மகஸேஸே மாமனிதர் ஹரீஷ் ஹண்டே

ரீஷ் ஹண்டே. இந்த ஆண்டு மகஸேஸே விருது பெற்றவர். இரண்டு மூன்று தினங்களுக்கு முன்னால் ‘தி ஹிண்டு’வில் இந்தச் செய்தியைப் பார்த்ததும், அவரைப் பற்றி எழுதத் தோன்றியது.

பெ
ங்களூரில் பிறந்து, ரூர்கேலாவில் வளர்ந்தவர் ஹரீஷ் ஹண்டே.

பல்கலைக்கழகத்தில் ஹரீஷின் ஆலோசகராக இருந்தவர் ஜோஸ் மார்ட்டின். ஹரீஷ் எம்.எஸ். படிப்பில் சேர்ந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகியிருந்த நிலையில், ஒரு நாள் அவர் ஹரீஷை அழைத்து, டொமினிகன் குடியரசுக்கு (ஹிஸ்பானியோலா தீவில் இருக்கும் ஒரு நாடு அது) அனுப்பி வைத்தார். மக்கள் தங்கள் வீடுகளில் சூரிய சக்தியைக் கொண்டு எப்படி வெளிச்சம் பெறுகிறார்கள் என்பதை அங்கேதான் ஹரீஷ் முதன்முறையாகப் பார்த்துத் தெரிந்து கொண்டார்.

பின்னர் ஹரீஷ், இலங்கையில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஒரு நண்பரைத் தொடர்புகொண்டு, அங்கே தான் வசிக்க ஏதாவது இடம் பார்த்துத் தரமுடியுமா என்று கேட்டார். ஆனால், அந்த அனுபவம் கடுமையானதாக இருந்தது. மொழிப் பிரச்னை, விடுதலைப் புலிகள் பிரச்னை மற்றும் கிராமப்புறங்களுக்கே உரிய வழக்கமான பிரச்னைகள் எல்லாம் இருந்தன. இலங்கையில் பல்லைக் கடித்துக்கொண்டு 6 மாத காலம் கழித்த பின்பு, இந்தியாவுக்கு வந்தார் ஹரீஷ். கர்நாடகாவில் ஒரு கிராமத்தில் குடியேறினார். கிராமவாசிகளின் வெளிச்சத் தேவைகள் என்னென்ன, அதற்கு அவர்கள் எவ்வளவு தொகை செலவழிக்கத் தயாராக இருப்பார்கள் என்பன போன்ற விஷயங்களை நேரடி அனுபவத்தில் கண்டறிந்தார்.

1994-ல், வாஷிங்டன் டிசி-க்குச் ஹரீஷ். அங்கே அவர் நெவில் வில்லியம்ஸ் என்பவரைச் சந்தித்தார். லாப நோக்கமற்ற ‘செல்ஃப்’ என்கிற நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் நெவில். ‘‘சூரிய சக்தி விளக்குத் திட்டத்தை இந்தியாவில் அமல்படுத்த உங்களுக்கு விருப்பம் உள்ளதா ஹரீஷ்?’’ என்று பேச்சுவாக்கில் கேட்டார் நெவில்.

‘‘ஆமாம். நிச்சயமாக!’’ என்றார் ஹரீஷ். கூடவே, ‘‘நாமே சொந்தமாக ஒரு நிறுவனம் தொடங்கலாம்’’ என்ற யோசனையை முன்வைத்தார். அப்படித்தான்
1994-ல், ‘செல்கோ’ நிறுவனம் உதயமாகியது. ‘எடிசன் எலெக்ட்ரிக் லைட் கம்பெனி’ என்கிற நிறுவனத்தின் பெயரிலிருந்து உருவான பெயர் அது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, ஹரீஷ் தன்னுடைய சொந்தச் சேமிப்பைக் கொண்டே எப்படியோ சிரமப்பட்டு அதை நடத்தினார்.

கணிசமாக ஒரு 4 லட்ச ரூபாயைப் பெறுவதற்கு ஓராண்டு ஆகியது. 1995-ல், முறைப்படி பதிவு செய்யப்பட்டது ‘செல்கோ’. அந்த நிறுவனம் எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிக்கவில்லை. சூரியத் தகடு என்பது எப்போதும் உள்ளதுதான். அதாவது, கூரைமீது பொருத்தக்கூடிய ஒரு தகட்டின் மூலம் தினமும் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு, ஒளி வழங்கும். இந்தியாவில், ஒரு சில நிறுவனங்கள் சூரியத் தகடுகளைத் தயாரிக்கின்றன. செல்கோ அந்தத் தொழில்நுட்பத்தைச் சற்றே மேம்படுத்தித் தந்தது. அவ்வளவே!

