இசைஞானச் சித்தர் டி.எம்.எஸ்!

(மார்ச் 24, 2011‍-ல் டி.எம்.எஸ். தம்பதியிடம் ஆசி பெற்றபோது...)

மார்ச் 24.

என் அபிமான பாடகர் திரு.டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களின் பிறந்த நாள்.

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் குரலைக் கேட்டு வளர்ந்திருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஆன்மிகச் செம்மல் திரு. பி.என்.பரசுராமன் அவர்களின் துணையோடு சென்று அவரை நேரில் சந்தித்து, அவரின் அன்புக்குப் பாத்திரமாகி, அவரோடு பேசிப் பழகும் பேறு பெற்றேன். டி.எம்.எஸ். அவர்களின் இல்லத்தில் எனக்குக் கிடைத்த இனிய நண்பர் இயக்குநர் விஜய்ராஜ். 'இமயத்துடன்' என்னும் தலைப்பில், டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றை மெகா சீரியலாக எடுத்திருப்பவர்.

டி.எம்.எஸ்ஸோடு பழகத் தொடங்கிய பின்னர், பலமுறை அவரது இல்லம் சென்றிருக்கிறேன். குறிப்பாக, அவரது ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரது இல்லத்துக்குச் சென்று, அவரைச் சந்தித்து, ஆசி பெறுவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.

இந்த இடத்தில் எனக்கு நானே ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்கிறேன். என் தாய், தந்தையின் பிறந்த நாட்களில் அவர்களின் கால்களில் விழுந்து வணங்கியிருக்கிறேனா? ஆசி பெற்றிருக்கிறேனா?

இல்லை. அவர்கள் வேறு, நான் வேறு இல்லை. அப்படி அவர்களை விழுந்து வணங்குவது ஒரு நாடகம் மாதிரி எனக்குப் படுகிறது. செயற்கைத்தனமாகத் தோன்றுகிறது. அதே மாதிரிதான் என் குழந்தைகளும் என் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. சொல்லப்போனால், அது கொஞ்சம் அருவருப்பாகக்கூட இருக்கிறது. திருமணச் சடங்கின்போது, சம்பிரதாயப்படி என் காலில் விழுந்து வணங்கினாள் என் மனைவி. அப்போதே உறுத்தலாக இருந்தது எனக்கு. இருந்தாலும் சூழ்நிலைக்கைதியாகி, பேசாமல் இருந்தேன். அதன்பின், இன்றுவரை சடங்கு, சம்பிரதாயம் என எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மனைவியோ, குழந்தைகளோ, தங்கைகளின் குழந்தைகளோ என் காலில் விழ அனுமதித்தது இல்லை.

ஆனால் சாவி, டி.எம்.எஸ். போன்று நான் மதிக்கும் ஒரு சில பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றிருக்கிறேன்.

அப்படித்தான் இந்த மார்ச் 24 அன்றும் திரு.டி.எம்.எஸ். அவர்களை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து, கால்களில் விழுந்து வணங்கி ஆசி பெற்றேன்.

டி.எம்.எஸ்ஸுக்கு வயது 89 என்றால் நம்பவே முடியவில்லை. அத்தனைத் துடிப்பாக, சுறுசுறுப்பாக இருந்தார்.

நான் சென்றதும், "ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் வருகிறது... வாங்க, வாங்க!" என்று புன்னகையோடு வரவேற்றார். ஆனந்த விகடன் பத்திரிகையைச் சேர்ந்தவன் என்பதைத்தான் அப்படிக் குறிப்பிட்டார்.

"சார்! நான் இப்போது ஆனந்தவிகடனில் இல்லை; சக்தி விகடனைத்தான் பார்த்துக்கறேன்!" என்றேன்.

"சரிதான்! ஆனந்தம் இருந்தா சக்தி தன்னால வரும்; சக்தி இருந்தா ஆனந்தம் தன்னால வரும்!" என்று சொல்லிச் சிரித்தார்.

சுற்றியிருந்தவர்களிடம், "இவர் எழுத்துல ஜீவன் இருக்கு. சத்தியம் இருக்கு. ஆன்மா இருக்கு. இவர் ஒண்ணு எழுதினா அது சரியாத்தான் இருக்கும்னு மத்தவங்க நம்பிக்கை வைக்கிற அளவுக்கு ஓர் அழுத்தம் இருக்கு" என்று என்னைப் பற்றிச் சிலாகித்துச் சொன்னார்.

