிரிவில் குறிப்பிட்டிருந்தேன். ‘ரசிகன்’ போட்டிக்கு மட்டுமே நான் பரிசளித்திருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை 70. (தபால் செலவு உள்பட இதற்கான மொத்தச் செலவு ரூ.3,500-ஐத் தொடும் என நினைக்கிறேன்.) எனவே... இனி போட்டிகள் எதுவும் கிடையாது என்று எண்ணிக்கொள்ள வேண்டாம். கண்டிப்பாக போட்டிகளும் அறிவிக்கப்படும்; புத்தகப் பரிசுகளும் வழங்கப்படும். குறிப்பாக, என் வலைப்பூக்கள் இரண்டையும் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு!


***

வாக்குறுதிகள் குழந்தைகளைப் போன்றவை. உருவாக்குவது சந்தோஷமானது; வெளியிடுவது சிக்கலானது; காப்பாற்றுவது கடினமானது!