கர்நாடகா- கேரளா எல்லையில் உள்ள முல்லேரி என்கிற கிராமத்தில் செல்கோவின் முதல் சோலார் அமைப்பு நிறுவப்பட்டது. முதல் ஆண்டில் கிட்டத்தட்ட 150 சூரிய ஒளி அமைப்புகளை நிறுவினார் ஹரீஷ். எல்லாமே, அவர் தன் சொந்தக் கைகளால் நிறுவியவையே! யாரையேனும் சம்பளத்துக்கு வேலைக்கு எடுத்துக் கொள்ளலாமென்றால், ஹரீஷிடம் அதற்கான பணம் இல்லை. ஆனால், இதையெல்லாம் தான் ஒருவராகவே செய்து முடித்தது, ஒரு விதத்தில் தனக்குப் பெரிய அனுகூலமாகத்தான் இருந்தது என்கிறார் ஹரீஷ். உதாரணமாக, நான்கு அறைகள் கொண்ட ஒரு வீட்டில் ஒரு சோலார் அமைப்பைப் பொருத்துவதற்குச் சரியாக எத்தனை மணி நேரமாகும் என்று அவருக்குத் தெரியும். இப்படியான விஷயங்களில் அவரை யாராலும் ஏமாற்ற முடியாதல்லவா?

1996-ன் துவக்கத்தில், முதன்முதலாக ஒருவர் செல்கோவில் வேலைக்குச் சேர்ந்தார். அந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இருவர் சேர்ந்தார்கள். ஸ்ரீதர் ராவ், குருபிரகாஷ் மற்றும் உமேஷ் என அந்த மூவரும் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளவும், எந்தத் தியாகத்துக்கும் தயாராக இருந்தார்கள். இல்லை என்றால், யாருக்குமே தெரிந்திராத, சொற்பத் தொகை ஒன்றைச் சம்பளமாக வழங்கும் இந்தச் சிறு நிறுவனத்துக்காக, தாங்கள் பார்த்து வந்த வேலைகளை அவர்கள் கைவிடுவார்களா? இன்றைக்கு, 170 பேர் செல்கோவில் பணிபுரிகிறார்கள்.

செல்கோ தனது பயனாளிகளின் வட்டத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், ஒரு விஷயம் தெளிவானது. சூரிய சக்தி விளக்குகள் என்பது, அவற்றை முழுமையாகவும் அதிகமாகவும் பயன்படுத்துபவர்களின் கைக்குச் சிக்காமல் எட்டத்திலேயே இருந்தது என்பதுதான் அது. காரணம், அவற்றை வாங்குவதற்கு வசதியின்மை.

‘‘உங்களால் ஏதும் நிதி வழங்க முடியுமா?’’ என்று பலர் கேட்டார்கள்.
செல்கோவிடம் முதலீடும் இல்லை; கடனுதவி வழங்குவதில் நிபுணத்துவமும் இல்லை. எனவே, இது சம்பந்தமாக வங்கி மேலாளர்களை அணுகினார் ஹரீஷ். அவர்கள் இதில் எந்தவித ஆர்வத்தையும் காட்டவில்லை. ‘‘வீடுகளுக்கான சூரிய விளக்குகள் வருமானத்தை ஈட்டாது. அது விவசாய நிதி இல்லை; எனவே, எங்களால் இதற்கு நிதி உதவி அளிக்க முடியாது!’’ என்று மறுத்துவிட்டார்கள். இருப்பினும், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல், தொடர்ந்து இரண்டு ஆண்டுக் காலம் வரை, விடாமல் அவர்களைப் போய்ச் சந்தித்துப் பேசிக்கொண்டும், நச்சரித்துக்கொண்டும் இருந்தார் ஹரீஷ். இறுதியில், அவர்களை ஒருவாறு சம்மதிக்க வைத்துவிட்டார்.

மண்டல கிராமப்புற வங்கிகள், ரூ.5000 முதல் ரூ.7000 வரை சம்பளம் பெறும் செல்கோ வாடிக்கையாளர்களுக்குக் கடனுதவி அளிக்கத் தொடங்கின. ஆனால், அது போதுமானதாக இல்லை. மாதம் ரூ.3000 அல்லது அதற்கும் குறைவாகச் சம்பாதிக்கும் மக்களுக்கும் ஹரீஷ் சூரிய ஒளி அமைப்புகளை விற்க விரும்பினார்.