தனது அடுத்த பிறந்தநாளின்போது, அதாவது 90-வது வயதில் சித்தராகிவிடப் போகிறாராம். 'இசைஞானச் சித்தர்' என்றுதான் உலகம் தன்னை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தான் விரும்புவதாகச் சொன்னார். அவருடைய மூத்த உறவினர் ஒருவர் அப்படித்தான் பழநியில் சித்தராகிவிட்ட கதையைச் சொன்னார்.

அந்த உறவினர் ஒருநாள் மற்றவர்களை அழைத்து, குறிப்பிட்ட‌ தேதியில் தான் உடலைத் துறக்க எண்ணியுள்ளதாகவும், அதற்கு முன்னதாக பழநியில் ஓர் இடம் வாங்கி, அங்கே சதுர வடிவில் ஒரு பள்ளம் வெட்டி, அதனுள் சலவைக் கற்கள் பதித்து, தான் உடலைத் துறந்ததும், தனது உடம்பை அதில் மெதுவாக இறக்கி வைத்து, வில்வம், மிளகு, விபூதி ஆகியவற்றைக் கொண்டு தனது கழுத்து வரையிலும் அந்த பள்ளத்தை நிரப்பி, பின்பு சிறிய தடியால் குத்திக் குத்தி அந்த விபூதிக் கலவையை இறுக்கமாகக் கெட்டித்து, தலைக்கு மேலே கூம்பு வடிவில் ஒரு அமைப்பு செய்து, அதன் வழியாக தன் முகத்தை இந்த உலகம் காணும்படியாக அதிஷ்டானம் போன்று ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம்.

அந்த உறவினர் ஒருநாள் தியானத்தில் அமர்ந்தவர், அப்படியே பேச்சு மூச்சற்றுப் போனார். நாள்கணக்காக எழுந்திருக்கவே இல்லை. உடம்பில் சலனம் சிறிதுகூட இல்லை. சுவாசமோ, இதயத் துடிப்போ இல்லை. ஆனால், உடம்பு சரிந்து விழவும் இல்லை. சூடு மட்டும் இருந்தது. மருத்துவர் வந்து பார்த்து, அவர் உடம்பில் ஊசியால் குத்தியபோது, சிவப்பு மொட்டாக ரத்தம் வெளிப்பட்டது. 'இது ஓர் அபூர்வம்! ஆச்சரியம்! மிராக்கிள்!' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம் அவர்.

இரண்டு மூன்று நாள் ஆகியும் உறவினர் உட்கார்ந்த மாதிரியே நிரந்தர உறக்கத்தில் ஆழ்ந்துபோனதால், வேறு வழியின்றி அவரது கடைசி ஆசையை நிறைவேற்றி வைத்தார்களாம்.

"அவரைப் போலவே நானும் சித்தராகிவிடுவேன். நாளைக்கு உலகம் என்னை நல்லதொரு பாடகன் இருந்தான் என்று நினைவில் கொள்ளாது. இசை ஞானச் சித்தர் டி.எம்.எஸ் என்றுதான் நினைவில் கொள்ளும். என் சமாதிக்கு வந்து என்னை வணங்கும். அவர்களுக்கு எல்லா நலன்களும் கிடைக்கவேண்டும், அவ‌ர்கள் எந்தவிதக் குறையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று என் ஆன்மா பிரார்த்திக்கும். அந்தப் பிரார்த்தனை பலிக்கும்!" என்று என்னென்னவோ சொன்னார்.

அதெல்லாம் சாத்தியமா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், நான் சோர்ந்திருந்த காலங்களில் என்னை உற்சாகப்படுத்தியதும், துயருற்றிருந்த சமயங்களில் ஆறுதல்படுத்தியதும், மகிழ்ச்சியாக இருந்த தருணங்களில் என் சந்தோஷத்தை அதிகப்படுத்தியதும், குழப்பத்தில் இருந்த நேரங்களில் தெளிவைக் கொடுத்ததும், பயத்தில் மூழ்கியிருந்த பொழுதுகளில் தைரியம் ஊட்டியதும், தன்னிரக்கம் நிறைந்திருந்த‌ வேளைகளில் தன்னம்பிக்கை ஏற்படுத்தியதும் டி.எம்.எஸ்ஸின் கம்பீரக் குரல்தான் என்று நிச்சய‌மாகச் சொல்வேன்.

***

உண்டென்றால் அது உண்டு; இல்லையென்றால் அது இல்லை!