உண்மையில், நம்மைவிட மின்சக்திக்காக ஏழை மக்கள்தான் அதிகப் பணம் செலவழிக்கிறார்கள். சராசரியாக, பெங்களூரில் ஒரு தெரு வியாபாரி, மண்ணெண்ணெய்க்காக ஒரு நாளைக்கு 15 ரூபாய் செலவிடுகிறார்.
அதாவது, ஒரு மாதத்துக்கு ரூ.450. இந்தப் பணத்தைக் கொண்டு, ஐந்தாண்டுக் காலத்துக்கு சூரிய வெப்பத்தால் 6 விளக்குகளை எரிக்கச் செய்யலாம்.

2010-ல், செல்கோ 12,500 அமைப்புகளை கர்நாடகாவின் கிராமப்புறப் பகுதிகளில் நிறுவியது. அதன் வாடிக்கையாளர்கள் மிகச் சாதாரண தினக்கூலி தொழிலாளர்கள்; சமூகத்திலும், பொருளாதாரத்திலும் மிகவும் கீழ்நிலையில் இருப்பவர்கள்.

15 ஆண்டுகளில், சுமார் 1,20,000 குடும்பங்களில் சூரிய விளக்கைக் கொண்டு வந்திருக்கிறது செல்கோ. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கான இலக்கு, 2 லட்சம் குடும்பங்களை நெருங்கவேண்டும் என்பதுதான். ஆனால், வெறுமே எண்ணிக்கை மட்டும் ஹரீஷின் குறிக்கோள் இல்லை. இப்போது, செல்கோவின் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 35% பேர், மாதம் ரூ.3000 முதல் ரூ.3500 வரை சம்பாதிப்பவர்கள்தான். 2012-ல், மாதம் ரூ.2000-க்கும் குறைவாகச் சம்பாதிக்கும் ஏழை மக்கள்தான் தனது பெரும்பான்மை வாடிக்கையாளர்களாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார் ஹரீஷ்.

2009-10-ல், ஆண்டு வருமானமாக ரூ.14.5 கோடி ஈட்டியது செல்கோ. 40 லட்சம் ரூபாய் லாபம் பெற்றது. இந்த லாபம் மேலும் புதிய மையங்களைத் திறக்கவும், தொழிலாளர்களுக்கான சம்பளங்களை உயர்த்தவுமே பயன்பட்டது.

எல்லாம் சரி; ஆனால், இந்த வெற்றிகரமான சூரிய அமைப்பை இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் ஏன் கொண்டு செல்லவில்லை?

‘‘நிச்சயமாக செல்கோவை நாங்கள் மேலும் வளர்க்கவே விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் இதைச் செய்வதற்குத் தகுதியான நபர் எங்களுக்குத் தேவை. அத்தகையவர் கிடைத்தால், அவருக்கு எங்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.’’

ஹரீஷின் மனைவி ரூபால். அவர் பாஸ்டனில் பணியாற்றுகிறார். ஹரீஷ்- ரூபால் தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பெயர் அதிஸ்ரீ. ஒவ்வொரு கோடையிலும் அவள் இந்தியாவுக்கு வருவாள். ஹரீஷுடன் கிராமங்களுக்குச் செல்வாள். தன் அப்பாவின் இதயம் தோய்ந்திருக்கும் உலகத்தின் அனுபவங்களைத் தானும் பெறுவாள்.

‘‘இந்த ஆண்டு, கர்நாடக மாநிலத்தில் 10-ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களில் முதன்மையான இடங்களில் வந்தது, எனது வாடிக்கையாளர்களில் ஒருவரின் மகள்தான்’’ என்று பூரிப்புடன் சொல்கிறார் ஹரீஷ். ரிசல்ட் வந்ததுமே, அவளின் பெற்றோர்கள் முதலில் தொலைபேசியில் தொடர்புகொண்டது ஹரீஷைத்தான்.

‘‘உங்களின் விளக்குகளால்தான், எங்கள் மகள் இரவிலும் படிக்க முடிந்தது’’ என்று நெகிழ்ச்சியில் தழுதழுத்தர்கள் அவர்கள்.

ஹரீஷ் ஹண்டேவுக்கு மகஸேஸே விருது கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லைதானே?

- ராஷ்மி பன்சால் எழுதிய 'I have a dream' என்னும் புத்தகத்திலிருந்து...

***
‘நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
நீ என்ன செய்தாய் அதற்கு என நினைத்தால் நன்மை உனக்கு!’ - கென்னடி

11 comments:

Chitra said...

Wow!!! நல்ல தகவல் தொகுப்புங்க....

Rekha raghavan said...

நல்ல முயற்சி. பகிர்ந்தமைக்கு பாராட்டுகள்.

CS. Mohan Kumar said...

அற்புதமான மனிதர் தான் ஹரீஷ் ஹண்டே. நல்ல பகிர்வு

Rathnavel Natarajan said...

உங்களின் விளக்குகளால்தான், எங்கள் மகள் இரவிலும் படிக்க முடிந்தது’’ என்று நெகிழ்ச்சியில் தழுதழுத்தர்கள் அவர்கள்.


வெற்றி இந்த வார்த்தைகளில் தான் அடங்கியிருக்கிறது.
வாழ்த்துக்கள்.

ungalrasigan.blogspot.com said...

* சித்ரா! தங்கள் பாராட்டு ராஷ்மி பன்சாலுக்கு!

* நன்றி ராகவன்!

* நன்றி மோகன் குமார்!

* நன்றி ரத்னவேல்! நீங்கள் ரசித்த வரிகள் உண்மையிலேயே நெகிழ வைப்பவை!

கிருபாநந்தினி said...

\\‘‘நிச்சயமாக செல்கோவை நாங்கள் மேலும் வளர்க்கவே விரும்புகிறோம். ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் இதைச் செய்வதற்குத் தகுதியான நபர் எங்களுக்குத் தேவை. அத்தகையவர் கிடைத்தால், அவருக்கு எங்கள் ஆதரவு கண்டிப்பாக இருக்கும்.’’\\ புரியலீங்க சார்! அது என்ன அத்தனை பிரமாதமான வேலையா, தகுதியான நபர் கிடைக்காம போறதுக்கு? மற்றபடி, ஹரீஷின் சூரிய சக்தி விளக்குகள் ஒரு நல்ல முயற்சி! அதுவும் சூரியன் சுட்டெரிக்கும் இந்தியா போன்ற தேசங்களில் இதை இன்னும் அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால், மின் தட்டுப்பாட்டுப் பிரச்னை ஓரளவு குறையும் என நம்பலாம்!

jallipatti said...

"saavi" innum innum ninaiththu paarththaal inikkum arputham.maalan,"amarar" subramaniyaraaju,balakumaran,entru
oru arputhamaana team. kovai mavttathil saaviyai kodadiya kaalam athu.eluththaalnukku viyaparam varathu.enpatharku saavi or uthaaranam. nirka. unkal blog mika nantraaka irukkirathu. vaadakai veettu anupavaththai suvaiyaaka kuri ullerkal. vallikkannan ithu poalthaan eluthuvaar. saavium ippatiththaan.
niraya eluthunkal.vaalththukkal.
by.jallipatti palanisami.pasumaivikatan.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

இதோ இன்னொரு நாராயண மூர்த்தி உருவாகி விட்டார்..!

BalHanuman said...

இந்த மகத்தான வெற்றியைச் செய்து காட்டிய ஹரிஷ் ஹண்டேக்கு 20க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா தேர்ந்தெடுத்துச் சந்தித்த 20 பேர்களில் இவரும் ஒருவர்.

ungalrasigan.blogspot.com said...

சித்ரா, ரேகா ராகவன், மோகன் குமார், ரத்னவேல், கிருபாநந்தினி, ஜல்லிப்பட்டி, ஆரண்யநிவாஸ் ஆர்.ராமமூர்த்தி, பால ஹனுமான் ஆகிய அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

வேலைச் சுமை காரணமாக பதிவுலகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்க முடியவில்லை. எனக்கே கஷ்டமாகத்தான் இருக்கிறது. பதிவு போடாத இந்தக் காலத்தில் புதிதாக 6 பேர் பின்தொடர்பவராகச் சேர்ந்திருக்கிறார்கள். ஏதோ எழுதுவேன் என்றுதானே இவர்கள் என்னை ஃபாலோ செய்கிறார்கள். இப்படி எழுதாமல் இருப்பது அவர்களை ஏமாற்றுவதாகாதா என்று எனக்கே குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.

இனி, எப்படியும் வாரம் ஒருமுறையாகிலும் பதிவிட முயலுகிறேன்.

நன்றி!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

என்ன ஸார்..அக்டோபர் இரண்டிலிருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறேன்..ஹூம்..
அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.